வெள்ளி, 23 மார்ச், 2012

இது தண்டனையா? அல்லது அறியாமையா?

ரு மனிதன் ஒரு கொலை செய்தாலும், ஒரே நேரத்திலோ பல்வேறு காலகட்டங்களிலோ பல கொலைகள் செய்தாலும் அவனுக்கு அதிகபட்சமாக ஒரே ஒரு மரணதண்டனை தான் விதிக்கமுடியும். இதனால் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் கொலைக்கு கொலை என்ற சட்டத்தை வழங்கி அவனுக்கு மரணதண்டனை விதிப்பதோடு, மறுமையில் அவனது கொலைகள் பற்றி விசாரிக்கப்படும் என்று சொல்கிறது. கொலைக்கு கொலை என்ற இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்று சொல்பவர்கள் இதை விட ஒரு சிறந்த சட்டத்தை ஒருபோதும் கொண்டுவரமுடியாது. ஆனால் அறிவுக்குப் பொருந்தாத, நகைப்பிற்குரிய சட்டத்தை சளைக்காமல் செயல்படுத்துகிறார்கள். அதில் ஒன்றுதான் இப்போது நாம் பார்க்கவிருக்கும் செய்தி;

கவுதமாலா நாட்டில் 1960ல் தொடங்கி சுமார் 36 ஆண்டுகள் உள்நாட்டு போர் நடந்தது. அப்போது லாஸ்டோஸ் இராஸ் என்ற இடத்தில் 1982ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 201 பேர் சம்மட்டியால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் புதைக்கப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தமான நடவடிக்கையில் அமெரிக்காவில் லாஸ் ஏன்சல்ஸ் நகரைச் சேர்ந்த பெட்ரோ பிமென்டெல் (வயது 55) உள்பட 20 வீரர்கள் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. தற்போது இவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.

இந்த வழக்கில் பெட்ரோ பிமென்டெலுக்கு 6,060 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. அதாவது பிமென்டெலுக்கு ஒவ்வொரு கொலைக்கும் 30 ஆண்டுகள் (201 கொலை) வீதம் 6,030 ஆண்டுகளும், மனித உரிமையை மீறியதற்காக 30 ஆண்டு என மொத்தம் 6,060 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பு உண்மையில் அறிவுப்பூர்வமானதா? அனைத்துக் கொலைகளுக்கும் தண்டனை விதிப்பது பெரிதல்ல. ஆனால் அந்த தண்டனை ஆண்டுகள் முழுவதும் அவன் உயிர்வாழ வேண்டுமே? இன்றைய மனிதன் ஆயுள்காலம் மிக மிக அதிகபட்சமாக 150 ஐ தாண்டுவதில்லையே! பிறகு எப்படி  6,060 ஆண்டுகள் அவன் சிறையில் கழிப்பான்? ஒருவேளை அவன் செத்த பின்னும் பிணத்தை சிறையில் வைத்து நாட்களை கழிப்பார்களோ என்னவோ? இதைவிட அவனை ஒருமுறை தூக்கிலிடுவது தான் சிறந்த தண்டனையாக இருக்கமுடியும். இது ஒருபுறமிருக்கட்டும். 201 பேர் படுகொலைக்கு காரணமானவருக்கு 6,060 ஆண்டுகள் தண்டனை என்றால், பல்லாயிரம் மக்களின் படுகொலைக்கு காரணமான முதலாம் புஷ், இரண்டாம் புஷ், கிளிண்டன், ஒபாமா, சர்கோஸி, கேமரூன், உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு தலைவர்களுக்கும், இவர்களுக்கு ஒத்து ஊதிய முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தண்டனை விதிப்பது? எனவே, மனிதனைப் படைத்த இறைவன், மனிதர்களின் இயல்பை உணர்ந்து போடும் சட்டத்திற்கு மாற்றமாக, மனிதன் தனது மூளையில் உதித்ததை சட்டமாக்கினால் இப்படித்தான் முட்டாள் தனங்கள் அரங்கேறும் என்பதை சொல்லவும் வேண்டுமோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக