வியாழன், 5 ஏப்ரல், 2012

சட்டமியற்றும் அவைகளில் ரகளை; தீர்வு என்ன?

மிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவரான விஜயகாந்த், நாக்கை கடித்துக் கொண்டு நாகரீகமற்ற முறையில் பேசி சபையின் கண்ணியத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த கூட்டத்தொடரில் பத்துநாள் சஸ்பென்ட் செய்யப்பட்டார். அதனால், இப்போது நடைபெற்று அவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சில நாட்கள் அவரால் பங்கேற்கமுடியவில்லை. மேலும் தனது விசயத்தில் சபாநாயகரின் இந்த முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த விஜயகாந்த், தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், இதே போன்று மராட்டிய சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட சிவசேனா, பா.ஜனதாவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் திவேகாரில் உள்ள விநாயகர் கோவிலில் தங்கத்தால் ஆன விநாயகர் சிலை கடந்த வாரம் கொள்ளை போனது. இந்நிலையில், வெள்ளி முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலையுடன் சட்டசபைக்கு வந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் வந்து தர்ணா செய்தனர். இந்த அமளி காரணமாக சபை 2 தடவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கூடியபோது, சட்டசபை விவகாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் பட்டீல், அமளியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சபையின் மரபை மீறி செயல்பட்டதாக 13 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆகியோரை இந்த ஆண்டு முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

சட்டமன்றமும்-நாடாளுமன்றமும் நாட்டின் இதயம் போன்றது. அந்த இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று தெரியாத பாஜக-சிவசேனை கட்சியினர் எல்லாம் மக்கள் பிரதிநியாக வலம் வருவது ஜனநாயகத்திற்கே இழுக்காகும். கோயிலில் உள்ள சாமி சிலை திருட்டு போவது நாட்டில் ஆங்காங்கே அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள்தான். இந்த திருட்டைக் கண்டுபித்து குற்றவாளிகளை தண்டிப்பதற்குத்தான் காவல்துறை உள்ளது. தங்களது கடவுளின் தங்க சிலை காணவில்லை என்றால் இந்த சிவசேனா-பாஜக உறுப்பினர்கள் செய்யவேண்டியது என்ன? சட்டரீதியாக அணுகி தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். அல்லது சட்டமன்றத்தில் இதைக் கிளப்புவதாக இருந்தாலும், பிரச்சினையை பக்குவமாக சபையில் பேசி நடவடிக்கைக்கு அரசை வலியுறுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் கூச்சல் போடுவதும், ரகளையில் ஈடுபடுவதும் சபையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதும் தவறானதாகும். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகள் நாளொன்றுக்கு பல்லாயிரம் கோடி செலவில் நடத்தப்படும் சட்டமன்ற, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கும் வண்ணம் நடப்பது, அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இவ்வாறு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளின் அனைத்து ஊதியங்களையும் சலுகைகளையும் பிடித்தம் செய்வதோடு, அன்றைய நாள் சபையின் அனைத்து செலவுகளையும் அவர்கள் தலையில் கட்டவேண்டும். அப்போதுதான் சபை நிகழ்ச்சிகள் தங்குதடையின்றி நடக்கும் என்பதுதான் அதிகாரவர்க்கம் அறியவேண்டிய ஒன்றாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக