வியாழன், 6 அக்டோபர், 2011

உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு; ஐ.நா.வில் பிரதமரின் அசத்தல் பேச்சு.

வ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கொள்கையை சட்டதிட்டத்தை கொண்ட ஒரு அரசு, மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தனது கொள்கையை திணிக்கும்  நோக்கில் அல்லது தனது கொள்கையை ஏற்பவர்களை ஆட்சியாளராக அமர்த்தும் நோக்கில் அன்னிய நாடுகள் தலையிடுவது என்பது அடுத்த நாட்டின் இறையாண்மையை கேள்விக்குரியதாக ஆக்குவதாகும். அந்த வகையில் அடுத்த நாட்டின் விவகாரங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகும் ஒரே நாடு அமெரிக்கா என்பது அழும் குழந்தைக்கும் தெரியும். தான் கொண்டு வரும் தீர்மானங்களில் அனைத்து நாடுகளும் படித்து பார்க்காமல் கையெழுத்திட வேண்டும். எதிர்ப்பவர் எதிரி நாடாக கணிக்கப்பட்டு அவர்களின் நாள் எண்ணப்பட்டு கதை முடிக்கப்படும் என்ற அடிப்படையில் அமெரிக்கா நடந்து வருவதை இராக், ஆப்கானிஸ்தான், லிபியா உள்ளிட்ட பல நாடுகளில் காணமுடிகிறது. ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைத்து அந்நாட்டின் இஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைக்கும் அமெரிக்காவை இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் மறைமுகமாக ஒரு பிடி பிடித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்,  "சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது' .

 "ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேசச் சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்னைக்குத் தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது.

 ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். வளர்ச்சிக்கு உற்ற சூழலை மக்கள் உருவாக்க உதவ வேண்டிய கடமை ஒவ்வொரு அரசுக்கும் இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் அடிநாதமாகவும் அடிப்படை மனித சுதந்திரத்தின் சாரமாகவும் இருக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளைத் தீர்க்க நம்மிடையே ஒத்துழைப்பு அவசியம்; முரண்பட்டு மோதலில் இறங்கினால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாது'''! என்று பேசியுள்ளார்.
 
மன்மோகன்சிங்கின் பேச்சு, நாடு பிடிக்கும் கொள்கையைக் கொண்ட அமெரிக்கா  மற்றும் அதன் நாச[நேச] நாட்டுகளுக்கும் சம்மட்டி அடியாகும். தமது நாட்டின் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அந்த நாட்டு குடிமக்களுக்கே அன்றி, அமெரிக்காவின் ராணுவ டாங்கிகளுக்கு அல்ல என்பதையும், ஒரு நாட்டின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு, இறையாண்மை, சுதந்திரத் தன்மையையும் மதிக்கும் வகையிலும் காப்பாற்றும்வகையிலும்தான் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் கூறி அமெரிக்காவையும், அதன் அநியாயத்திற்கு  ஒத்து ஊதும் ஐ.நா.வையும் ஒரு சேர கண்டித்துள்ள பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வெல்டன் மிஸ்டர் மன்மோகன் சிங்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக