திங்கள், 7 மே, 2012

பெற்றோருக்குத் தெரியாமல் ஐ.ஏ.எஸ். ஆன மாணவி!

கல்லூரிக்காலத்தில் காதலில் விழுந்து, பெற்றோருக்குத் தெரியாமல் 'கம்பி' நீட்டி, தனக்கும், தனது பெற்றோருக்கும், தான் சார்ந்த மார்க்கத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் சில கன்னியர்களுக்கு மத்தியில், பெற்றோருக்குத் தெரியாமல் ஐ.ஏ.எஸ். படிப்பில் வெற்றிபெற்ற சாதனை மாணவி சாஜிபானு பற்றிய செய்தியை தினமணி வெளியிட்டுள்ளது. அதை நன்றியுடன் சமர்ப்பிக்கிறோம். -முகவைஅப்பாஸ்.


First Published : 08 May 2012 09:22:15 AM IST

Last Updated :

கும்பகோணம், மே 7: பெற்றோருக்குத் தெரியாமல் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார் கும்பகோணம் கல்லூரி மாணவி சாஜிபானு .

கேரள மாநிலம் மலபுரத்தைச் சேர்ந்த மாணவி சாஜிபானு (22). கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் இவர், இதே கல்லூரியில் பி.எஸ்.சி., ஐ.டி. பிரிவில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் ஏழாமிடம் பெற்றவர். 

அகில இந்திய அளவில் 2,400 பேர் எழுதிய சிவில் சர்வீசஸ் தேர்வில், 910 பேர் வெற்றி பெற்றனர். இதில் இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) தேர்வில் வெற்றி பெற்ற 170 பேரில், முதல் முயற்சியிலேயே 98-வது இடத்தைப் பிடித்த சாஜிபானுவுக்கு அந்தக் கல்லூரியில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 

தமிழகம்தான் என்னை ஐ.ஏ.எஸ். ஆக்கியது: பின்னர் அவர் அளித்த பேட்டி: எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால், எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனது மாமா, சகோதர, சகோதரிகள், உறவினர்கள் மற்றும் கல்லூரித் தலைவர், செயலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனது விருப்பத்துக்கு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தினர். 

இக்கல்வி நிறுவனத்தில் உள்ள நூலகம் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத முடிவு செய்தேன். 

அதன்படி, சைதை துரைசாமி நடத்தும் மனித நேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன்.நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தது எனது பெற்றோருக்குக் கூடத் தெரியாது. கல்லூரிக்கு கட்டுவதற்காக கொடுத்த செமஸ்டர் கட்டணத்தையே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத செலவழித்தேன். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளேன். என்னுடைய ஐ.ஏ.எஸ். கனவை நனவாக்கியது தமிழகம்தான். தமிழக மக்களுக்கு சேவை செய்வதே எனது விருப்பம் என்றார் சாஜிபானு. கல்லூரி முதல்வர் மணி, தலைவர் அன்வர்கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக