வியாழன், 3 மே, 2012

வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்களின் விவரங்களை திரட்ட அரசு உத்தரவிடுமா?

 

மிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விபரங்களை திரட்டி, அவற்றை சி.டி.யாக பதிவு செய்து, இந்து அறநிலையத்துறை கமிஷனருக்கு நில அளவைத் துறையின் கமிஷனர் வழங்க வேண்டும் என்று கடந்த 23.11.09 அன்று தமிழக அரசின் வருவாய்த் துறை அரசாணை பிறப்பித்தது. மேலும், இந்தத் தகவல்களை ஆவண காப்பகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட துறைகளிடம் இருந்து நில அளவை கமிஷனர் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த அரசாணையின்படி, நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த அரசாணையின்படி தகுந்த நடவடிக்கையை விரைவில் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்ம சம்ரக்ஷனா சங்கத்தின் தலைவர் சுவாமி கோவிந்த ராமாணுஜதாசா தாக்கல் செய்துள்ளார். 

இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், 
இந்த உத்தரவை நிறைவேற்றும் விதமாக, 8 மாவட்டங்களில் இருந்து நில விவரங்கள் பெறப்பட்டுள்ளன.மற்ற மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் இருந்து உரிய தகவல்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நில அளவைத்துரையின் கமிஷனரின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே அரசு துறைகளின் பணி நிலவரங்களை கருத்தில் கொண்டு, மேலும் 4 மாத கால அவகாசத்தை அளிக்கிறோம். மற்ற மாவட்ட கோவில் நில விபரங்கள், ஆவணங்களை ஸ்கேன் செய்து சி.டி.யாக்கி எல்லா விபரங்களையும் இந்த காலகட்டத்துக்குள் பெற்று, அதை இந்து சமய அறநிலையத் துறை கமிஷனரிடம் நிலஅளவைத்துறையின் கமிஷனர் வழங்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணையை 4 மாதங்களுக்கு தள்ளிவைக்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை விட பன்மடங்கு அதிகமாக வக்பு வாரியத்திற்கு உள்ளது. வக்பு வாரியத்தின் சொத்துக்கள் எங்கெங்கு இருக்கிறது என்ற விபரங்கள் வக்பு வாரியத்தில் இருப்பது போல் தெரியவில்லை. அப்படி சொத்துக்களின் தகவல்கள் முழுமையாக வக்பு வாரியத்தால் ஆவணப்படுத்தப் பட்டிருந்தால், முறையாக கண்காணிக்கப் பட்டிருந்தால் இந்த அளவுக்கு ஆக்கிரமிப்புகள் நடந்திருக்காது. எனவே நில அளவைத்துறை வக்பு வாரியத்தின் சொத்துக்களை ஆவணப்படுத்தி, சீடியாக வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க அரசு ஆவன செய்யவேண்டும். அந்த ஆவன சீடியிலிருந்து ஊர் வாரியான சொத்து விபரங்களை பிரித்தெடுத்து அது தொடர்பான தகவல்கள் அடங்கிய ஒரு பிரதியெடுத்து எங்கே வக்பு சொத்துக்கள் உள்ளதோ அந்த ஊரின் மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்திற்கு வழங்கி, உங்கள் ஊரில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இன்னின்ன சொத்துக்கள் உள்ளன. இதில் யாரேனும் ஆக்கிரமித்தால், அத்துமீறினால் வக்பு வாரியத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்று வக்பு வாரியம் சொல்லவேண்டும். ஒவ்வொரு ஊர் மஹல்லா ஜமாஅத்தினரும் தமது ஊரில் உள்ள வக்பு சொத்தை கண்காணித்து வந்தால், ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றி விடலாம். அதோடு இந்த ஆவணப்படுத்தும் முயற்சி வருங்கால சந்ததிகளுக்கும் நமது சொத்துக்களை அறிந்துகொள்ளும் தலையாய ஆதாரமாக திகழும். 

மேலும், வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, கோயில் சொத்துக்கள் விசயத்தில் காட்டும் கனிவை வக்பு சொத்துக்களிலும் காட்டுவாரா?பார்ப்போமே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக