வியாழன், 2 ஜூன், 2011

அறியாமைக்கு அரசுப் பணியா?

டவுள் என்பவன் எவரிடத்திலும் எந்த தேவையுமற்றவன் என்பது இஸ்லாமிய நிலைப்பாடு. ஆனால் கடவுள் தேவையுள்ளவன் என்று கருதும் மக்களும் உலகில் பெரும்பான்மையாக  உள்ளனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளுக்கு  பல படையல்களை வைக்கின்றனர். இந்த படையல்களில் கூட ஆடு-மாடு-கோழி போன்றவற்றை பலி கொடுக்கின்றனர். மாறாக எவரும் கடவுளுக்காக தனது அங்கத்தை வெட்டி காணிக்கையாகுவதில்லை. அதிகபட்சமாக தமது முடியை காணிக்கையாக்குவர் காரணம் அது மீண்டும் வளர்ந்துவிடும் என்பதால்.
 
இவ்வாறான  கடவுள் மீதான படையல் விஷயத்தில் உஷாராக இருப்பவர்கள், அரசியல்வாதிகளிடத்திலும், நடிக-நடிகையரிடத்திலும் தோற்று விடுகின்றனர். தனது நேசத்திற்குரியவர்களின் வெற்றிக்காக இவர்களின் நேர்ச்சைகளோ வித்தியாசமானது. விரலை வெட்டுகிறேன் நாக்கை வெட்டுகிறேன் என்பது போன்று அதிர்ச்சியளிப்பவையாக இவர்களது நேர்ச்சை இருக்கும்.  இதுபோன்ற நேர்ச்சைகளை செய்வதில் அதிமுக தொண்டர்களை யாரும் விஞ்சமுடியாது. கடந்த முறை ஒரு அதிமுக தொண்டர் ஜெயலலிதாவுக்காக விரலை வெட்டி காணிக்கையாக்கிய  செய்தி நாம்  அறிந்தது தான். இப்போது அதே பாணியில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக  ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாடு முதல்- அமைச்சராக வரவேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம்,  தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர், தேனி மாவட்டம வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் கோவிலில் 13-ந்தேதி அன்று தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார்.
 
இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறார்.  இவர் தனது நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தியதை அறிந்ததும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவியும், அதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.முதல்- அமைச்சர் ஜெயலலிதா இந்த நிகழ்வு குறித்து அறிந்ததும் பாதிக்கப்பட்ட சரிதாவை உடனடியாக சென்னைக்கு வரவழைத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார். எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195 ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார். எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதைத்தவிர அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கிடவும் ஆணையிட்டார். 
 
நாக்கை அறுத்துக்கொண்ட பெண்ணிற்கு முதல்வர் ஜெயலலிதா செய்த  மேற்கண்ட மனிதநேய உதவிகளை நாம் குறைகாண முடியாது. காரணம் இவையாவும் அவரது கட்சி நிதியிலிருந்து  வழங்கப்பட்ட உதவியாகும். ஆனால் இப்பெண்ணிற்கு சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார் ஜெயலலிதா. இது ஏற்றுக்கொள்ள முடியாத  செயலாகும். காரணம் இப்பெண்ணிற்கு  வேலை கொடுக்ககூடாது  என்பதால் அல்ல. மாறாக அந்த பணிக்கு இவரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் தவறாகும்.
 
அரசியலில் வெற்றி பெற்றால் ஆட்டம் போடுவதும் தோற்றுவிட்டால் அடங்கி ஒடுங்குவதும் பகுத்தறிவு எதிரானதாகும். அந்தவகையில் தனது தலைவி முதல்வராக வேண்டும் என்று நாக்கை அறுத்துக் கொள்வது எந்த வகை பகுத்தறிவு? இத்தகைய மூடநம்பிக்கையை ஜெயலலிதா கண்டிப்பதை  விடுத்து இதுபோன்ற அறியாமை செயல்களை ஊக்கப்படுத்துவது போன்று அப்பெண்ணிற்கு அரசுப்பணி வழங்குவது பகுத்தறிவாளர் அண்ணா பெயரால் கட்சி நடத்தும் தலைவிக்கு அழகா என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும்.
 
மேலும் அப்பெண்ணின் வறுமையை போக்குவதுதன ஜெயலலிதாவின் நோக்கமெனில், அவர் போயஸ் தோட்டத்திலோ அல்லது அதிமுக தலைமையகத்திலோ பணி வழங்கட்டும். அதை விடுத்து அரசுப்பணி வழங்குவது, இதுபோன்ற சில காரியங்களை  செய்தால் அம்மாவின் மனம் இறங்கும். உதவித்தொகையுடன்  பணியும் கிடைக்கும் என்று  எல்லோரும் கிளம்ப ஆரம்பித்தால் என்னாகும் என்பதை முதல்வர் சிந்திக்க வேண்டும். அண்ணா பெயரை கட்சிக்கு வைத்தால் மட்டும் போதாது. அண்ணாவால் நஞ்சென வெறுக்கப்பட்ட மூட நம்பிக்கைகளையும் ஜெயலலிதா விட்டொழிக்க வேண்டும்.  அதோடு இதுபோன்ற செயல்களை தனது கட்சியினர் செய்யக்கூடாது என கண்டிப்புடன் உத்தரவிடவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக