ஞாயிறு, 23 அக்டோபர், 2011

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத வேண்டும். சாலை விபத்து, கற்பழிப்பு, திருட்டு போன்ற விஷயங்களுக்கும், இதுபோல் புகார் எழுதலாம்.
 
பொதுவாக ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், நேரில் கண்ட சாட்சி, பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் என்று யார் வேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவுடன், போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வர்.அடுத்து, புகார் கொடுத்தவருக்கு ஒரு கிரைம் நம்பர் கொடுப்பர். இந்த நம்பரை, நாம் புகார் கொடுத்ததற்கு ஆதாரமாகக் கருதலாம்.
 
இது தவிர, சில சமயங்களில் புகார் கொடுக்கும் போது, சில வகையான ஆதாரங்களை போலீஸ் கேட்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, இருசக்கர வாகனம் தொலைந்து போகும் பட்சத்தில், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தைக் கேட்கலாம். வீட்டில் நகைகள் காணாமல் போனால், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து, நகைகள் வாங்கிய பில், ரசீது போன்றவற்றைக் கேட்கலாம்.அவசர உதவிக்கு, 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு, எந்த ஒரு பகுதியிலிருந்தும், பிரச்னைக்காக புகார் தெரிவிக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் உங்களை பாதிக்காது.ரயில்வே பிளாட்பாரம், ரயில் தண்டவாளம் போன்ற இடங்களில் குற்றம் அல்லது பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து, ரயில்வே போலீசிடம் தான் புகார் தர முடியும்.
 
நன்றி; தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக