வியாழன், 28 ஏப்ரல், 2011

ஒரு வழக்கு; மூன்று தீர்ப்புகள்!

ரு வழக்கில் கீழ் கோர்ட்டு தண்டனை வழங்க, அத்தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய, அதே வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் தண்டனை வழங்க இவ்வாறான சுழற்சிமுறை நீதிமன்ற குழப்பங்கள் நிறையபேருக்கு புரியாத  நிலையில், இப்போது அதுபோன்றதொரு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
 
1996ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட நாவரசு கொலை வழக்கில்,  நாவரசுவை அதே மருத்துவக் கல்லூரியில் படித்த  இரண்டாம் ஆண்டு மாணவர் ஜான் டேவிட் ஜான் டேவிட் கொலையாளியாக கைது செய்யப்பட்டார். ஜான் டேவிட் மீது 1997ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி, கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சிங்காரவேலு முன்னிலையில் நடந்த இந்த வழக்கில், 78 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 120 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.வழக்கை விசாரித்த நீதிபதி சிங்காரவேலு, 1998, மார்ச் 11ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில்,
 
ராகிங் காரணமாக நாவரசுவை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், கொலை செய்த தடயங்களை மறைத்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டைன என, ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அதைத் தொடர்ந்து ஜான் டேவிட், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கடலூர் செசன்ஸ் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜான் டேவிட், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால், ஜான் டேவிட்டை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
 
உலகமே அச்சுறும் வகையில் நடந்த கொடூர கொலை வழக்கில் கைதான ஜான் டேவிட்டிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஐகோர்ட் ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு, டில்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசுவை கொடூரமான முறையில் கொன்ற, அவரது சீனியர் மாணவர் ஜான் டேவிட்டிற்கு, கடலூர் செஷன்ஸ் கோர்ட் விதித்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானதே' என, தீர்ப்பளித்தது. அதோடு இந்த வழக்கை ஐகோர்ட் கையாண்ட விதம் சரியில்லை. சாட்சியங்கள் எல்லாம் திசை திருப்பப்பட்டுள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் கொலை நடந்து 15 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் ஜான் டேவிட்டிற்கு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜான் டேவிட் எங்கிருக்கிறார் என்று இனிமேல்தான் தேடவேண்டும் என்று காவல்துறை கலங்கியிருந்த நிலையில், அவரே முன் வந்து சரணடைந்ததில் காவல்துறை நிம்மதி பெருமூச்சு விடுகிறது. 

என்றாலும், ஒரு வழக்கில் ஒரே மாதிரி சட்டம் பயின்ற நீதிபதிகளிடம் ஏன் இந்த தடுமாற்றம் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. செஷன்ஸ் கோர்ட் வழங்கும் தீர்ப்புகள் பெரும்பாலும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவதின் காரணமும் மக்களுக்கு விளங்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நீதி  வேண்டுமானால் டெல்லி சென்று உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டினாலே சாத்தியம் என்ற மனநிலைதான் மக்களுக்கு ஏற்படும். எனவே நீதி வழங்கும் நீதிமான்கள், வழக்கின் தன்மைகளை அறிந்து குவிந்து கிடக்கும் வழக்குகளையும் கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட்டால் பெரும்பாலான வழக்குகள் உச்சநீதமன்றத்தின் படியை தொடாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக