வியாழன், 28 ஏப்ரல், 2011

போலி விமானிகள்; காணாமல் போகும் கோப்புகள்; உயிரோடு விளையாடும் விபரீதம்!

போலி டாக்டர்கள் கைது, போலி வருமானவரி அதிகாரி கைது, போலி போலீஸ் கைது என்று எங்கும் போலி எதிலும் போலி என்ற பட்டியலில் இப்போது போலி விமானிகள் கைது என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சாலை விபத்துகளில் பெரும்பான்மையான விபத்துகள்  போலி ஓட்டுனர் உரிமம்  பெற்ற ஒட்டுனர்களால்தான் என்று ஆய்வுகள் சொல்லி வரும் நிலையில், தரை இறங்கினாலே உயிர் நிச்சயம் என்ற அளவில் மேற்கொள்ளும் விமானப் பயணத்தில் விமானியே போலியாக இருந்தால் என்னாவது..?
 
போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து பைலட் உரிமம் பெற்ற வழக்கில் டில்லி  போலீசார்  கைது செய்யப்பட்ட விமானிகளின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட போலி விமானிகள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சிவில் விமானப்போக்குவரத்து இயக்குனரக ஊழியர்கள் இருவர்  லட்சக்கணக்கில் ரூபாய் பெற்றுக் கொண்டு போலி மதிப்பெண் பட்டியல் மூலம் விமான ஓட்டுநர் உரிமம் பெற உதவியதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். 7 விமானிகள் தவிர போலி பைட் உரிமம் பெற உதவியதாக சிவில் விமானப்போக்குவரத்து இயக்குனரகத்தைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும் சிலர் இதுபோல் போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து விமான ஓட்டுனர் உரிமம் பெற்றிருப்பதை தெரியவந்துள்ளது. இதையடுத்து சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகத்தில் அதுதொடர்பான கோப்புகளைத் தேடியபோது அவை காணாமல் போய்விட்டது தெரியவந்தது.

 இதையடுத்து கோப்புகள் காணாமல்போனது தொடர்பாக 
 வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட இயக்குநரக அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலி மதிப்பெண் பட்டியல் தாக்கல் செய்து பைலட் உரிமம் பெற உதவிய அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அந்த கோப்புகள் மறைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை  கருதுகிறார்கள்.
 
பைலட் உரிமம் பெற்றவரா என்று லைசென்சை வாங்கிப் பார்க்கலாம்; உரிமமே போலியாக இருந்தால்..? நம்மை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பார் என்று நம்பும் பயணிகளின் உயிரோடு விளையாடும் போலி விமானிகள்- அவர்களுக்கு உதவியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த நடவடிக்கை ஏனைய போலிகளுக்கு படிப்பினையாக இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக