வெள்ளி, 2 மார்ச், 2012

குஜராத் என்கவுன்ட்டர் வழக்கு; நரமோடிக்கு மீண்டும் ஒரு பின்னடைவு!

குஜராத் என்கவுன்ட்டர் வழக்கு விசாரணை கண்காணிப்பு குழுவுக்கு புதிய தலைவரை நியமித்து, சுப்ரீம் கோர்ட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில், நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில், 22 என்கவுன்ட்டர் சம்பவங்கள் நடந்தன. இந்தச் சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை குறி வைத்து நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஒருவரும், இந்திப்பட பாடலாசிரியர் ஒருவரும் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்தனர். அவற்றில் என்கவுன்ட்டர்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. என்கவுன்ட்டர்கள் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட்டு, கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் கண்காணிப்பு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால், தன்னால் அந்தப் பணியை மேற்கொள்ளமுடியாது என கூறி விலகி விட்டார்.

அதைத் தொடர்ந்து மும்பை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஆர்.வியாசை கண்காணிப்பு குழுவின் புதிய தலைவராக நரேந்திர மோடி அரசு நியமித்தது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டை கலந்து ஆலோசிக்காமல் குஜராத் அரசு தன்னிச்சையாக நடந்து கொண்டது. இதை சுப்ரீம் கோர்ட்டு கண்டித்தது. 
இது குறித்து குஜராத் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா தேசாய் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது இந்தப் பிரச்சினையில் விளக்கம் அளிப்பதற்கு 12ந் தேதிவரை குஜராத் அரசின் சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் அதை நிராகரித்து விட்டனர். 
மேலும் கண்காணிப்பு குழுவின் புதிய தலைவராக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஜித் சிங் பெடியை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இது தொடர்பாக நீதிபதிகள் கூறும்போது, 'போலி என்கவுன்ட்டர் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் குறித்த விசாரணையை கண்காணிக்கும் குழுவின் தலைவராக நீதிபதி பெடியை நியமிப்பது சரியானது. குஜராத் அரசு அவருக்கு தனது முழு ஒத்துழைப்பை அளிப்பதுடன், தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவர் ஒரு அர்த்தமுள்ள, வலுவான விசாரணையை நடத்துவதற்கு இது தேவை. கண்காணிப்பு குழு தனது இடைக்கால அறிக்கையை 3 மாதங்களில் அளிக்கும். இது தொடர்பாக இந்த நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் 25&ந் தேதி பிறப்பித்த உத்தரவுகள் அப்படியே தொடர்கின்றன' என்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கை நரேந்திர மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. 

நன்றி;தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக