வெள்ளி, 28 அக்டோபர், 2011

கல்வி அமைச்சரின் தலைக்கு விலை; அரங்கேறும் அரசியல் கூத்து.

ரு திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம்; கல்வி அமைச்சரை நோக்கி கதாநாயகன் கேட்பார். ''நீங்க கல்வி அமைச்சரா இருக்கீங்களே! என்ன படிச்சிருக்கீங்க என்று. அய்ய! நான் மழைக்குக் கூட இஸ்கூலு பக்கம் ஒதுங்குனதில்லீங்கோ' என்று அந்த கல்வி அமைச்சர் சொல்வார். அதைப் போலத்தான் இன்றைக்கு தான் பதவி வகிக்கும் துறைக்கும் தனக்கும் சம்மந்தமில்லாத நிலையில்தான பெரும்பாலான அமைச்சர்கள் நிலை உள்ளது. இதே போல இந்த பாண்டிச்சேரி அமைச்சரும் இருந்து விட்டு போயிருக்கலாம். ஆனால் அவருக்கு எப்படியும் நான் 'SSLC' முடித்தவன் என்ற பெருமை வேண்டும் என நினைத்தாரோ என்னவோ, பெயிலான பாடங்களை எழுத முடிவு செய்தார். அரசியல்வாதிகள் சொத்து வாங்கும் போது மட்டும் தான் 'பினாமி' வச்சுக்கணுமா? இதோ நான் பரிட்சைக்கே பினாமி வைக்கிறேன்னு தனக்குப் பதிலாக ஆள் வைத்து 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதியதினார். இதையொட்டி  எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அமைச்சர் கல்யாணசுந்தரம் நேரில் ஆஜராக புதுச்சேரி சபாநாயகரிடம் சம்மன் அளித்தனர்.

சபாநாயகரிடம் அளிக்கப் பட்ட சம்மன், "அமைச்சர் கல்யாணசுந்தரம் வீட்டில் இல்லை" என திரும்ப வந்த நிலையில் அவரது வீட்டிற்குத் தமிழக காவல்துறையினர் இரண்டாவது சம்மனை அனுப்பினர். கல்யாண சுந்தரம் இல்லை என இரண்டாவது சம்மனும் திரும்பியது. இந்நிலையில் புதுச்சேரி இளைஞர் காங்கிரசார், "அமைச்சரைக் காணவில்லை; கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ 1000 சன்மானம் வழங்கப்படும்" என புதுச்சேரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். மற்றொரு புறம்,  புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. ஒரு படி மேலே போய், 
''ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டுவரும் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் ரூ 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.'' என்று அறிவித்துள்ளார்.
 
அமைச்சர் ஊழல் செய்துள்ளார். அதை கண்டுபிடித்து ஊழல் செய்த பணத்தை பறிமுதல் செய்யவேண்டும் என்ற சர்ச்சை எழுவது இயற்கை. ஆனால் அமைச்சரையே காணவில்லை என்பது விசித்திரமானது தானே?  இதற்கிடையில் கடந்த 24 ஆம் தேதி அவர் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். வழக்கம்போல அலுவல்களை கவனித்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை சந்தித்து விட்டு சென்றனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இனிமேலாவது அவருக்கு சம்மன் வழங்கலாம்தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக