திங்கள், 7 மே, 2012

நரேந்திர மோடி மீது, இ.பி.கோ. 153ஏ(1) (ஏ) மற்றும் (பி), 153 பி(1), 166 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு..?!


ஆமதாபாத், மே.8
குஜராத் கலவர சம்பவம் தொடர்பாக, நரேந்திர மோடி மீது வழக்கு தொடர முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு நியமித்த ஆலோசகர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாப்ரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு, முதல்மந்திரி நரேந்திர மோடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 58 பேரில் எவருக்கு எதிராகவும் ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. இத்துடன் விசாரணையை முடித்துக் கொள்ளலாம் என்றும் சிபாரிசு செய்தது. 

இவ்வழக்கை விசாரித்து வரும் ஆமதாபாத் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன், சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்ட ஆலோசகர் ராஜு ராமச்சந்திரனும், தனது அறிக்கையை ஆமதாபாத் கோர்ட்டில் சமர்ப்பித்து இருந்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு அறிக்கையும், ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையும், கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி.யின் மனைவி ஜாகியா ஜாப்ரியிடம் நேற்று வழங்கப்பட்டன. 
அதையடுத்து, ராஜு ராமச்சந்திரனின் அறிக்கையில் உள்ள விவரங்கள் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டன. அந்த அறிக்கையில் ராஜு ராமச்சந்திரன் கூறி இருப்பதாவது:

புகார்தாரர் ஜாகியா ஜாப்ரி, முதல்மந்திரி நரேந்திர மோடி மீது சுமத்தி உள்ள குற்றச்சாட்டுகளின்படி, இ.பி.கோ. 153ஏ(1) (ஏ) மற்றும் (பி), 153 பி(1), 166 ஆகிய பிரிவுகளின் கீழ் நரேந்திர மோடி மீது வழக்கு தொடரலாம். 
மதத்தின் அடிப்படையில், வெவ்வேறு பிரிவினருக்கிடையே விரோதத்தை பரப்புதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல், காயம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஒரு அரசு ஊழியர், சட்டத்தை மதிக்காமல் இருப்பது ஆகிய குற்றச்சாட்டுகளை மேற்கண்ட சட்டப்பிரிவுகள் குறிப்பிடுகின்றன. 

கலவரத்தின்போது, கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ந் தேதி நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, 'இந்துக்கள் தங்கள் கோபத்தை காட்டவும், முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும் அனுமதிக்க வேண்டும்'என்று கூறியதாக, சஸ்பெண்டு ஆன போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறி உள்ளார். 

இந்த கூற்றை சிறப்பு புலனாய்வு குழு நிராகரித்தபோதிலும், எந்த அடிப்படையும் இல்லாமல் நரேந்திர மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட் இப்படி கூறி இருப்பார் என்று தோன்றவில்லை. சஞ்சீவ் பட், அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்கு ஆவணரீதியான ஆதாரம் ஏதும் இல்லை. 

சஞ்சீவ் பட்டின் கருத்துகளை நம்பாத சிறப்பு புலனாய்வு குழு, அவருடைய உயர் அதிகாரிகளின் கருத்துகளை மட்டும் நம்புகிறது எனவே, சஞ்சீவ் பட்டின் கருத்து உள்நோக்கம் கொண்டது என்ற முடிவுக்கு சிறப்பு புலனாய்வு குழு வந்திருப்பதை ஏற்க முடியவில்லை. அந்த குறிப்பிட்ட கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டாரா?, அந்த கூட்டத்தில் நரேந்திர மோடி அதுபோன்று பேசினாரா? என்பதெல்லாம் கோர்ட்டால் தீர்மானிக்கப்பட வேண்டும். அதற்கு முன்பு, சஞ்சீவ் பட்டின் கருத்தை நம்ப முடியாது என்று கூறுவது சரியல்ல.

எனவே, அந்த கூட்டத்தில், நரேந்திர மோடி பேசியதாக கூறப்படும் கருத்து, சட்டப்படி குற்றமா? என்பதுதான் இப்போது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

செய்தி நன்றி;தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக