வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

அகதிகள் பற்றி அத்வானி பேசுவதா?


செய்வதையும் செய்துவிட்டு அதற்கு தேசபக்தி முலாம் பூசுவதில் வல்லவர்கள் இந்துத்துவாக்கள். அசாம் பற்றி எறிகிறது. இந்த நேரத்தில் அதை அணைப்பது எப்படி என்று தெரியாமல் மத்திய-மாநில அரசுகள் விழித்துக் கொண்டிருக்கையில், அசாமில் கருவறுக்கப் படுபவர்கள் முஸ்லிம்கள் என்பதால் உள்ளம் குளிர்ந்த இந்த்துவாக்கள், இந்த முஸ்லிம் இனச் சுத்திகரிப்பை திசைதிருப்பும் வகையில், வங்கதேசத்திலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்களால் தான் பிரச்சினை என்று அத்வானியே பேசினார். 

அத்வானியின் கூற்று உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் வங்கதேச அகதிகள் ஏதோ இப்போதுதான் ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குள் வந்தது போல அத்வானி பேசுகிறார். இப்போதுள்ள காங்கிரஸ் அரசு அகதிகளின் வருகையை தடுக்கத் தவறிவிட்டது என்று கூறும் அத்வானி, தனது கட்சி மத்திய அரசில் கோலோச்சிய ஆறு ஆண்டுகளில் வங்கதேச அகதிகள் வருகையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று கூறுவாரா? அவ்வாறே அகதிகளாகவே வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதும், அவர்கள் நாட்டிற்கு திரும்ப செல்லும் வரையிலும் உதவிகள் செய்வதும் தான் உலக அளவில் நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. தமிழகத்தில் கூட இலங்கை அகதிகள் பன்னெடுங்காலமாக பாதுகாக்கப்பட்டு வருவதைக் கூறலாம். ஆனால் இந்த நியதிக்கு மாற்றமாக அகதிகளாக வந்தவர்களை கொல்வதுதான் அத்வானி படித்த பாடமோ? 

மேலும் அகதிகளாக வந்தவர்கள் பற்றி பாகிஸ்தானில் பிறந்த அத்வானி பேசுவது ஆச்சர்யமாக உள்ளது. அதோடு அத்வானியின்  இந்த அகதிகள் எனும் திசைதிருப்பும் தீர்மானம் நாடளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டு அவரது முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் [8 -8 -12 ]அசாம் விவகாரம் தொடர்பாகக் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மீது அத்வானி பேசியதாவது:

''அசாம் வன்முறைக்கு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களே காரணம். இந்தப் பிரச்னையை இனப் பிரச்னையாகவோ, இந்து-முஸ்லிம் பிரச்னையாகவோ பார்க்கக் கூடாது. வங்கதேசத்திலிருந்து அகதிகளாக அசாமுக்கு வந்தவர்களைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன. அதன் விளைவாக சொந்த மாநிலத்திலேயே அசாம்வாழ் இந்தியர்கள் அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஆசிய நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பேசினார்.

பின்பு அசாமில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்கவும், வன்முறையை ஒடுக்கவும் மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி பா.ஜ.க. கொண்டுவந்த ஒத்திவைப்புத் தீர்மானம் குரல் வாக்கு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

இனியாவது ஒரு கலவரம் நடத்தால் அதை அடக்குவதற்கு ஆலோசனை சொல்ல அத்வானி முன் வரட்டும். அதை விடுத்து வன்முறையாளர்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்துவதை அவர் விட்டொழிப்பது  நல்லது. அதே நேரத்தில் அத்வானி கூறியவாறு அசாம் கலவரத்தை தடுப்பதில் மத்திய மாநில அரசுகள் கவனமற்று இருந்துள்ளன என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக