வெள்ளி, 24 ஜூன், 2011

காயிப் ஜனாஸா தொழுகை கூடும்; பீஜே ஜமாஅத்தின் செயல்முறை ஃபத்வா!

நாங்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பவர்கள்; எங்களின் ஒவ்வொரு அசைவும் குர்ஆன்-ஸுன்னாவுக்கு உட்பட்டதுதான் என்று மார்தட்டிக்கொள்ளும் பீஜேயும் அவரை பின்பற்றுபவர்களும் எழுத்தில் ஒரு சட்டமும், பேச்சில் ஒரு சட்டமும், செயலில் ஒரு சட்டமும் என்ற கொள்கையை கொண்டவர்கள் என்பதற்கு பல சான்றுகள் இருந்தாலும் சமீபத்திய சான்றான காயிப் ஜனாஸா குறித்த இவர்களின் முரண்பாட்டை பார்ப்போம்.
 
பீஜே என்பவர் எழுதிய ஜனாஸாவின் சட்டங்கள் மற்றும் ஜனாஸா தொழுகை என்ற இரு நூல்களிலும் காயிப் ஜனாஸா குறித்து அவர் கூறும் விளக்கம்; ''ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது ஒவ்வொரு தனி நபர் மீதும் கடமையில்லை. மாறாக சமுதாய கடமையாகும். ஒரு ஊரில் உள்ளவர்களில் யாராவது இத்தொழுகையை நடத்தி விட்டால் போதுமானதாகும்''  என்று கூறியுள்ளார்.
 
எழுத்தில் சொல்லியுள்ள இந்த சட்டத்திற்கு மாற்றமாக, ஏற்கனவே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட ஒரு பெண்ணின் ஜனாசாவிற்கு [பிரேதம் இல்லாமல்] காயிப் ஜனாஸா தொழுகை நடத்தியுள்ளனர் பீஜே ஜமாஅத்தினர். இதுபற்றி உணர்வு வார இதழில், [15;42 ] ''காயிப் ஜனாஸா தொழுகை' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
 
''நல்ல கவுண்டன் பாளையம் தவ்ஹீத் கல்லூரி ஆலிமா ஒருவர் மரணித்துவிட, நபிவழியின் அடிப்படையிலேயே அவருக்கான இறுதிக் காரியங்கள்  அனைத்தும் நடக்கவேண்டும் என்று மரணித்தவரின் தாயார் உள்ளிட்டோரின் வேண்டுகோளை புறந்தள்ளி, சுன்னத் ஜமாஅத்தினர் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார்களாம். பிறகு பீஜே ஜமாஅத்தினர்,மாநிலத்தலைமையின் ஆலோசனையின் படி தனியாக, இறந்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக காயிப் ஜனாஸா [பிரேதம் இல்லாமல் நடத்துவது] தொழுகை நடத்தினார்களாம்.
 
இப்படி போகிறது உணர்வின் செய்தி. நாம்  கேட்பது,
பீஜேயின் எழுத்து ஃபத்வா பிரகாரம் ஒரு ஜனாசாவிற்கு யாரேனும் சிலர் தொழுகை நடத்தினால் போதுமானதாகும் என்பது சரியா? அல்லது ஜனாஸா தொழுகை  ஒரு சாராரால் நடத்தப்பட்ட பின்னும், மீண்டும் அதே ஜனாசாவிற்கு காயிப் ஜனாஸா தொழுவது சரியா?  நம் கண்ணுக்கு முன்பாகவே ஏற்கனவே ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட ஜனாசாவிற்கு மீண்டும் காயிப் ஜனாஸா தொழுவதற்கான ஆதாரத்தை இவர்கள் வைக்க வேண்டும். மேலும், சுன்னத் ஜமாஅத்தினர் நடத்தும் ஜனாஸா தொழுகை குர்ஆன்- ஹதீசுக்கு மாற்றமானது என்பதையும் இவர்கள் சொல்ல வேண்டும். சுன்னத் ஜமாஅத்தினர் ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினாலும், அதே ஜனாசாவிற்கு மீண்டும் காயிப்ஜனாஸா நடத்தப்பட வேண்டும் என்றும் இவர்கள் ஆதாரங்களின் அடிப்படையில் அறிவிக்க வேண்டும். காயிப் ஜனாஸா கூடும் என்றால், இவர்கள் தங்களது முந்தைய நிலைப்பாட்டை அதாவது காயிப் ஜனாஸா தொழுகை கூடாது என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்களா என்றும் தெரிவிக்க வேண்டும்.
 
குறிப்பு; பீஜே என்பவர் பதிலளிக்க வேண்டும். அதிகாரப் பூர்வ இணையதளத்தில் பதிலளிக்க வேண்டும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக