புதன், 23 பிப்ரவரி, 2011

குடியுரிமை கேட்டு குவைத்தில் கிளர்ச்சி!

குவைத் நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் குடியுரிமை இல்லாத 'பெதூன்' என்றழைக்கப்படும் அரபியர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 300 பேர் அடங்கிய குழுவினர் ஜஹ்ரா எனும் பகுதியில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் போராட்டத்தில்  ஈடுபட்டனர். சிலர் நாட்டின் கொடியுடனும், சிலர் ஆட்சியாளர்களின் புகைப்படங்களை ஏந்தியபடியும், சிலர் குர்'ஆனை கையிலேந்தியும் வந்திருந்தனர். ''எங்களுக்கு குடியுரிமை வேண்டும்; கல்வி-சுகாதாரம்-வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அடிப்படை உரிமை வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
 
போரட்ட செய்தியறிந்து விரைவாக திரண்டு வந்த சுமார் ஆயிரம் போலீசார், போராட்டக்காரர்களை  சுற்றி வளைத்து கலைந்து செல்லுமாறு கூறியும்,  கலைந்து செல்லாததால் தண்ணீரைப் பீச்சியும், கண்ணீர்  புகை செலுத்தியும் கலைத்தனர். இதில் சுமார் ஐந்து பேர் காயமுற்றதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள்  கூறுகின்றன. மேலும், இந்த சம்பவத்தை கண்டித்துள்ள இஸ்லாமிஸ்ட் எம்.பியான ஜமான் அல் ஹர்பஷ், போராட்டக்காரர்களை அடக்குவதற்கு முன்பாகவோ, கைது செய்வதற்கு முன்பாகவோ அவர்களை அழைத்து அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்றும், அதுதான் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே ஈரான்-ஏமன்-லிபியா-பக்ரைன்-ஜோர்டான் என முஸ்லிம் நாடுகளின் போராட்டம் நடந்துவரும் நிலையில்,
குவைத்தின் சுதந்திரதின பொன்விழா  நெருங்கும் நிலையில், இங்கும் போராட்டம் வெடித்துள்ளது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக