வியாழன், 28 ஏப்ரல், 2011

கோர்ட்டில் அரசு பஸ்கள்; குறட்டையில் போக்குவரத்து கழகம்..?

நாம் ஒரு வங்கியிலோ, அல்லது ஒரு தனி நபரிடமோ  கடன் வாங்கியிருந்து, அக்கடனை உரிய தவணையில் திருப்பி செலுத்தாததால் நமது வீட்டில் உள்ள பொருட்களையோ, அல்லது வீட்டையோ சம்மந்தப்பட்டவர்கள் ஜப்தி செய்தால் நாம் அவமானத்தில் கூனி குறுகிப் போய்விடுவோம். ஆனால் அரசும் அதிகாரிகளும் தங்களது அதிகாரத்திற்குட்பட்ட ஒரு பொருள் ஜப்தி செய்யப்பட்டால் அதைப் பற்றி வெட்கமோ கவலையோ கொல்வதில்லை. இதற்கு நிதர்சன சான்றாக தமிழக போக்குவரத்து கழகம் திகழ்கிறது.
 
விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி எனற செய்தியை நாம் அவ்வப்போது  படித்து வருகிறோம். இந்த ஒரு விஷயமே போக்குவரத்து துறையின் பலவீனத்தை  படம்பிடித்துக் காட்ட போதுமானதாகும். அரசு பஸ்களில் அடிபட்டு  மரணித்தவர்களின் உறவினர்கள்  அல்லது காயமுற்றவர்கள் பெரும்பாலும் நஷ்டஈடு கேட்டு கோர்ட்டு படியேறுவதில்லை. வெகு சொற்பமான சிலரே இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். இந்த சொற்பமான நபர்களுக்கு கூட உரியமுறையில் நஷ்டஈடு வழங்கி தனது வாகனத்தை  மீட்க முன்வருவதில்லை போக்குவரத்து துறை. இதனால் ஜப்தி செய்யப்பட்ட பஸ்கள் பல ஆண்டுகள் கூட பயனற்று நிற்பதை காணலாம். இவ்வாறு இயங்காமல் நிற்கும்  பஸ்களால் நாளொன்றுக்கு ஏற்படும் இழப்பை கவனத்தில் கொள்ளவோ, அதுகுறித்து கவலை கொள்ளவோ நிர்வாகம் தயாராக இல்லை. ஆனால் போக்குவரத்து துறையில் ஆண்டுதோறும்  நஷ்டம் என்று முகாரி பாட மட்டும் நிர்வாகமும் அரசும் தயங்குவதில்லை. இவ்வாறு இப்போது ஜப்தி செய்யப்ப்பட்ட ஒரு பஸ் குறித்த செய்தியை இங்கே பதிவு செய்கிறோம்.
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி.  இந்த ஊரை சேர்ந்த அன்னலட்சுமி இவர் கடந்த 1.1.2001 அன்று சோல்வார்பட்டி அணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று அன்னலட்சுமியின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்த தனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று அன்னலட்சுமி சிவகாசி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சிவகாசி கோர்ட்டு அன்னலட்சுமிக்கு ரூ.75 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 3.3.2008 அன்று உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகை வழங்கப்படவில்லை. இதை தொடர்ந்து அன்னலட்சுமி நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அன்னலட்சுமிக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் அன்னலட்சுமிக்கு நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்த சார்பு நீதிபதி சுமதி உத்தரவிட்டார். அதன்படி சிவகாசி பஸ் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
 
2001 ம் ஆண்டு காயமுற்ற பெண்ணிற்கு 2008 ம் ஆண்டுதான் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அதுவும் ஆரம்பத்தில் அன்னலட்சுமிக்கு ரூ.75 ஆயிரம் நஷ்டஈடு வழங்க சொன்னது நீதிமன்றம். அதை போக்குவரத்து துறை கட்டத் தவறியதால் அடுத்த தீர்ப்பில் அபராதம் சேர்த்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. உரிய நேரத்தில் நஷ்டஈடு வழங்கப்பட்டிருந்தால் இந்த கூடுதல் சுமை போக்குவரத்து துறைக்கு வந்திருக்குமா? அது சரி! நஷ்டமாவது மக்கள் வரிப்பணம் தானே! சரி அபராதம் விதிக்கப்பட்ட பின்பாவது ரோஷம் வந்து செயல்பட்டதா என்றால் இல்லை. மாறாக மூன்றாண்டுகள்  கழிந்த பின்னும்  நஷ்டஈடு வழங்காமல் காலம் கடத்தியுள்ளது போக்குவரத்து துறை. இதனால் பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
 
ஏதோ இந்த ஒரு வழக்கில்தான் நிர்வாகம் சற்று மெத்தனமாக இருந்ததனால் பஸ் ஜப்தி என்று நினைத்து விடாதீர்கள். இதுபோல் ஒரு நீண்ட பட்டியலே உண்டு. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் உரிய நேரத்தில் இழப்பீடு செலுத்த தவறியதால்  25க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டு திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்ற செய்தி ஜனவரி 3 ம் தேதி வெளியாகியிருந்தது.  அதிகாரிகள் அலட்சியம் காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படுவதோடு, ஜப்தி செய்யப்பட்ட பஸ்ஸின் தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. அரசு இனியேனும் கூடுதல் கவனம் செலுத்தி  ஜப்திக்கு முன் உரியவர்களுக்கு இழப்பை தர முன்வருமா? 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக