வியாழன், 28 ஏப்ரல், 2011

திருமணம் முடிந்தது; ஆனால்...

பெண் தேடும் படலம் முடிந்து  மணமான மறுநிமிடம், முதலிரவு இப்போது இல்லை அடுத்த மாதம் தான்' என்று பெண்ணின் கையைப்பிடித்துக்கொண்டு தாய்வீட்டிற்கு  அப்பெண்ணின் தந்தை அழைத்து சென்றுவிட்டால் அந்த புது மாப்பிள்ளை எப்படி புலம்புவனோ அதுபோன்ற நிலையில் தான் தேர்தலை சந்தித்த அரசியல் கட்சிகளின் நிலையும் உள்ளது. கூட்டணிக்காக கட்சி தேடல்; சீட்டுப் பங்கீட்டு; தொகுதி பங்கீடு இழுபறிகள் யாவும் கடந்து தேர்தல் மனமேடை கண்ட கட்சிகள் தேர்தல்   முடிவு காண ஒருமாதம் காத்திருத்தல் என்பது பரிதாபத்திற்குரியதே. அதுமட்டுமன்றி ந்த ஒரு மாதத்திற்குள் ஏதேனும் உள் குத்து நடந்து விடுமோ என்ற பதற்றம், நாம் கரை சேருவோமா என்ற கலக்கம் இவை வேறு அக்கட்சிகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் காரணம் தேர்தல் கமிஷன் தான்.
 
முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலை முடித்து விட்டாலும், வாக்குகளை எண்ணாமல் தள்ளி வைத்ததற்கு காரணம், இங்கு முடிவு தெரியும் பட்சத்தில் அது ஏனைய மாநில தேர்தலில் மக்களிடம் உள ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்  என்று தேர்தல் கமிஷன் கருதியதுதான். முதலாவது இந்த கருத்து அடிப்படையிலேயே தவறாகும் ஏனெனில், நடைபெறுவது பாராளுமன்றத் தேர்தல் அல்ல. சட்டமன்றத் தேர்தல். அதுமட்டுமன்றி ஒரு மாநிலத்தில் ஆட்சியமைக்கும்  கட்சிக்கும் அடுத்த மாநிலத்திற்கும் சம்மந்தமில்லை. உத்தரமாக தமிழகம் மற்றும் புதுவை வாக்குகள் எண்ணப்பட்டு அதில் அதிமுக வெற்றி பெற்றாலும், இந்த முடிவு கேரளா உள்ளிட்ட ஏனைய மாநிலங்களில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதிமுக தமிழகம் தான்டி வேறு மாநிலங்களில் ஆட்சியமைக்கும் அளவுக்கு வலிமையான கட்சியல்ல. திமுகவுக்கும்  இதுதான் நிலை. எனவே எல்லா  மாநில தேர்தல் முடிந்த பின்தான் வாக்குகள் எண்ணப்படும்  என்ற நிலைப்பாடு தவறாகும்.
 
அடுத்து இதில் உள்ள சிக்கல்களையும் பார்க்கவேண்டும். நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களை வோட்டு எந்திரத்தை ஒரு மாதகலாம் பாதுகாக்க செய்வதும், அதற்காக கோடிகளை இறைப்பதும் அவசியமற்றதாகும். இந்நேரம் தமிழகம்- புதுவை-கேரளா வாக்குகள் எண்ணிக்கை முடிவுற்றிருந்தால் இந்த காவலர்களை ஏனைய மாநில தேர்தல் பாதுகாப்புக்கு பயன்படுத்தியிருக்கலாம். அதன் மூலம் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, அரசுக்கு செலவும் குறைந்திருக்கும் அதையும் தேர்தல் கமிஷன் செய்ய தவறிவிட்டது.
 
அடுத்து தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளதாலும், வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அரசு நிர்வாகம் எந்தப் பணியையும் செய்ய முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கும் தென்மேற்குப் பருவமழை காலத்தின்போது வேளாண்மைப் பணிகள் முறையாக நடைபெறுவதற்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு ஆய்வுப் பணிகளைக்கூட அதிகாரிகள் மேற்கொள்ள முடியாமல் தேர்தல் ஆணையத்தின் ஆணை தடுக்கிறது என்றும் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியிருக்கிறார். முதல்வரின் ஆதங்கம்  முற்றிலும் சரியானதே!
 
மேலும் கடந்த காலங்களில் வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தபோது எண்ணுவதற்கு சிரமமான அந்த வாக்குச்சீட்டு முறை காலத்தில் கூட 'கையில காசு; வாயில தோசை' என்பதைப் போல் உடனுக்குடன் தேர்தல் முடிவை தந்த தேர்தல் கமிஷன், ஒரு பட்டனை தட்டினால் மொத்த வரலாறையும் தரும் மிஷினரி காலத்தில் தேர்தல் முடிவுக்கு ஒரு மாதம் காத்திருத்தல் என்பது தேர்தல் கமிஷனின் ஒரு வகை இயலாமையோ என மக்கள் கருதுகின்றனர். எது எப்படியோ ஒரு மாநிலத் தேர்தல் முடிவை, அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஞ்சுக்கு மாதக்கணக்கில் இழுப்பதன் மூலம் இந்த விஷயத்திலாவது அமெரிக்காவை எட்டிபிடிக்க எண்ணுகிறார்கள் போலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக