வியாழன், 3 மே, 2012

போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் சார்பில் இலங்கை தூதரகம் முற்றுகை; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு தொல்.திருமாவளவன் கைது .

சென்னை, மே.4
போலீஸ் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டார். 

இலங்கையில் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தை கட்சி அறிவித்திருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் இலங்கை தூதரகம் அருகே நேற்று போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஏராளமான பேர் இலங்கை தூதரகம் அருகே முற்றுகையிட்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். சிலர் நடுரோட்டில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஒருசிலர் ராஜபக்சே உருவபொம்மையையும், அவரது படத்தையும் தீவைத்து எரித்தனர்.
 
இதை தடுத்தபோது போலீசாருக்கும், விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீஸ் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு, பொருளாளர் முகமது யூசுப், கொள்கை பரப்பு துணை செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, வழக்கறிஞர் பழனிமுத்து உள்பட ஏராளமான பேர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி நாககேஸ்வரராவ் பூங்கா அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்திருந்தனர். முன்னதாக தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:
இலங்கை தம்புள்ளை நகரில் அமைந்துள்ள சுமார் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசூதியை ராஜபக்சே அரசு இடித்துள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தொடர்ந்து எதிராக செயல்பட்டுவருகிற ராஜபக்சேவை சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். இடித்த இடத்தில் மீண்டும் மசூதியை கட்டிதருவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு கைதாகி இருக்கிறோம்.

நன்றி; தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக