வியாழன், 5 ஏப்ரல், 2012

'மணல்திட்டு' புனிதமென்றால் மஸ்ஜித் புணிதமில்லையா?

ராமரை வைத்து மத்தியில் ஆட்சியைப் பிடித்த மதவாத பாஜக, ஆட்சியில் இருந்த காலத்தில் ராமரை அல்ல ராமர் கோயில் கட்டும் திட்டத்தை வனவாசத்திற்கு அனுப்பிவிட்டு, தேவைப்படும் போது மட்டும் 'ராமர்கோயில்' எங்கள் லட்சியம் என்று முழங்குவதைக் காணலாம். உ.பி.யில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட தனது தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்திலும் ராமர் கோயில் ஸ்லோகத்தை முழங்க பாஜக தவறவில்லை. ஆனாலும் உ.பி.மக்கள் பாஜகவை வீழ்த்தி சமாஜ்வாடிக்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள். உ.பி., மற்றும் சில மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி, கர்நாடகாவில் எடியூரப்பா கொடுத்துவரும் குடைச்சல் இவைகளில் இருந்து மக்களை திசை திருப்ப அதே ராமரை மீண்டும் துணைக்கு அழைத்துள்ளது இந்த சங் பரிவார் படைகள்.

தமிழகத்தின் கனவுத் திட்டம் என்று வர்ணிக்கப்படும் சேது சமுத்திரத் திட்டம், சுமார் 2400 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2005 ம் ஆண்டு பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் தொடங்கிவைத்த திட்டம், இந்த மதவாத கூட்டத்தின் 'ராமர் பாலம்' என்ற கோஷத்தால் முடங்கிப்போனது. மக்களின் வரிப்பணம் கடலில் கரைந்த பெருங்காயமாக ஆகிவிட்டது. இந்த சேதுசமுத்திர திட்டத்தைப் பற்றி தொடங்கிவைத்த மன்மோகனின் காங்கிரசும் சரி, அதை தமிழகத்திற்கு போராடி பெற்றுத் தந்ததாக மார்தட்டிக் கொள்ளும் திமுக., மதிமுக கட்சிகளும் மறந்தே போய்விட்டன.

இந்நிலையில் ஜனதாக் கட்சி என்ற பெயரில் சங்பரிவாரக் கட்சி நடத்திவரும் பிரபல அரசியல் காமெடியர் சுப்ரமணிய சாமி, ''ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய, மீண்டும் ராமர் பாலம் என்று சொல்லப்படும் அந்த மணல்திட்டு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எத்தனையோ அதிமுக்கியமான வழக்கெல்லாம் உச்சநீதிமன்றத்தில் உறக்கத்தில் இருக்க, இந்த மணல்திட்டு விஷயத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது பற்றிய முடிவை 2 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், வழக்கு விவாதங்களை தொடங்குவோம்' என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது பற்றி உரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது அவசியம். ஆகவே, பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்' என்று கேட்டதன் அடிப்படையில், கூடுதலாக 2 வாரங்கள் கால அவகாசம் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 19ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

இதற்கிடையில் இந்த மணல்திட்டு பிரச்சினை பாராளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. திமுகவினர் சேதுசமுத்திர பணிகளை உடனே துவங்கவேண்டும் என்று குரல் எழுப்ப, மறுபக்கம் அதிமுகவோ சங்பரிவாரக் குரலில், இந்த மணல்திட்டை நினைவுச் சின்னமாக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று குரல் எழுப்புகிறது. மேலும், ''ராமர் பாலத்தை (ஆதம் பாலம்) தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும், அதனை கையகப்படுத்தி பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத்திற்கும் மற்றும் மத்திய அரசின் கலாசார அமைச்சகத்திற்கும் உத்தரவிடக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டு மறுஉத்தரவு வரும் வரை ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும், எந்தவித சேதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சேது சமுத்திர கழகம் மற்றும் மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரியும் கடந்த 2007ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தனது 'இன'உணர்வைக் காட்டிய ஜெயலலிதா, தற்போது இந்த விவாகரம் சூடுபிடித்துள்ளதையொட்டி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 
''தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலத்தின் குறுக்கே சேது சமுத்திர கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளதோடு,
இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தனியாக பதில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், இராமாயணம் என்பது ஒரு புராணம். அந்த புராணத்தில் இலங்கையில் சிறைவைக்கப்பட்ட தனது மனைவி சீதையை மீட்க இலங்கை செல்வதற்காக ராமர் கட்டிய பாலம் தான் இது என்பது சங்பரிவார்களின் கூற்றாகும். இதையொட்டியே ராமர், பாலம் கட்டும் அளவுக்கு அவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்ப, அவரது நாக்கை வெட்டுபவருக்கு பரிசு என்று சங்பரிவார 'வேதாந்தம்' அறிவித்ததெல்லாம் பழங்கதை. இது ஒருபுறமிருக்க, அவர்களின் கூற்றுப்படி ராமர் காட்டினார் என்றே வைத்துக் கொண்டாலும் ராமர் சீதையை மீட்டிக் கொண்டுவந்து விட்டார். சீதையும் தீயில் இறங்கி தனது கற்பை நிரூபித்தும் விட்டார். இப்போது ராமனும் இல்லை. சீதையும் இல்லை. ராமர் போன அந்த பாலம் இப்போது மனிதன் நடந்து போகும் வகையில் இல்லை. கடலுக்கடியில் இருக்கிறது. இனி ராமரே வந்தாலும் இந்த பாலம் வழியாக இலங்கை செல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இலங்கைக்கு அதிநவீன பயணிகள் கப்பல் மத்திய அரசால் தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படுகிறது. அதில் இலங்கை போகலாம். அல்லது வைகோ பாணியில் கள்ளத் தோணி ஏறி இலங்கை போகலாம். அல்லது விமானம் மூலம் இலங்கை போகலாம். அதெல்லாம் சரி. இனி ராமர் இலங்கை போய் எந்த மனைவியை மீட்கப் போகிறார்? ஆக ராமரே இருந்தாலும் அவருக்கே பயன்படாத இந்த மணல்திட்டை வைத்து அரசியல் நாடகம் நடத்துவது சரியா? சரி ராமர் பாலம் பற்றி குய்யோ முறையோ என கூப்பாடு போடும் இவர்கள், ராமர் வழியில் இலங்கை சென்றால் இந்த பாலத்தை தான் பயன்படுத்துகிறார்களா? சொகுசு விமானம் மூலம் செல்கிறார்களா? இன்று பயனில்லாவிட்டலும் அது எங்கள் கடவுளோடு சம்மந்தப்பட்டது; எனவே அதை நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்று இவர்கள் சொல்வார்களானால், கடலுக்கு கீழே உள்ள இந்த மணல்திட்டை விட, பூமிக்கு மேலே முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மஸ்ஜித் என்ற புனித இடம் இவர்களால் தரைமட்டமாக்கப்பட்டதே! அப்படியானால் இவர்கள் நினைத்தால் ஒரு மணல்திட்டும் புணிதமாகிவிடும். மற்றவர்களின் பள்ளிவாசல் இவர்களுக்கு வெறும் கட்டிடமாகத் தெரியும் அப்படித்தானே! எல்லாம் அரசியல் படுத்தும் பாடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக