வியாழன், 26 ஏப்ரல், 2012

ஒரு பிச்சை'க்குப் பின்னால் ஒரு லட்சியம்!

சிக்கு பிச்சை எடுப்பார் சிலர். பல வீட்டு ருசிக்கு பிச்சை எடுப்பார் சிலர். பணத்தை சேகரிப்பதற்காக பிச்சை எடுப்பதையே பிழைப்பாக கொண்டு திரிவோர் பலர். இவரும் பிச்சை எடுத்தார். இந்த பிச்சைக்குப் பின்னால் ஒரு லட்சியமும் விடாமுயற்சியும் இருந்தது. அது என்ன? ''மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து மகளை என்ஜினீயரிங் படிக்க வைக்கும் ஊனமுற்றவர்'' என்று ஒரு செய்தி நமது புருவத்தை உயர்த்தியது. நமது பார்வையை அந்த செய்தியில் செலுத்தினோம்.

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ரவிச்சந்திரன் என்பவர் இவர் கடந்த 86ம் ஆண்டு நடந்த ரெயில் விபத்தில் தனது வலது காலை இழந்தார். ஆனாலும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தாமல், ஒற்றைக்காலுடன் தன்னால் இயன்ற வேலையை செய்து பிழைத்து வந்திருக்கிறார். திருமணமும் செய்து இரு பெண்மக்களை பெற்று வளர்த்து வந்திருக்கிறார். குழந்தைகள் படிக்க வேண்டிய காலம் நெருங்கியது. தனது வயிற்றுக்காக பிச்சை எடுக்காமல் கவுரவமாக வாழ்ந்த அவர், குழந்தைகள் படிப்பிற்கு தனது ஊதியம் போதாத காரணத்தால், தன் குழந்தைகளை எப்படியேனும் கல்விக்கடலில் கரைசேர்க்க எண்ணியவராக, சுய கவுரவத்தை விட்டு மகள்களின் படிப்புக்காக மதுரை பெரியார் பஸ் நிலையத்திலும், வீதிவீதியாகவும் உதவி கேட்க ஆரம்பித்தார். 
போவோர் வருவோரிடம் தன் குழந்தைகளின் படிப்புக் காகத்தான் இப்படி யாசகம் பெறுகிறேன் என்று கூறியே பணம் கேட்டார். நல்ல உள்ளங் களின் உதவியால் தற்போது அவருடைய மூத்த மகள் புதுக்கோட்டையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு பி.இ. படிக்கிறார். அடுத்த மகள் பிளஸ்1 தேர்வு எழுதியுள்ளார். யாசகம் பெற்று பிள்ளைகளை படிக்க வைத்தாலும் அது போதுமானதாக இல்லை. இதற்காக பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். 
இந்த நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் முயற்சியால், இவரது பி.இ. படிக்கும் மகளுக்கு லேப்டாப் வழங்கி கவுரவித்துள்ள மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், 'படிப்பது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் செய்வேன்' என்று கூறியுள்ளார். 

கல்வி வளர்சிக்காக இந்த பட்ஜெட்டில் 17 .552 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர், தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவ மாணவியருக்கு 25 சதவிகித வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தவிட்டுள்ள முதல்வர், ரவிச்சந்திரன் பிள்ளைகளின் கல்விசெலவை முழுமையாக அரசே ஏற்கும் என்று அறிவித்தால் அந்த தந்தையின் லட்சியம் சிரமமின்றி நிறைவேறும். தமிழகத்தை கல்வியிலே முதன்மை மாநிலமாக்க முயற்சிக்கும் முதல்வரின் நோக்கத்திற்கு ஏற்ற செயலாகவும் இருக்கும். அதோடு இலவசங்கள் வழங்குவதை நிறுத்தி, அதற்காக ஒதுக்கப்பட்ட தொகைகளை கொண்டு ஏழைகளுக்கு இலவச கல்வி வழங்க முதல்வர் ஜெயலலிதா முன் வரவேண்டும். 

இந்த இடத்தில் பிச்சைக்காரர்கள் பற்றி சொல்லவேண்டியுள்ளது. வேற வழியே இன்றி நிர்பந்தம் காரணமாக பிச்சை எடுப்பதை குறைகாண முடியாது. ஆனால் ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வழிஇருந்தும் முதலில்லா வியாபாரமாக பிச்சை எடுப்பவர்கள் கண்டத்திற்குரியவர்கள். பிச்சை எடுத்தே பல லட்சம் சேர்த்தவர்கள் பற்றிய செய்திகளெல்லாம் பத்திரிக்கைகளில் அவ்வப்போது வருகின்றன. இவர்களைப் போன்றவர்களால் உண்மையிலேயே வறுமையில் வாடுபவர்களை கூட மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். இப்படிப்பட்ட மானத்தை இழந்து பொருளீட்டுவதில் மகிழ்ச்சி காணும் கூட்டத்திற்கு மத்தியில், மானத்தை இழந்தேனும் மகள்களின் லட்சிய வாழ்க்கைக்கு வழிகாட்டிய ரவிச்சந்திரன் பாராட்டுக்குரியவர் தான் என்பதில் சந்தேகமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக