வியாழன், 6 அக்டோபர், 2011

கூட்டணி குறித்து குழப்பும் விஜயகாந்த்!

ரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை என்பது அரசியல் அரிச்சுவடி கற்ற அனைவருக்கும் தெரியும். அதே போல் 'நாங்கள் மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டவர்கள்' என்று காட்ட சில தேர்தல்களில் தனித்து களம் கண்டு விட்டு கூட்டம் சேர்ந்தவுடன் அந்த கூட்டத்தைக் காட்டி கூட்டணி பேசிய கட்சிகளும் உண்டு. இதில் இரண்டாமவர் நம்ம விஜயகாந்த். இந்த விஜயகாந்த், கடவுளோடும் மக்களோடும் தான் கூட்டணி என்று முழங்கியவர் கடந்த தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி கண்டு எதிர்கட்சித் தலைவரானார். விஜயகாந்தின் வளர்ச்சி தனக்கு வீழ்ச்சி என்று ஜெயலலிதா தாமதமாக உணர்ந்ததாலோ என்னவோ விஜயகாந்தை கூட்டணியிலிருந்து கழற்றி விட்டார். இதற்கிடையில், திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக போன்று இவர் தனித்து களம் காண்பாரோ என்று எண்ணியிருந்த வேளையிலே சட்டென தம்மைப் போல் ஜெயலலிதாவால் கழற்றி விடப்பட்டு முழித்து கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுடன் கைகோர்த்துக் கொண்டு உள்ளாட்சியை சந்திக்கிறார்.
 
இவரது இந்த கூட்டணி பற்றி ஒரு நிருபர், ''தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி என்கிறீர்கள். கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்க, அதற்கு விஜயகாந்த், ''இப்போதும் சொல்கிறேன் மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பப்படிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தான் கூட்டணி வைத்தேன்  என்று கூறியுள்ளார்.
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கண்டது சேலம் மாநாட்டில் மக்கள் கருத்தை கேட்டுத்தான் என்றவர், இப்போது உள்ளாட்சியில் கம்யூனிஸ்டுகளிடம் கூட்டணி சேர்வதற்கு எந்த மாநாட்டை கூட்டி எந்த மக்களிடம்  கேட்டார்?  மேலும், விஜயகாந்த் கூற்றுப்படி மக்கள் தான் தெய்வம் என்றால் மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என்று சொல்ல வேண்டியது தானே?  தெய்வத்தோடும் மக்களோடும் கூட்டணி என்று சொல்ல வேண்டியதில்லையே? தெய்வம்- மக்கள் என்று பிரித்து சொல்வதன் மூலம் தெய்வம் வேறு; மக்கள் வேறு என்று தெரியவில்லையா?
 
எனவே அரசியல் கூட்டணி  என்பது அந்ததந்த  காலகட்டத்திற்கு ஏற்ப அமைவது என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டு செல்வதற்கு பதிலாக, மக்கள்- தெய்வம் என தானும் குழம்பி மக்களையும் மடையர்களாக்க விஜயகாந்த் நினைப்பது அவரது அரசியல் தெளிவின்மையை காட்டுகிறது. அது சரி! அவர் தெளிந்த நிலையில் இருந்தால் அல்லவா அரசியல் தெளிவு பெறுவதற்கு என்று எங்கோ பாமரன் கூறும் வார்த்தை காற்று வாக்கில் கேட்கிறது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக