வியாழன், 15 மார்ச், 2012

போர்குற்றம் பற்றி அமெரிக்கா பேசுவதா?

ருவர் அநீதியைக் கண்டிப்பதாக இருந்தால், அவ்வாறு கண்டிப்பவர் பிறருக்கு அநீதி இழைப்பதில் இருந்து தனது கரத்தை பாதுகாத்துக் கொண்டவராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அநீதியில் திளைப்பவன் மனிதநேயம் பேசினால் மக்கள் நகைப்பார்கள். அதுபோல் உலக அளவில் அநீதியின் மறுபெயர் அமெரிக்கா என்று சொல்லும் அளவுக்கு அன்னிய நாடுகளில் புகுந்து போர்குற்றம் புரிந்த, இப்போதும் போர் குற்றத்தை சளைக்காமல் செய்து வரும் அமரிக்கா, இலங்கையின் மீது போர்க்குற்றம் தொடர்பான வரைவுத் தீர்மானத்தை ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. திருத்தங்களைச் செய்வதற்கு வசதியாக, உறுப்பு நாடுகளுக்கு தீர்மான நகல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் நிறைவேற உறுப்பு நாடுகளின் சரிபாதிக்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு தேவை என்று கூறப்படுகிறது. 

இது ஒருபுறமிருக்க, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த போரில் பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்; இன்றும் பல்வேறு பாதிப்புகளில் அந்த மக்கள் உழன்று வருகிறார்கள். இலங்கை அரசு விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களின் உயிரை சூறையாடியது. எனவே இலங்கை அரசு அதற்கான தண்டனையை அடைந்தே தீரவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரத்தில் இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் போர். அதாவது தனி அதிகாரம் என்ற பெயரில் ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராடக் கிளம்பிய ஒரு குழுவிற்கு எதிரான போர். ஆயுததாரிகளை ஒழிக்கும் இந்த போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதால் இலங்கை போர் குற்றம் புரிந்தது என்ற அமெரிக்காவின் பேச்சு நியாயம் என்றே வைத்துக் கொண்டாலும், இதே போன்று இந்தியாவில் காஷ்மீர் பகுதியில் விடுதலை கேட்டுப் போராடுபவர்களை கொல்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களை இந்திய ராணுவம் கொன்று குவிக்கிறதே! இது அமெரிக்காவின் பார்வையில் போர் குற்றமாக தெரியவில்லையா? இன்னும் சொல்லப்போனால் அவவாறு காஷ்மீர் விடுதலை கேட்டு போராடுபவர்களை இந்தியாவின் வழிமுறையைப் பின்பற்றி அமெரிக்காவும் 'தீவிரவாதிகள்' என்று சொல்கிறதே! குஜராத்-மும்பை என நாட்டின் பல்வேறு பகுதிகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்களே! இதெல்லாம் ஒரு குற்றமாக அமெரிக்காவிற்கு தெரியவில்லையா? இதெல்லாம் போர் சம்மந்தப்பட்டது அல்ல; பாதுகாப்பு மற்றும் மத ரீதியானது என்று அமெரிக்கா கூறுமானால், போர் என்று அறிவித்து அப்பாவிகளை கொன்றால் தான் குற்றம். சாதரணமாக ஒரு சாராரை, சாரை சாரையாக கொன்றால் அது உள்நாட்டு விவகாரமா? போனாப்போகுது. இதையாவது விட்டு விடலாம். காஸா மீது ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேல் நாள்தோறும் நிகழ்த்தி வரும் போர்குற்றம் அமெரிக்காவின் கண்களுக்கு தெரியாதது ஏன்? தெரியவில்லை என்பதை விட போர்குற்றம் புரியும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக நிற்கும் அமெரிக்கா போர்குற்றம் பற்றி பேச தகுதியுண்டா?

இதையும் தாண்டி, இலங்கை உள்நாட்டுப் போர் பற்றி பேசும் அமெரிக்கா, அடுத்த நாடுகளில் புகுந்து செய்த அநீதிகள் கொஞ்சமா? நஞ்சமா? ஈராக்கின் மீது இரண்டு முறை போர் தொடுத்து அப்பாவிகளை கொன்ற, ஆப்கானில் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்ற, லிபியா மீது போர் தொடுத்து அப்பாவிகளை கொன்ற, பாகிஸ்தான் மீது அறிவிக்கப்படாத போர் தொடுத்து, ஆள் இல்லா விமானம் மூலம் அப்பாவிகளை கொன்றதே அமெரிக்கா,இவைகள் போர்குற்றம் இல்லையா? இப்போது ஈரானை தாக்கி போர்குற்றம் புரிய தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறதே! இது போர்குற்றம் இல்லையா? ஜப்பானில் நாகாசாகியும்- ஹிரோஷிமாவும் அமெரிக்கா போர்க்குற்றங்களின் கேந்திரம் என்று இன்றும் சாட்சியம் சொல்லிகொண்டிருக்கிறதே! இப்படிப்பட்ட அமெரிக்கா போர்குற்றம் பற்றி பேசுவதா?

எனவே, ஐநாவில் அமெரிக்கா செய்யவேண்டியது முதலில் தன் மீதே போர்க்குற்றம் பற்றிய தீர்மானத்தைக் கொண்டு வந்து, அதற்குரிய தண்டனையை அனுபவித்து விட்டு, பின்னர் அடுத்த நாட்டு போர்குற்றம் பற்றி பேசட்டும். இல்லையென்றால் ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாய் உள்ளது என அமெரிக்காவைப் பார்த்து உலகம் கைகொட்டிச் சிரிக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக