வியாழன், 26 ஏப்ரல், 2012

எதிர்கட்சியை எதிரிக்கட்சியாக்கும் மம்தா பானர்ஜியின் ஆவேச அரசியல்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவ்வப்போது தனது அதிரடி நடவடிக்கைகளால் பரபரப்புச் செய்தியில் இடம் பிடித்து வருகிறார். எளிமையான அவரது தோற்றம், சில இடங்களுக்கு நடந்தே செல்லுதல், ஆஸ்பத்திரிகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளுதல், தீ விபத்து நடந்த இடத்தில் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லுதல், கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மத்திய அரசை பல்வேறு விசயங்களில் கிடுக்கிப்பிடி போட்டு காரியம் சாதித்தல், இவை எல்லாவற்றையும் விட, கடந்த மாதம் ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதற்காக தன் கட்சியைச் சேர்ந்த மூத்த மந்திரி தினேஷ் திரிவேதி மீது எடுத்த அதிரடி நடவடிக்கை. இவைகள் எல்லாம் மம்தாவின் இமேஜை மக்கள் மத்தியில் ஒரு பக்கம் உயர்த்திக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அவரது வேறு வகையான சில நடவடிக்கைகள் அவருக்கு அதே மக்கள் மத்தியில் பின்னடைவையும் உண்டாக்கி வருவதை கவனிக்கத் தவறிவிட்டார்.

அரசியல் தலைவர்களை கார்ட்டூன் வரைவது என்பது சாதரணமாக நடைமுறையில் உள்ளதுதான். ஆனால் சமீபத்தில் மம்தாவை கிண்டல் செய்து கார்ட்டூன் வரைந்த 2 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்ற விமர்சனம் ஒருபுறம் எதிரொலிக்கும் நிலையில், இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அடுத்த அதிரடியை மேற்கொண்டுள்ளது.
 
''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்காரர்கள் வீட்டில் திருமணம் செய்வதை திரிணாமுல் காங்கிரசார் தவிர்க்க வேண்டும். கம்யூனிஸ்டுகாரர்களிடம் எந்த உறவும் நமக்கு வேண்டாம். சொந்தக்காரர்களாக இருந்தால்கூட அவர்களிடம் சம்பந்தம் வேண்டாம். இன்னும் சொல்லப் போனால், கம்யூனிஸ்டுகளிடம் பேசுவதைக்கூட கைவிடவேண்டும். டீக்கடையில் அவர்களுடன் சகஜமாக பேசக்கூடாது. அவர்களது உறவே நமக்கு வேண்டாம். கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களுடன் நாம் தொடர்ந்து பழகி வந்தால், அவர்களை எதிர்க்க இயலாமல் போய்விடும். மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் உங்கள் உறவினராக இருந்தால்கூட இப்போதைக்கு சற்று ஒதுக்கி வையுங்கள்.
அடுத்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் வரையிலாவது கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு வேண்டாம். திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த ஒவ்வொரு தொண்டனும் இதில் உறுதியாக இருக்க வேண்டும்'' என்று மேற்கு வங்க உணவு மந்திரி ஜோதிபிரியா மல்லிக் கூறி, அடுத்த பரப்பரப்பை தொடங்கி வைத்துள்ளார்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; பகைவனும் இல்லை என்ற அடிப்படையில் தான் எந்த காங்கிரசிலிருந்து பிரிந்தாரோ அந்த காங்கிரசுடனே தேர்தல் உடன்பாடு கண்டார் மம்தா பானர்ஜி. மத்திய நடுவன் அரசில் அங்கம் வகித்தார். ஆனால் தனது மாநிலத்தின் எதிர்கட்சியான கம்யூனிஸ்டு கட்சியை எதிரிக் கட்சியாக பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. அதிலும் அக்கட்சியினரோடு ஒட்டு உறவு இருக்கக் கூடாது என இரு கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் ஜென்மப்பகையை உண்டாக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் ஆரோக்யமான அரசியலுக்கு அழகல்ல என்பதை மம்தா புரிந்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் திமுகவை எதிரிக் கட்சியாக கருதும் ஜெயலலிதாவையும் தாண்டியதாக மம்தாவின் நடவடிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுவதும் நமக்கு நியாயமாகவே படுகிறது. அரசியல் என்பதை கொள்கை மோதலாக கருதவேண்டுமே தவிர, அதை குடும்ப மோதல் அளவுக்கு நிலைமையை மோசமாக்கும் செயலை நமது அரசியல்வாதிகள் கைவிடும் நாள் எப்போது?
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக