வியாழன், 26 ஏப்ரல், 2012

அவைக்கு வாராதவர் அஞ்சா நெஞ்சனா? விஜயகாந்தை விளாசிய அமைச்சர்!

மிழக சட்டமன்றத்தின் சாபக்கேடா என்னோவா எதிர்கட்சித் தலைவராக வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டமன்றத்திற்கு செல்வது எட்டிக்காயாக கசக்கிறது போலும். இன்றைய முதல்வர் ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் அவைக்கு வராமல் ஆறுமாதத்திற்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு காலத்தை கடத்தினார். அதே வழியில் இப்போது திமுக தலைவர் கருணாநிதியும் கையெழுத்து போட்டு காலத்தை கடத்துகிறார். மக்களுக்காகவே கட்சி தொடங்கினேன் என்று மார்தட்டும் தட்டும் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தும் சபைக்கு வராமல் காலம் கடத்துகிறார். 

இவர் சட்டமன்றத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாக கூறி கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் பத்துநாள் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அந்த பத்துநாள் நிறைவுற்று பல நாட்கள் ஆனால் பின்னும், பல்வேறு முக்கிய மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணிக்கிறார். இது தொடர்பாக தேமுதிக உறுப்பினரின் பேச்சால் விஜயகாந்த் ஏகப்பட்ட கேலிக்கு உள்ளாகியுள்ளார்.

பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து பேசிய தேமுதிக உறுப்பினர் வி. முத்துகுமார் (விருத்தாசலம்) விஜயகாந்தை அஞ்சா நெஞ்சன் எனப் புகழ, அப்போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் அஞ்சாத நெஞ்சம் உடையவர் என்றால் ஏன் சட்டப் பேரவைக்கு வரவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த அக்கட்சியின் கொறடா வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு): பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விஜயகாந்த்துக்கு 10 நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். பேரவையில் வழங்கப்பட்ட தண்டனையை ஏற்கவில்லை என்பதால்தான் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார். தீர்ப்பு வந்தபிறகு அவர் பேரவைக்கு வருவார். எங்களுக்கு எந்தவித அச்சமும் கிடையாது'' என்று ஒரு நகைச்சுவையான விளக்கம் சொன்னார். 

இதற்கு மற்றொரு சினிமாக்காரரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் (தென்காசி): நீதிமன்றத்தில் 5 ஆண்டுகள் வரை வழக்கு நிலுவையில் இருந்துவிட்டால் விஜயகாந்த் பேரவைக்கு வராமலேயே இருந்து விடுவாரா? பேரவைக்கு வராமல் இருந்தால் தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது'' என்று நெத்தியடியாக சொல்ல, மூத்த அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனோ ரஜினிகாந்த் பாணியில், எப்ப வருவார் எப்படி வருவார் என்று தெரியாது. ஆனால்
வேண்டிய நேரத்தில் அவர் வருவார்'' என்று சிரிப்பு மூட்டினார். 

இதையெல்லாம் விட, சம்மந்தப்பட்ட விஜயகாந்த், ''
சட்டசபைக்கு வர தைரியம் இருக்கிறதா? என்று அ.தி.மு.க.வினர் கேட்டுள்ளனர். அப்படியில்லாமலா தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் பாதுகாப்பு இல்லாமல் சென்று மக்களை சந்தித்து வருகிறேன். அவர்களது தலைவர் அவ்வாறு சென்று வர முடியுமா? என்று கேட்டு கிச்சு கிச்சு மூட்டியுள்ளார். இவர் சட்டமன்றத்திற்கு வராதது பற்றி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல்., தொகுதிக்கு போவது பற்றி பேசுகிறார். இவர் தொகுதிக்கு போகும்போது ஒரு போலீஸ் கூட இல்லாமல் ரொம்ப தைரியமாக[!] செய்யும் இவர், சட்டமன்றத்திற்கு செல்ல பயப்படுவது ஏன்? அங்கு இவரை என்ன செய்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார்? மேலும் மற்றொரு இடத்தில், சட்டமன்றத்திற்கு தொடர்ந்து செல்லவேண்டும் என்று சட்டம் எதுவும் இருக்கிறதா? என்று கேட்டு தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார்.

சட்டசபைக்கே செல்லாமல், சபையில் மக்கள் பிரச்சினையை பேச முடியவில்லை; எனவே மக்கள் மன்றத்தில் பேசுகிறேன் என்றெல்லாம் விஜயகாந்த் சொல்வது கண்துடைப்பாகவே மக்களிடம் கருதப்படும் என்பதை விஜயகாந்த் உணர்ந்து, இந்த கூட்டத்தொடர் நிறைவுறும் தருவாயில் உள்ளதை அறிந்து, தனது பதவிக்கு உள்ள அதிகாரத்தை புரிந்து, சபை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதிப்பாரா? அல்லது சினிமா வசனம் போல் பேசியே காலம் கடத்துவரா? என்று மக்கள் கண்காணிக்கிறார்கள் என்பதை விஜயகாந்த் புரிந்துகொள்ளட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக