புதன், 23 பிப்ரவரி, 2011

பாலை பாழாக்கலாமா..?

''புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் ஒன்னால முடியாது தம்பி;
அட பாதி புள்ள  பெறக்குதடா- பசும்பாலை தாய்ப்பாலா  நம்பி''
என்று ஒரு கவிஞன் எழுதினான்.
ஆம்! பாலூட்டவேண்டும் என்ற எண்ணமிருந்தும்,பெற்ற தாயின் மார்பகத்தில் போதுமான அளவு பால் சுரக்காத பிள்ளைகளுக்கும், பாலூட்டினால் அழகு குறைந்துவிடும் என்று கருதும் நவீன மங்கைகளை தாயாக  கொண்ட பிள்ளைகளுக்கும் தாய்ப்பாலைத்  தருவது பசு தான். இத்தகைய பால் மீது தாய்மார்களுக்கு அலாதி நம்பிக்கைகள் அதிகம். கிராமங்கள் சிலவற்றில், பால் தப்பித்தவறி கெட்டுவிட்டால் அதை தரையிலே கொட்டமட்டார்கள். மாறாக வீட்டின் கூரை மீது கொட்டுவார்கள். காரணம் கேட்டால், பால் காலில் மிதிபடக்கூடாது என்று சொல்வார்கள்.[ இது தவறான நம்பிக்கை என்பது தனி விஷயம்]
 
இந்த அளவுக்கு மக்கள் மதிக்கும் பாலை, சிலர் போராட்டம் என்ற பெயரில் தரையில் கொட்டி வீனாக்கியுள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர்.
 இதையடுத்து தமிழக அரசு பசும்பாலுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் 10 காசும், எருமை பாலுக்கு 2 ரூபாய் 20 காசும் உயர்த்தி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இந்த கொள் முதல் விலை உயர்வை பால் உற்பத்தியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பசும்பாலுக்கு ரூ. 5 ஆகவும், எருமை பாலுக்கு ரூ.8 ஆகவும் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.  
 
அத்துடன் பிரதம பால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும், மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 7 -2 -11 முதல் பால் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்படி பலர் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பாலை தரையில் ஊற்றி போராட்டம் நடத்தினார்கள் என்ற செய்தி அதிர்ச்சிக்குரியதாகும்.
 
அரசை நோக்கி ஒவ்வொரு தரப்பாரும் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறார்கள். அந்த வகையில் பால் உற்பத்தியாளர்களுக்கும் கோரிக்கை வைக்கவும், போராட்டம் நடத்தவும் ஜனநாயக ரீதியாக உரிமை உண்டு. அதே நேரத்தில் அந்த போராட்டத்தில் ஒரு வரைமுறை வேண்டும். சமீபத்தில் கரும்பு விவசாயிகள், கரும்புக்கான கொள்முதல் விலையை  உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் யாரும் கரும்புகளை வெட்டி குப்பையில் போடவில்லை. அவ்வளவு ஏன்? சிலர் போதைப் பொருளான கள்ளை இறக்க அனுமதி கேட்டு, 'கள் இறக்கும் போராட்டம்' நடத்தினார்கள். மனிதனுக்கு கேடு விளைவிக்கும் கள்ளைக் கூட அவர்கள் இறக்கி, கீழே கொட்டி போராட்டம் நடத்தவில்லை. மாறாக சிலரின் வாயில்தான் ஊற்றினார்கள். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பால் உற்பத்தியாளர்கள் பல லிட்டர் பாலைக் கறந்து கீழே கொட்டி வீனாக்கியுள்ளனர்.
 
இந்தியாவில் பாலின்றி மரணிக்கும் குழந்தைகளின்  செய்தியை இவர்கள் அறியவில்லையா?  ஒரு உணவுப் பொருளை வீணாக்குவது எந்த வகை அறிவுடமை என்பதை சிந்திப்பார்களா? ஏற்கனவே கல்லிற்கும்- கட் அவுட்டிற்கும்  உணவுப் பொருளான பால் தாரைவார்க்கப் பட்டு ஒருபுறம் வீணாக்கப்  படுகையில், பால் உற்பத்தியாளர்களே இத்தகைய காரியத்தை செய்தது பொது மக்களை முகம் சுளிக்க செய்துள்ளது.
 
இவ்வாறு நாம் எழுதுவது  பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு எதிராக அல்ல. மாறாக, இனிவரும் காலங்களிலாவது உணவுப் பொருளை விரையமாக்கும் எந்த காரியத்தையும், எதன் பெயரிலும், எவரும் செய்யக்கூடாது என்ற நன்னோக்கில்தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக