வெள்ளி, 16 டிசம்பர், 2011

மதுவுக்கு வக்காலத்து வாங்குவது மத்திய மந்திரிக்கு அழகா?

மிழகத்தின் கஜானாவை நிறைக்கும் அமுதசுரபியாக மது விற்பனை திகழ்ந்து வருகிறது. கடந்த 2010 -2011 ஆம் ஆண்டில் ரூ.14,965 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகியிருக்கிறது. இப்போது ருசி கண்ட பூனையாக மது விற்பனையில் புதிய பரிமாணத்தை எட்டவுள்ளது தமிழக அரசு. கடந்த 23.8.11 அன்று தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 800 டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு ஆணை பிறப்பித்தது. அவற்றில் 200 கடைகள், உயர்தர மதுக்களைக் கொண்ட 'எலைட்' மதுக்கடைகளாகும். இவை மிகப்பெரிய வர்த்தக கட்டிடங்களில் மட்டும் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 6 எலைட் கடைகள் வருகின்றன. இந்த எலைட் மதுக்கடை திறப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.ஞானசேகரன் எனபவர் பொதுநலன் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அதில் மதுவின் தீமைகளை பட்டியலிட்டுள்ள அவர், எலைட் கடை திறப்பது அப்பட்டமான அரசியல் சாசன சட்ட மீறலாகும். எனவே அந்த கடைகளை திறப்பதற்கு தடை விதித்து, அதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பொதுவாகவே பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற குரல் வலிமையாக இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் வலுவாகவே ஒலித்தாலும், எந்த கட்சி ஆட்சியிலும் இக்குரல் அவர்களின் காதுகளை சென்றடைவதில்லை; திறந்த மதுக்கடையை பூட்ட முடியவில்லை என்ற நிலையிருக்க, ஒரு பொறுப்பான மத்திய அமைச்சர் ஒருவர் பூட்டப்பட்ட மதுக்கடைகளை திறக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார். அதிலும் இவர் முஸ்லிம் என்பது மற்றொரு வேதனைக்குரிய கூடுதல் தகவல். அவர் வேறு யாருமல்ல. மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா தான்.
 
காஷ்மீரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ''காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திரை அரங்குகள்,  மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும். அண்டை நாடான பாகிஸ்தானில் திரை அரங்குகள் மற்றும் மதுபானக் கடைகள் உள்ளன. நமது வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளன அவற்றில் சிடிக்கள் போட்டு படம் பார்க்கும்போது  திரையரங்குகளில் போய் படம் பார்ப்பதில் என்ன தவறு? திரையரங்குகள்  மதுபானக் கடைகள் திறப்பதால் காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் நமது சுற்றுலாத்துறை நல்ல வளர்ச்சி அடையும். அரசுக்கும் அதிகப்படியான வருமானம் கிடைக்கும். இப்போது காலம் மாறிவருகிறது அதற்கு ஏற்றார் போல காஷ்மீர் மக்களாகிய நாமும் மாற வேண்டும்'' என்று பேசியுள்ளார்.
 
இவரைப் போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அரசு வருமானத்திற்காக இதுமட்டுமல்ல. 'எதையும்' செய்யத் துணிவார்கள் என்பது தான் உண்மை. மக்களை கெடுத்து மக்களாட்சி[!]  நடத்த நினைக்கும் இவரைப் போன்ற அரசியல்வாதிகளை  அதிகாரத்தில் வைத்திருக்கும் இந்திய மக்களாகிய நாம், வல்லரசுக் கனவு காண்கிறோம். எங்கே போய் முட்டிக் கொள்வது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக