வியாழன், 29 மார்ச், 2012

அரசுப் பள்ளிக்கூடங்கள் நக்சலைட்டுகளை உருவாக்குதாம்; சொல்கிறார் ஸ்ரீ ஸ்ரீ.

எல்லா சாமியார்களும் தங்களை சாமான்ய மனிதரிலிருந்து வேறுபடுத்திக் காட்ட தங்களின் பெயருக்கு முன்னால் ஒரு 'ஸ்ரீ' சேர்ந்தால், சாமியார்களில் தான் மாறுபட்டவர் என்று காட்ட தன் பெயருக்கு முன்னால் இரண்டு 'ஸ்ரீ' போட்டு வலம் வருபவர் ரவிசங்கர். இந்த ஸ்ரீ ஸ்ரீரவி சங்கர் சமீபத்தில் பேசும் போது, 'இந்தியாவில் அரசு பள்ளிக்கூடங்களில் கழிவறை வசதி இல்லை. பள்ளிக்கூடங்கள் எல்லாம் நக்சலைட்டுகள் வளரும் கூடாரம் ஆகி விட்டன' என்று பேசியது புதிய சர்ச்சயை கிளப்பியுள்ளது.

அரசு கல்வியகங்கள் நக்சல்கள் வளரும் கூடாரங்கள் என்று குற்றம் சாட்டும் இந்த ரவிசங்கர், எந்த வகையில் அங்கு பயில்பவர்கள் நக்சல்களாக மாறுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களை நக்சல்களாக மாற்றுகிறது என்று சொல்ல வருகிறாரா? அல்லது அரசு கல்வியகங்களின் நிர்வாக முறை நக்சல்களை வளர்க்கிறது என்று சொல்லவருகிறாரா? அப்படி பார்த்தால் இந்த ஸ்ரீ ஸ்ரீ தமிழகத்தில் பாபநாசம் என்ற ஊரில் பிறந்தவர் தானே! இவர் எந்த காண்வென்டில் படித்தார்? அரசு பள்ளியில் இவர் படித்திருந்தால் இவரது இப்போதைய பேச்சின்படி இவரும் ஒரு நக்சலாக அல்லவா மாறியிருக்க வேண்டும்? ஆனால் இவர் வாழும்கலை எனும் பெயரில் கோடிகளில் புரளும் கோமகனாக அல்லவா கோலோச்சுகிறார். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் பற்றி பேசும் இவர், வாளோடும், துப்பாக்கியோடும், குண்டாந்தடிகளோடும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பயிற்சி[?] வகுப்பு பற்றி பேசியதாக பார்க்க முடியவில்லையே? ஏன் அணிந்திருக்கும் ஆடையின் நிறம் ஒன்று என்பதால் வந்த பாசமோ?

இதற்கிடையில் நான் அவ்வாறு பேசவில்லை என்று இந்த ஸ்ரீ ஸ்ரீ மறுத்தாலும், ''ஸ்ரீரவி சங்கரின் கருத்தை ஏற்க முடியாது. முன்னாள் ஜனாதிபதிகள், பிரபல நீதிபதிகள், அரசில் உயர் பதவி வகிப்போர் என்று ஏராளமான பிரபலங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா?' என்று கேட்டு மத்திய மனித வளத்துறை மந்திரி கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ள செய்தி, இந்த ஸ்ரீ ஸ்ரீ இவ்வாறு பேசியுள்ளார் என்பதற்கு சான்றாக திகழ்கிறது. இனியாவது இந்த ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ போன்ற சாமியார்கள், தங்களை சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களாக காட்டுவதற்காக இதுபோன்று பரபரப்பாக பேசுதல், உண்ணாவிரத நாடகம் ஆடுதல் இதையெல்லாம் விட்டு விட்டு, சேர்த்து வைத்துள்ள கோடிகளை மக்கள் நலனுக்கு செலவு செய்வதன் மூலம் தங்களை பரிசுத்தப்படுத்த முன் வரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக