புதன், 16 பிப்ரவரி, 2011

பாதணி துடைக்கவா பாதுகாப்பு அதிகாரி..?

''உங்கள் கால் செருப்பாகத் தேய்ந்து கடமையாற்றத் தானே உங்கள் கட்டளையை எதிர்பார்க்கிறேன்''
இப்படி தேர்தல் நேரத்தில் பேசும் அரசியல்வாதிகளில் சிலர், பதவிக்கு வந்தவுடன் பாதுகாப்பு அதிகாரியே  பாதணியை துடைக்கும் அளவுக்கு நடந்து கொள்வார்கள் என்பதற்கு சமீபத்திய ஒரு சம்பவம் சான்று பகர்கிறது.  
 
பரபரப்பின்  மறுபெயராக  உத்திரபிரதேச மாநில முதல்வர் மாயாவதி இருந்து வருகிறார். தனக்குத் தானே மாநிலம் முழுவதும் பல சிலைகளை நிறுவியது, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தொண்டர்கள் மாலையாக  அணிவித்தபோது அதை இன்முகத்துடன் ஏற்றது, பூங்காக்களில் தனது கட்சி சின்னமான யானையை நிறுவியது இவ்வாறு இவரது கடந்த கால பரபரப்புகள்  இன்னும் ஓயாத நிலையில், பாதுகாப்பு அதிகாரி இவரது ஷூவை துடைத்ததன் மூலம் மீண்டும் பாரபரபுக்குள்ளகியுள்ளார் மாயாவதி.
 
ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற மாயாவாதி சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வந்து இறங்கினார். கிளம்பிய புகை காரணமாக அவரது கால் ஷூ முழுவதும் தூசு படிந்தது. இவருடன் வந்த பெர்சனல் செக்ரியூட்டி ஆபீசர் (பி.எஸ்.ஓ.,) மாயாவதியை நோக்கி ஓடினார். பின்னர் அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து காலடியில் குனிந்து சுத்தம் செய்தார். அவர் சுத்தம்  செய்ததை கண்டுகொள்ளாமல் மாயாவதி,சகவாசமாக அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒரு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் இப்படி அடிமைத்தனமாக நடத்திக்காட்டியது பெரும் கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.
 
மேலும், காலில் விழுந்(து )த தூசியை துடைத்த பத்மசிங், டி.எஸ்.பி., ரேங்கில் உள்ளவர் ஆவார். பத்மசிங் 15 ஆண்டு காலமாக பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார். இவர் ஜனாதிபதி விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
 
''உன்னுடைய பதவிக் காலம் அஞ்சு வருஷம்; என்னோட பதவிக்காலம் அம்பத்தி நாலு வருஷம். எங்கிட்ட வச்சுக்காதே! என்று சினிமா போலீஸ், அரசியல்வாதியிடம் அடுக்குமொழி பேசுவார். ஆனால் நிஜத்திலோ காவல்துறையோ  ஆட்சியாளர்களின் ஏவல்  துறையாகத்தான் உள்ளது. இவ்வளவு காலம் ஆளும்கட்சி கூறிய பிரகாரம் சட்டத்தை காக்கும்[!] காவல்துறையை பார்த்திருக்கிறோம். ஆட்சியாளரின்  கார் கதவை திறந்து விட்டு, சல்யூட் அடிக்கும் அதிகாரிகளை பார்த்திருப்போம். ஆனால், பாதுகாப்பு  அதிகாரியையே பாதணி துடைக்கவைத்ததன்  மூலம், அரசியல்வாதிகள் அதிகாரிகளை  எந்த அளவுக்கு பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் என்பது புலப்படுகிறது.
 
இதில் வேடிக்கை என்னவெனில் இந்த சம்பவ குறித்து மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. நவாப் சையது கூறுகையில், ''உண்மையிலேயே இதை ஒரு பிரச்சினை என்று என்னால் கருத முடியவில்லை. தனது ஷூக்களை  துடைக்குமாறு முதல்மந்திரி மாயாவதி கூறி இருக்க மாட்டார். இப்போது, நான் ஒரு கிராமத்துக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அங்கு சேறு நிறைந்த இடத்தில் நான் காலை வைத்து விட்டால், கண்டிப்பாக எனது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக முன் வருவார்கள். அதில் எப்படி தவறு காண முடியும்? என்று  கூறியதுதான்.
 
இவர் சேறு நிறைந்த இடத்தில்  காலை வைத்து விட்டால், இவரது காலணிகளை சுத்தம் செய்வதற்காக கிராம மக்களில் சிலர் கண்டிப்பாக வரமாட்டார்கள். வேண்டுமானால் இவர் சேற்றை கழுவிக்கொள்ள ஒரு வாளி தண்ணீர் வேண்டுமானால் தருவார்கள். இப்படி எல்லாம் நொண்டிச்சாக்கு சொல்லி தனது தலைவியின் செயலை நியாயப்படுத்த  முயல்வது தவறாகும்.
 
எது எப்படியோ இனியேனும், அதிகாரிகள் படித்த படிப்பிற்கும் வகிக்கும் பதவிக்கும் உரிய மதிப்பு கிடைக்க வேண்டுமெனில், மக்களின் சேவகர்களான அரசியல்வாதிகளுக்கு கார்கதவை திறந்து விடுவது, சல்யூட் அடித்து பம்மி நிற்பது, அவர் அமரும் சேரை துடைப்பது, பாதணியை துடைப்பது இதுபோன்ற அடிமை சேவகம் தவிர்த்து, நான் அரசியல்வாதியின்  பாதுகாப்பு அதிகாரி  தானேயன்றி, பணியாளன் அல்ல என்பதை உணர்ந்து கம்பீரமாக நிற்கவேண்டும். நிற்பார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக