வியாழன், 28 ஏப்ரல், 2011

மின்சார அரசியல்; திமுகவின் துரோகம்!

திமுகவின் கடந்த ஐந்தாண்டு சாதனையின்  மைல் கல் 'பவர் கட்' தான். அதிகாரப்பூர்வமாக இரண்டுமணி நேரமும், அவ்வப்போது சில  பல  மணிநேரங்களும்  தமிழகம் தொடர்ந்து மின்வெட்டை சந்தித்துள்ளது. இந்த மின்வெட்டால் அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயரை மறைக்கவே சம்மந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நடந்து முடிந்த தேர்தலில் சீட்டு  கூட வழங்கவில்லை என்ற பேச்சும் உண்டு. இந்நிலையில் கோடை வெயிலின் தொடக்கமே தமிழகத்தை தகித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு சூட்டைக் கிளப்பும்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது மின்வாரியம்.
 
''வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் நாள் ஒன்றுக்கு தற்போது இரண்டு மணி நேரம் மின்வெட்டு என்பதற்குப் பதிலாக  மூன்று மணி நேரம் அதுவும் பகலில் மட்டும் மின்வெட்டு செய்வதென்றும், சென்னை மாநகரில் இதுவரை எந்தவிதமான மின்வெட்டும் செய்யப்படாமலிருந்த நிலைக்கு மாறாக ஒரு மணி நேரம் மட்டும் அதுவும் பகலில் மின் வெட்டு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
 
இதில் இரண்டு வகையான துரோகத்தை தமிழக அரசு செய்துள்ளது. ஒன்று சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி  மற்ற மாநிலங்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்த அரசு, சட்டசபை தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு அதிகரிப்பு அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதே அறிவிப்பை தேர்தலுக்கு முன்னால் செய்திருந்தால் நம்மிடம் உள்ள பவரை மக்கள் 'கட்' செய்யும் வகையில் வாக்குகளை செலுத்தி  விடுவார்கள் என்ற பயத்தில் தேர்தல் முடியும் வரை அடக்கி வாசித்ததோ?
 
அடுத்து சென்னைக்கு மட்டும் ஒரு மணிநேரம், மற்ற இடங்களுக்கு மூன்று மணிநேரம் என்பது பாரபட்சமில்லையா? ஏற்கனவே இரண்டுமணி நேரம் அமலில் இருந்தபோது மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்தைவிட கூடுதலாக சில மாவட்டங்களில் 4 மணி நேரம் வரை கூட மின்சாரம் தடைபட்டது. அப்படிப்பட்ட மக்களுக்கு இன்னும் ஒருமணிநேரம் கூடுதலாக மின்வெட்டு அறிவிப்பது துரோகமில்லையா?
 
இப்போது தமிழ்நாட்டின் மின்சார தேவை 11,600 மெகாவாட்டாக இருக்கிறது. ஆனால் மின்சார பற்றாக்குறை சுமார் 2000 மெ.வா. அளவுக்கு உள்ளது. இந்த பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) திணறிவருவதாக கூறுபவர்கள், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஐந்தாண்டுகளில் தீட்டிய திட்டங்கள் என்ன? இலவச கலர் டிவி வழங்கி அதன் மூலம் தனது குடும்ப வருமானத்திற்கு வழி காண்பதில் காட்டிய ஆர்வத்தை மின்சார உற்பத்தியில் அரசு காட்டியதுண்டா? எங்கு யார் கோடை வெயிலில் புழுங்கினாலும் ஆட்சியாளர்களுக்கு  எந்த மின்வெட்டுமில்லை. பவனி வரும் கார்முதல் பள்ளி கொள்ளும் அறைவரை அனைத்தும் குளிரூட்டப் பட்டவை தானே! அவர்கள் ஏன் கவலைப்படபோகிறார்கள்..? பரிதாபத்திற்குரியவன் திருவாளர் பொதுஜனம் தானே! 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்; ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில்; என்று பாட்டெழுதினால்  மட்டும் போதாது.  வெளிநாடுகளைப் போல் குறிப்பாக வளைகுடா நாடுகள் போல் தடையில்லா மின்சாரம் கிடைக்க அதிகாரவர்க்கம் ஆவன செய்யட்டும். பின்பு வல்லரசு கனவு கானட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக