புதன், 23 பிப்ரவரி, 2011

ஒரு மிஸ்டுகால்; ஒரு மரணம்; ஒரு அதிர்ச்சி!

 
டிரிங்..டிரிங்...
சுரேஷ்[பெயர் மாற்றப்பட்டுள்ளது] மொபைல் இரு சிணுங்கி அடங்கியது. மிஸ்டுகால் வந்த நம்பருக்கு  டயல் செய்தான் சுரேஷ். எதிர்முனையில் ஒரு பெண் குரல். நீங்க ரகுவா எனக் கேட்டது. இல்லை நான் சுரேஷ் என்று கூறி விட்டு, உங்களுக்கு என்ன நம்பர் வேண்டும் என கேட்டான். அப்பெண் கூறிய  நம்பரை கவனித்த சுரேஷ், கடைசி நம்பரை மாற்றியடித்துள்ளதை கூறியவுடன், ஒ சாரி! என்ற அப்பெண், பை த பை ஒங்க கிட்ட ஒரு விஷயம் பேசலாமா என கேட்க, ஓகே என்றான் சுரேஷ். 'நான் நல்லா படிப்பேங்க! எங்க வீட்ல வசதியில்லாததால  இடையிலே நிருத்தீட்டாங்க. நீங்க கொஞ்சம் உதவி பன்னுனா நான் படிப்பை தொடர முடியும் என கூறினாள்.
 
உடனே அப்பெண்ணின் வங்கிக்கணக்கு கேட்ட சுரேஷுக்கு, எஸ்.எம்.எஸ்ஸில் வங்கிக்கணக்கு வர, பணம் அனுப்பிவிட்டு தகவல் சொன்னான். அப்பெண் நன்றி கூற, தொடர்ந்தது அலைபேசி உரையாடல். நாளடைவில் 'காதல்கோட்டை' பாணியில், காணாமலேயே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. இதற்கிடையில் சுரேஷ் பணி நிமித்தமாக வெளிநாடு சென்றான். அங்கும் அலைபேசி அலையடித்தது.  அது  மட்டுமன்றி, சுரேஷிடமிருந்து பணமும்,  இருவருக்கும் மத்தியில் பரஸ்பரம் கடிதங்கள்- மெயில்கள்  பரிமாற்றம் வேறு. அப்படி ஒரு கடிதத்தோடு, அப்பெண்ணின்  புகைப்படமும் இருக்க, 'நீங்களும் நானும் சேர்ந்து இருக்குற மாதிரி இந்த படத்த மாத்தி அனுப்புங்க' என அப்பெண் கூற அப்படியே செய்தான் சுரேஷ்.
 
மேலும் அப்பெண், தான் படித்த கல்வியகத்தில் பிரின்ஸிபல் மகன் தன்னை மணக்க விரும்பியதாகவும், இரு வீட்டார் எதிர்ப்பையடுத்து  நிறைவேறவில்லை என்றும், பின்பு மத போதகர் ஒருவர் என்னை விரும்பினார் என்றும், அவர் வசதியற்றவர் என்பதால் என்னை திருமணம் செய்து வைக்க என் வீட்டார் மறுத்து விட்டார்கள் என்றும் கூறிவிட்டு, என்னமோ உங்ககிட்ட மயங்கி விட்டேன் என்றெல்லாம் கூற வானத்தில் பறந்தான் சுரேஷ்.
 
சிறிது நாளில், எனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என அப்பெண் கூற, சுரேஷ் வெளிநாட்டில் பணியாற்றும் தன் அண்ணனிடம் கூற, அவரோ 'அவள் யார்- அவள் குணம் எப்படி, அவள் குடும்பம் எப்படி இப்படி எதையுமே தெரியாத நிலையில் கல்யாணம் செய்ய நினைப்பது தவறு எனக் கூற, சுரேஷின் பிடிவாதத்தால் ஆகட்டும்  பார்ப்போம் என்கிறார்.
 
இதற்கிடையில் பணி நிமித்தம் காரணமாக சுரேஷ் சில நாட்கள் அப்பெண்ணை போனில் தொடர்பு கொள்ளவில்லை. ஒருநாள் அப்பெண்ணின் அம்மாவிடமிருந்து சுரேஷுக்கு போன், 'நீங்க போன் பண்ணாததால் என் மகள் மருந்தை குடித்து விட்டாள். இப்போது ஆஸ்பத்திரியில இருந்துதான் பேசுறேன் என்று கூற பதறிய சுரேஷ், அப்பெண்ணிடமும்-மருத்துவர் என அறிமுகப் படுத்தப்பட ஒருவரிடமும் பேசினான். இறுதியில் பணம் தேவை என்றவுடன் அனுப்பினான்.
 
சில நாட்களில் மீண்டும் தொடர்புகொண்ட அப்பெண், தான் 'டிஸ்சார்ஜ்' ஆகிவிட்டதாக கூறிய பின்பே சுரேஷுக்கு உயிர் வந்தது. இந்நிலையில், சுரேஷ் தனது பணி ஒப்பந்தம் முடிந்து தாயகம் திரும்பினான். தனது கண் காணாக் காதலிக்காக வாங்கிவந்த பொருட்களை கொடுத்துவிட்டு, காதலியை கண் குளிர காண நாடினான். அவனது பெற்றோரோ, அவனை தடுத்தனர். உடனே சுரேஷ் தனது அண்ணனிடம் போன் போட்டு, பெற்றோர் அப்பெண்ணை பார்க்க செல்வதை தடுப்பதை பற்றி கூற அவர், அவசரப்படாதே! முதலில் பெரியவர்கள் மூலம் அப்பெண்ணை பார்ப்போம் என்று கூற அமைதியடைந்த சுரேஷ் அலைபேசியில் மீண்டும் காதலியிடம் பேச நாடிய சுரேஷுக்கு பல நாட்கள் காதலியின் நம்பர் 'பிசியாகவே' இருக்க, என் மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன் என காதலி கூறினாலும், சுரேஷுக்கு சந்தேகப் பொறி விழ,
 
பெண்ணின் தாயாரின்  நம்பரை தொடர்பு கொண்டு, உங்க தம்பி எங்க இருக்கிறார் என கேட்க? அவன் எங்க வீட்ல தான் என்று அந்த அம்மா கூற, வீட்ல இருக்குற மாமாகிட்ட இரவு நேரத்துல பேசுனன்னு காதலி சொன்னது பொய் என்பதையறிந்து காதலியிடம் கேட்க, அவள் மழுப்ப இறுதியில், தான் பேசிக்கொண்டிருந்தது மதபோதகரிடம் எனக்கூறிவிட்டு, எங்க இருவருக்கும் இன்னமும் தொடர்பு  இருக்கு எனக் கூற, அதிர்ந்த சுரேஷ், 'இதோடு உனக்கும்- எனக்கும் எந்த உறவில்லை என்று கூறி, லைனை துண்டித்தான்.
 
இனி இவன் கதைக்காக மாட்டான் என முடிவெடுத்த அப்பெண், தனது தாயுடன் சுரேஷ் மாவட்டத்திற்கு வந்து, உயர் காவல்துறை அதிகாரியிடம் தன் தாய் மூலம் மனுக்கொடுத்த அப்பெண், ''தன் மகளை சுரேஷ் காதலித்ததாகவும், இருவருக்கும் திருமணம் பேச சுரேஷ் பெற்றோரை அணுகியபோது, அவர்கள பெருந்தொகை  வரதட்சனையும்- நகையும் கேட்டதாகவும், சுரேஷும் பெற்றோர் பேச்சை கேட்டுக்கிட்டு தனது மகளை கண்டுகொள்வதில்லை என்றும், எனவே தனது மகளை சுரேஷுடன் சேர்த்து வைக்கவேண்டும் என மனுவில் கூற, சுரேஷின் பெற்றோரை காவல்நிலையம் அழைத்து விசாரித்தது போலீஸ்.
 
வயதான சுரேஷின் தந்தை, ஊரில் கவரவமாக வாழ்ந்தவர். அவரை போலீசின் இந்த விசாரணை மனதளவில் பாதிக்க, இரண்டே நாளில் இறைவனடி சேர்ந்தார். தந்தையின் மரணம் ஒருபுறம்- காதலியின் துரோகம் ஒருபுறம்- போலீசின் துரத்தல் ஒருபுறம் என திசை திசை தெரியாமல் அல்லாடுகிறானாம் சுரேஷ்.
 
ஒரு அலைபேசியின் இரு மணியோசை, இரு மனங்களை இணைத்து, இன்னலுக்கும் உள்ளாக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. இருவரில் யாருடைய காதல் உண்மையானது என்று நாம் முடிவு சொல்ல முடியாவிட்டாலும், ஒரு முதியவரின் மரணத்த்திற்கு இக்காதல் முன்னுரை எழுதியதுதான்  வேதனையாகும்.
 
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக