வியாழன், 15 மார்ச், 2012

முஸ்லிம்களை உயிரோடு எரித்துக்கொன்றவர்கள் விடுதலை; ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறிய குஜராத் காவல்துறை!

ரு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதோடு காவல்துறையின் பணிகள் முற்றுப் பெறுவதில்லை. கைது செய்யப்பட்டவர் உண்மையிலேயே குற்றம் செய்தவர் தான் என்றால் கூட, காவல்துறை உரிய சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கத் தவறினால் அந்த குற்றவாளியை போதிய ஆதாரமின்மையால் நீதிமன்றங்கள் விடுதலை செய்துவிடும். அதுபோலத் தான் குஜராத்திலும் நடந்துள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவர வழக்கில் இருந்து 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். போதிய ஆதாரங்கள் இல்லாததால், சந்தேகத்தின் பலனில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிப்பதாக ஆமதாபாத் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

குஜராத்தில் 2002-ல் நிகழ்ந்த வன்முறையின் போது கோமதிபூர் பகுதியில் இளைஞரையும், அவரது தாயாரையும் தீ வைத்து எரித்ததாக 7 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டார். மீதமுள்ள 6 பேரும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றம் கூறியுள்ளது: 2002 ஏப்ரல் 21-ல் இந்த சம்பவம் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் கடை வைத்திருந்த ஒருவர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிரிகள் 2006-ம் ஆண்டுதான் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவரும் பகல் நேரத்தில் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரையும் எரிக்க அந்தக் கும்பல் எங்கிருந்து இவ்வளவு பெட்ரோலை எடுத்து வந்தது என்பதை போலீஸ் தரப்பு விளக்கவில்லை. சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு சாட்சியைக் கூட காட்ட முடியவில்லை என்று கூறி  குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது நீதிமன்றம்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைக்கண்டு, நீதிமன்றத்தை நோவதா? அல்லது காவலர்களை குறைகூறுவதா என்று தெரியவில்லை. இரண்டு பேர் பட்டபகலில் உயிரோடு எரித்து கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது நிஜம். இந்த நிஜத்தை ஒட்டி கைது செய்யப்பட்டவர்கள் உண்மையில் அந்த படுகொலையில் சம்மந்தப் பட்டவர்களா என்றுதான் நீதிமன்றம் ஆய்வு செய்யவேண்டுமே தவிர, உயிரோடு எரிப்பதற்கு எங்கே பெட்ரோல் வாங்கினார்கள்? எத்தனை லிட்டர் வாங்கினார்கள்? பகலில் உயிரோடு எரித்திருக்க முடியுமா என்றெல்லாம்  நீதிமன்றங்கள் ஆய்வு செய்யத் தொடங்கினால் பெரும்பான்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட முடியாமலே போக வாய்ப்புள்ளது. அடுத்து 2002 ல் நடந்த ஒரு படுகொலைக்கு பத்து ஆண்டுகள் கடந்த பின்னும் உரிய சான்றுகளை நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பிக்க தவறியது மோடி அரசின் நிர்வாகத் திறமைக்கு பெரும் சாட்சியமாகத் திகழ்கிறது.

மேலும், நீதிமன்றத்தால் இப்போது விடுதலை செய்யப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என்றே வைத்துக் கொண்டாலும், உண்மையில் அந்த படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குஜராத் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடாதது ஏனோ? ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களும் விடுதலையாகி விட்டார்கள் என்றால் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்று நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் கடமையல்லவா? இதை உணர்ந்து உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட ஆவன செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக