புதன், 16 பிப்ரவரி, 2011

குவைத் பொன்விழா; சிறைவாசிகளின் பொது மன்னிப்புக்கு இந்தியா முயற்சிக்குமா..?

குவைத். வளைகுடாவில் வளமான நாடு மட்டுமல்ல. வந்தாரை வாழவைக்கும்  நாடுமாகும். இங்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் பல லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மண்ணின் மைந்தர்களைவிட  கூடுதலாகும். இப்படி தனது நாட்டினர் மட்டுமன்றி, வெளி நாட்டு மக்களுக்கும் வேலைவாய்ப்புகள்  வழங்கி  வாழ்வளித்துக் கொண்டிருக்கும் குவைத்,
பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற 50  வது  ஆண்டு பொன்விழா மற்றும், ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து மீண்ட 20 வது ஆண்டு விழாவை எதிர்வரும் 25 -26 ஆகிய  இரு தினங்கள்  வெகு விமரிசையாக கொண்டாட உள்ளது.
 
இதையொட்டி, திரும்பிய பக்கமெல்லாம் நாட்டின் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கிறது. மின் விளக்குகள் வண்ண வண்ண பூக்களாக கண்ணைப் பறிக்கிறது. மேலும் இந்த விழாவிற்காக இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட ஐம்பது நாட்டு பெரும் தலைவர்கள் வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர். மேலும் நாமறிந்தவரை, வழக்கமாக எந்த நாட்டின் சுதந்திர  விழாவை எடுத்துக் கொண்டாலும், அது ஒரு விழாவாக இருக்குமேயன்றி, அவ்விழாவினால் சாமான்ய மக்களுக்கு எந்த பலனும் விளைவதில்லை. ஆனால் குவைத் இதிலிருந்து மாறுபட்டு,
 
''தனது நாட்டவர் ஒவ்வொருவருக்கும்  தலா 1000 தினார் (ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 561) வழங்கப்படும் என்றும், அவை தவிர இந்நாட்டு மக்களுக்கு[மட்டும்] இலவச உணவு வழங்கப்பட உள்ளது. இது அடுத்த ஆண்டு (2012) மார்ச் 31-ந் தேதி வரை அதாவது 14 மாதங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது என்பதற்கான  உத்தரவை குவைத் மன்னர் ஷேக் சபாஅல்-அகமது அல்-சபா பிறப்பித்துள்ளார்.  
குவைத் அரசின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியதோடு, அந்நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விழாவாக மாற்றிவிட்டது. இவ்வாறான  நிறைவுகள்  மண்ணின் மைந்தர்களிடம் இருந்தாலும், இவ்விழாவையொட்டி இன்னொரு சிறு எதிர்பார்ப்பும் அந்நாட்டு மக்கள் சிலரிடம் உள்ளது. அதாவது இந்த மகிழ்ச்சியான  விழாவை முன்னிட்டு, சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை விடுவிக்கவேண்டும் என்ற உருக்கமான வேண்டுகோள் சம்மந்தப்பட்ட சிறைவாசிகள் குடும்பத்தினர் வாயிலாக எழுப்பப்பட்டுள்ளது.
 
குவைத் நாடாளுமன்றத்தின் முன்பாக குழந்தைகள் சகிதமாக கூடிய சிறைவாசிகள் குடும்பத்தினர் சிலர்,
''அமீர் அவர்களே!
அவர்களை மன்னியுங்கள்!!
எனக்கு என் சகோதரர் வேண்டும்!
எனக்கு என் தாய் வேண்டும்!!
எனக்கு என் தந்தை வேண்டும்!
 
என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியிருந்தனர். அரசும் கருணை காட்டி பொது மன்னிப்பளிக்கும் என உருக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர். இதே போன்ற உருக்கமான எதிர்பார்ப்பு இந்தியாவின் பல மூலைகளிலிருந்தும் வெளிப்படுகிறது. ஆம்! குடும்ப முன்னேற்றத்திற்காக குவைத் சென்ற தனது தந்தை- தனது மகன்-தனது சகோதரன்- தனது கணவன், ஏதோ ஒரு குற்றம் செய்ததால் சிறையில் வாட, அவனது குடும்பமோ வறுமையில் வாட, இந்த நிலை குவைத் பொன்விழா நாளில் மாறாதா? பல லட்சம் இந்தியக் குடும்பங்களில் விளக்கேற்றிய குவைத், சின்ன சின்ன தவறுகள் செய்த சிறைவாசிகளுக்கு மட்டுமாவது கருணை காட்டாதா? பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யாதா? என உருக்கமுடன் காத்திருக்கின்றனர்.
 
மேலும், விழாவில் கலந்துகொள்ள வருகைதரும் இந்திய ஜனாதிபதி அவர்கள், குவைத் சிறையில் உள்ள இந்திய சிறைவாசிகள் குறித்து குவைத் அரசுக்கு கருணைக் கோரிக்கை வைக்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். செய்வாரா ஜனாதிபதி..?
 
டெய்ல்பீஸ்; விழா நாளான்று 'கானூன்' எனப்படும் தொழிலாளர் சம்மந்தப்பட்ட சட்டம் வெளியாக உள்ளதாகவும், அச்சட்டம் தொழிலாளர்கள் நலன் காக்கும் வகையில் இருக்கும் என தகவலறிந்த வட்டராங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக