வெள்ளி, 14 அக்டோபர், 2011

அரசியலில் தடம்பதிக்கும் அன்னா ஹசாரே!

 "லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டு வர உதவும், தங்களது ஜன் லோக்பால் மசோதாவை மத்திய அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார் அன்னாஹசாரே. இவரது உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் சங்பரிவார சக்திகளின் உந்துதல் உள்ளது என மத்திய அமைச்சர் திக்விஜய்சிங் போன்றவர்கள் மட்டுமன்றி நடுநிலையான அரசியல் பார்வையாளர்களும் விமர்சித்தனர். அதை உண்மைப்படுத்தும் வகையில், ஹசாரேயின் உண்ணாவிரத மேடை காவிகளால் நிரம்பியிருந்தது. அதுமட்டுமன்றி, இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் தள்ளப்பட்டவுடன்  அங்கு ஓடோடி சென்று ஆதரவளித்தவர்களும் ராம்தேவ்- ரவிசங்கர் போன்ற காவிகள் தான். மேலும் ஹசாரேயின் உண்ணாவிரத  போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். முழு ஒத்துழைப்பு வழங்கியது என்ற உண்மையும்  வெளியாகியுள்ளது. ''சமீபத்தில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். சமூகத்தின் மீது கொண்ட அக்கறை காரணமாக அவர்கள் இத்தகைய போராட்டங்களில் கலந்து கொண்டனர்'' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகாவத் கூறியுள்ளார். இவையெல்லாம் ஹசாரே-சங்பரிவார் உறவை உண்மைப்பைடுத்துவதாகும்.

இது ஒருபுறமிருக்க, ஹசாரே ஊழலை ஒழிக்க வந்த இரண்டாம் மகாத்மா என கருதிய பெரும்பான்மை மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு இவரை ஆதரித்தனர். ஆனால் ஹசாரே அதை மறந்து இன்று அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்து விட்டார். சமீபத்தில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர மத்திய அரசு தவறினால், ஹிசார் லோக்சபா இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசை தோற்கடியுங்கள்' என, வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வேன்' என, தெரிவித்தார்.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அவரின் பிரசாரம் துவங்க உள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் லோக்சபா தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிக்கு இன்று செல்லும் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மனிஷ் சிசோடியா, கோபால் ராய் நவீன் ஜிண்டால் ஆகியோர், வரும் 10ம் தேதி வரை அங்கு தங்கியிருக்கின்றனர். அப்போது, காங்கிரசுக்கு எதிராக பிரசாரமும் செய்கின்றனர். அத்துடன், "ஊழல் அரசாங்கம்' என்ற தலைப்பில், ஹசாரே பேசிய வீடியோவும் ஆங்காங்கே திரையிடப்படுகிறது.

அதில், "ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர தவறிவிட்ட காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என, பொதுமக்களை ஹசாரே கேட்டுக் கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ்க்கு எதிரான சிந்தனையை விதைத்து, எதிர்கட்சியான பாஜகவின் வெற்றிக்கு ஹசாரே வலுவான அடித்தளம் அமைத்து தனது செஞ்சோற்றுக் கடனை நிறைவேற்றுகிறார். இதன் மூலம் ஹசாரே அரசியலிலும் தடம் பதிக்கிறார்.

இதற்கிடையில்  எதிர்பாராத விதமாக இந்துத்துவாவின் மற்றொரு அங்கமான சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு போராட்டங்கள் வேடிக்கையானவை என்று விமர்சித்துள்ளார்.   "ஊழலுக்கு எதிராக ஹசாரே போராட்டம் நடத்துவது வேடிக்கையானது. இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனென்றால், பெரிய மீன்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க அன்னா ஹசாரே வலை வீசினால், வலை தான் கிழியும். பெரிய மீன்கள் தப்பி ஓடி விடும்' என பால்தாக்கரே கூற,  "தாக்கரேவுக்கு வயசாகி விட்டது. அவர் அப்படித் தான் பேசுவார்' என ஹசாரே பதிலடி கொடுக்க,  ஹசாரேவின் இந்த பதிலால் கோபமடைந்த பால் தாக்கரே, "என்னை விட உங்களுக்கு வயது குறைவாக இருப்பதற்காக, குழந்தைத் தனமாகச் செயல்படக்கூடாது. நாங்கள் காந்தியவாதிகள் கிடையாது. தேவையில்லாமல் விரோதத்தை தூண்டாதீர்கள்' என எச்சரிக்க இவர்களுக்கிடையில் நடக்கும் கூத்துக்களும் பஞ்சமில்லை. ஹசாரேயின் நாடகத்தில் அடுத்த காட்சி என்னவோ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக