திங்கள், 23 ஏப்ரல், 2012

அட்சய திருதியை நாள்; பக்தியின் பெயரால் ஒரு வியாபார மோசடி!

ட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கை இந்துக்கள் தாண்டி, இன்று பரவலாக அனைத்து சமுதாய மக்களில் சிலரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. மக்களின் பக்தி முலாம் பூசப்பட்ட இந்த மூடநம்பிக்கையை பயன்படுத்தி நகைக்கடை வியாபாரிகள் நன்றாகவே கல்லா கட்டுகிறார்கள். தங்கம் விலை விமானத்தை விட உயர்வாக ரெக்கை கட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்திலும் நகைக்கடையில் மண்ணள்ளி போட்டால் கூட கீழே விழாத அளவுக்கு மக்கள் கூட்டம். எந்த அளவுக்கென்றால் ஏனைய நாட்களில் சாதாரணமாக பணத்துடன் சென்றால் நகை வாங்கிவிடலாம். ஆனால் இன்று முன்கூட்டியே டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே நகை வாங்கமுடியும் என்று சொல்லும் அளவுக்கு சில பெரிய நகைக்கடைக் காரார்கள் டோக்கன் சிஸ்டம் கொண்டுவரும் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்மையில் இது தெளிவான ஒரு மூடநம்பிக்கை என்று பல்வேறு காலகட்டங்களில் சிந்தனையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டாலும் மக்கள் தெளிவடைய மறுக்கிறார்கள். கீழ் வரும் இந்த செய்தியை படித்த பின்பாவது தெளிவடைவார்களா என்று பார்ப்போம்.

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் கவுசல்யா என்ற இல்லத்தரசி அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கி, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவத்தை கூறியதாக தினத்தந்தி நாளிதழில் வந்துள்ள செய்தி;

''எல்லோரும் சொல்கிறார்களே என்று, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று, நானும் என் கணவரும் ஒரு நகைக்கடைக்குச் சென்றோம். அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்று தங்க நாணயம் ஒன்றை வாங்கினோம். ஒரு வருடம் கடந்துவிட்டது. 

இன்னும் ஓரிரு மாதத்தில் எங்கள் பேத்திக்கு பெயர் சூட்டு விழா நடக்க உள்ளது. பேத்திக்கு தங்கத்தில் நகை செய்யலாம் என்று கருதி, கடந்த ஆண்டு அட்சய திருதியை அன்று வாங்கிய தங்க நாணயத்தை எடுத்துக்கொண்டு, பொற்கொல்லர் ஒருவரிடம் சென்றோம். தங்க நாணயத்தை எங்களிடம் இருந்து வாங்கிய பொற்கொல்லர், நாணயத்தை மேலும் கீழும் திருப்பித் திருப்பி பார்த்தார்.

''ஏம்மா, அட்சய திருதியை நாளில் வாங்கிய நாணயமா? என்று ஒருவித இளப்பமான தோரணையில் கேட்டுவிட்டு, மாற்று ரொம்ப கம்மியா இருக்கிறது அம்மா!' என்று சொன்னார். எங்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. இனிமேல், 'அட்சய திருதியை நாளில் நகை வாங்குவதைவிட வேறு ஒரு நாளில் வாங்கினால் நல்லது' என்று உறுதிமேற்கொண்டேன்.'
இவ்வாறு இல்லத்தரசி கவுசல்யா கூறினார். 

மக்கள் திருந்துவார்களா? அல்லது இன்னும் கெடுவோம் என்ன பந்தயம் என்று கேட்பார்களா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக