புதன், 6 ஏப்ரல், 2011

வினையை கண்டுகொள்ளாமல் எதிர்வினையை பரபரப்பாக்கும் ஊடகங்கள்!

ப்கானிஸ்தானில் வன்முறைக்கு  ஐநா தலைமையகத்தின் ஊழியர்கள் 10 பேர் பலி என்ற செய்தி ஊடகங்களில் சில  நாட்களுக்கு முன்  பரபரப்பாக வெளியானதை நாம் அறிந்திருப்போம். இந்த செய்தியை வெளியிடும் போதுதான் சம்மந்தப்பட்ட வன்முறை எதனால்  ஏற்பட்டது என்ற தகவலையும் ஊடகங்கள் வெளியிட்டன. அதாவது அமெரிக்காவில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவு வன்முறை வெடித்து  பத்துப்பேர் கொலையில் முடிந்தது என்ற தகவலை தருகிறது ஊடகம். அமெரிக்காவில் புளோரிடா சர்ச்சின் பாதிரியார் முஸ்லிம்களின் புனித வேதமான  திருக்குர்ஆனை கடந்த 20 -03 -11 அன்று தீவைத்து எரித்து தனது இஸ்லாமிய விரோதத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தியை பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.
 
ஆனால் தங்களின் புனித வேதம் எரிக்கப்பட்டதை கண்டித்து ஆப்கானிஸ்தானில் உள்ள ஐநா தூதரகம் முன்பாக முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கனோர் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வன்முறை தலைதூக்கி  ஐ.நா ஊழியர்கள் பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த செய்தியை பரபரப்பாக வெளியிடுகின்றன ஊடகங்கள். இதே பரபரப்பை திருக்குர்ஆன் எரிக்கப்பட்ட செய்தியை வெளிடுவதில் காட்டவில்லை ஊடகங்கள்.  இஸ்லாமியர்களுக்கு ஒரு இழப்பு என்றால் அதை மூடி மறைப்பதும், ஒரு இழப்பை ஏற்படுத்துபவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் அதை பரபரப்பாக்குவதுதான் பத்திரிக்கை தர்மம் போலும்.
 
அதே நேரத்தில் ஆப்கானில் கொல்லப்பட்ட பத்துபேர் கொலை கண்டிக்கத் தக்கதே! எங்கோ ஒரு மூடன் செய்த காரியத்திற்காக சம்மந்தமில்லாத அப்பாவிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்காது. அதே  நேரத்தில் இந்த எதிர்வினைக்கு தூண்டுகோல் குர்ஆனை எரித்த அந்த அமெரிக்கக் பாதிரியார் தான்  என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது.
 
முஸ்லிம்களின் புனித நூலோடு விளையாடி, முஸ்லிம்களை மனதளவில் காயப்படுத்துவதை அமெரிக்கர்கள் சிலர் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு  முன்னால்  குவாண்டனாமோ சிறைச்சாலையில் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் புனித குர்ஆனை கழிவறையில் வீசி இழிவு படுத்தினார். கடந்த செப்டம்பர் 11 அன்று திருக்குர்ஆனை எரிக்கப்போவதாக அறிவித்தார் இதே பாதிரியார். உலகெங்கிலும் கிளம்பிய எதிர்ப்பையடுத்து  தந்து முடிவை கைவிட்ட இந்த பாதிரியார், மீண்டும் திருக்குர்ஆனை எரித்துள்ளார். பாதிரியாரின் இந்த அயோக்கியத்தனத்தை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் வேதநூலோடு விளையாடுவதன் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டி பார்ப்பவர்களை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். இல்லையேல் அமெரிக்கா முஸ்லிம்விரோத நாடு என்ற முத்திரை நிலைப் பெற்றுவிடும். அது அமெரிக்காவுக்கு நல்லதல்ல.
 
மேலும் கடந்த செப்டம்பர் 11 அன்று திருக்குர்ஆனை எரிக்கப்போவதாக இதே பாதிரியார் அறிவித்தபோது பொங்கி எழுந்த அரபு நாடுகளும், முஸ்லிம் உலகமும் [ஆப்கான்-வங்கதேசம் நீங்கலாக] இப்போது திருக்குர்ஆன் எரிக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய அளவில் அலட்டிக்கொல்லாதது ஆச்சர்யமளிக்கிறது. அதோடு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களும் இக்குர்ஆன் எரிப்பை கண்டுகொள்ளவில்லை. 'தேர்தல் நேரம்; 'நோ' இஸ்லாம்...????
 
-முகவைஅப்பாஸ்.
இந்திய தவ்ஹீத்ஜமாஅத்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக