புதன், 8 ஆகஸ்ட், 2012

ஈமு கோழிப்பண்ணை; 200 கோடி மோசடி, உஷார்!


ரு காலத்தில் நிதி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் பெருகி மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் ஏப்பம் விட்டு மாயமாய் மறைந்த செய்தி எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நிதி நிறுவனங்கள் கவர்ச்சியான வட்டிகளை சொல்லி கவர்ச்சி நடிகைகளை  வைத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்ற முற்படுகையில் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு சினிமா போலீஸ் பாணியில் 'எல்லாம்' முடிந்த பின்பு சில ஏனோதானோ நடவடிக்கைகளை மேற்கொண்டு சிலருக்கு பணத்தை பெற்றுத் தந்தது. இன்றுவரை தங்களது முதலீட்டைப் பெற போராடிக்கொண்டு இருப்பவர்களும் இன்னும் இருக்கிறார்கள். 

இது ஒருபுறமிருக்க, நிதிநிறுவன பாணியில் சமீபகாலமாக ஈமு கோழிப்பண்ணை முதலீடு; பன்மடங்கு லாபம் என்ற பெயரில் மக்களை நோக்கி கிளம்பின பல நிறுவனங்கள். இவைகள் தங்களுக்கு ஆள் பிடிக்கும் வேலைக்கு அதாவது மக்கள் பணத்தை ஏப்பமிட்டுவதற்கு தோதாக சில நடிகர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தியதோடு கவர்ச்சியான பரிசுகளையும் அளித்து முதலீட்டாளர்களை கவர்ந்தார்கள். ஒவ்வொரு நிறுவனத்திலும் மக்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரூ.200 கோடி மோசடி என்ற புகாரை தொடர்ந்து பெருந்துறையில் உள்ள சுசி ஈமு கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
நிறுவனத்தின் சார்பில் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து நிர்வாகிகள், பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. முதலீட்டாளர்களுக்கு ரூ.200 கோடி அளவுக்கு பணம் வழங்க வேண்டியுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

ஈமு கோழிப்பண்ணை மோசடி குறித்து மேலதிக விபரங்களுக்கு இந்த கட்டுரையை படியுங்கள்;
நாம் விழிப்புடன் இல்லையென்றால் வேட்டி கூட மிஞ்சாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக