வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வதந்''தீ''யை வாந்தி எடுக்கும் வழிகேடர்கள்!

தீயை விட வேகமாக பரவுவது வதந்''தீ'' என்று சொன்னால் மிகையல்ல; வடமாநில மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறுஞ்செய்திகள் பரவுவதாக கூறிய மத்திய அரசு, ஒரு நாளைக்கு ஒரு நம்பரிலிருந்து ஐந்து எஸ்.எம்.எஸ்.கள் மட்டுமே அனுப்பவேண்டும் என்ற தடையை கொண்டுவந்தது. இதனால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு பல கோடிகள் நஷ்டமாக அடுத்த சில தினங்களில் தனது பிடியை தளர்த்தியது மத்திய அரசு. இந்த பரபரப்பு ஓய்வதற்குள்ளாக மெஹந்தி அணிந்த பெண்கள் சிலர் இறந்துவிட்டார்கள் என்றும் பலர் கவலைக்கிடமாக உள்ளார்கள் என்றும் வதந்தி பரவ, மெஹந்தி அணிந்த பெண்கள் குழந்தைகள் என ஊர்கள் தோறும் மருத்துவமனையை முற்றுகையிட பரபரப்பு உண்டானது. இந்த வதந்தி பொய் என்று ஆன அடுத்த சில  நாட்களிலேயே அடுத்த வதந்தி அவதாரம் எடுத்து விட்டது. 

பிறந்தவுடன் பேசிய குழந்தை, "நான் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன்; எனக்கு பிடித்த குழந்தைகளையும் அழைத்துச் செல்வேன்' என்று சொன்னதாக,  தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் வதந்தி பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில், மக்கள் மத்தியில், அதிகாலை, 2 மணியில் இருந்து, எஸ்.எம்.எஸ்., மூலம் இந்த செய்தி பரப்பப்பட்டது.


இந்த செய்தி வந்த மாத்திரமே அது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் அறிய முற்படாத மக்கள் உடனடியாக பிறந்த குழந்தை சொன்ன தீமையிலிருந்து தங்கள் குழந்தையை பாதுகாக்க பரிகாரம் தேடக் கிளம்பிவிட்டனர். தங்கள் குழந்தைகளின் தலையில் தேங்காய் சுற்றி, திருஷ்டி கழித்து, ஆரத்தி எடுத்தனர். சிலர், மஞ்சள் நீரில் மிளகாய் வத்தல், கரி ஆகியவற்றை வைத்து, திருஷ்டி சுற்றி, முச்சந்திகளில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பரிகாரம் செய்தனர்.


இந்த செய்தி தமிழகம் தாண்டி ஆந்திர மாநிலம், ஐதராபாத், நிஜாமாபாத், கரீம் நகர், வாராங்கல் மாவட்டங்களிலும், இந்த வதந்தி வேகமாக பரவியது. அங்கே இந்த செய்தி போகும் போது வேறு வடிவம் எடுத்து விட்டதாம். பல கை, பல கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது பிறந்த உடனேயே, தன் தாயிடம், "இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்; அதற்கு முன், இன்று இரவு என்னுடன் பிறந்துள்ள அனைத்துக் குழந்தைகளையும் பலி வாங்கி அழைத்துச் சென்று விடுவேன்' என்று கூறியதாக வதந்தி பரவியதாம். ஆம். உண்மைக்கு ஒரு முகம்; பொய்க்கு பல வடிவம் தானே.


ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் தனது சாமிக்கு தேங்காய் உடைக்க தேங்காய் கடைக்காரரிடம் விலை கேட்க, அவர் சொல்லும் விலை பயங்கரமாக இருந்ததால் ஒரு திட்டம் தீட்டி, ''நேற்று வந்த தேங்காய் லோடுல ஏதோ ஒரு தேங்காய்ல யாரோ பாம்(வெடிகுண்டு) வச்சுட்டாங்களாம்; அது எந்த தேங்காய்ன்னு தெரியல'ன்னு ஒரு வதந்தியை பரப்புவார். அதை நம்பிய மக்கள் பதறியடித்துக் கொண்டு தேங்காய் வாங்குவதை நிறுத்த, வதந்தி பரப்பிய காமெடி நடிகர் தேங்காய் கடைக்காரரிடம், ''பார்த்தாயா? நான் ஒரு தேங்காய் கேட்டேன்; நீ யானை விலை சொன்ன; நான் ஒரு பொய்யச் சொன்னேன்; மக்கள் தேங்காய் வாங்காம ஓடிட்டாங்க. இப்ப எல்லாத் தேங்காயையும் நீ வீட்டுக்கு கொண்டுபோய் சட்னி வச்சு சாப்பிடு' என்பார். அதுபோலத்தான் இந்த பிறந்த குழந்தையின் பேச்சும் அதையொட்டி பரிகராமாக தேங்காய் உடைப்பும் நடந்ததை பார்க்கும் போது இந்த வதந்திக்கும் தேங்காய் வியாபாரத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோன்னு மக்களுக்கு சந்தேகம் வருவதில் வியப்பில்லை. ஏனென்றால் வதந்திகளுக்கும் வியாபாரத்திற்கும் எப்போதும் தொடர்பு உண்டு. திடீரென்று ஆண்களுக்கு ஆபத்து; அதில் இருந்து காக்கும் பரிகாரமாக தனது சகோதரிக்கு பச்சைக் கலர் சேலை வாங்கித் தரவேண்டும் என்று வதந்தி கிளம்ப நம்ம ஆம்பளைகள் எல்லாம் பச்சைக்கலர் சேலை தேடி அலைந்த காட்சிகளும் தமிழகத்தில் நடந்ததுதானே.


இது மட்டுமா? அம்மன் கண்ணில் நீர் வழிகிறது, புள்ளையார் பால் குடித்தார், ஏசுவின் பாதத்தில் நீர் வடிகிறது, அண்டா தண்ணீரில் அம்மனின் முகம் தெரிகிறது, பாம்பு ஒளிர்கிறது, பட்டப் பகலில் ஆவி வலம் வருகிறது இப்படியாக அடுக்க்கடுக்கான வதந்திகள் அணிவகுத்ததையும் அதை கொஞ்சமும் அறிவின்றி மக்கள் நம்பியதையும் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த வரிசையில் வந்த ஒன்றுதான் இந்த குழந்தையின் பேச்சும் அதையொட்டிய களேபரங்களும் என்பதை சொல்லிக் கொள்வதோடு வதந்தி பற்றி இஸ்லாம் எண்ணற்ற அறிவுரைகளை வழங்கியுள்ளது அதில் ஒன்றைப் பார்ப்போம்;


முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

(அல் குர்'ஆன் 49:6 ) 


ஒரு செய்தியை ஒருவன் நம்மிடம் சொன்னால் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது; மாறாக அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு ஏற்பதுதான் ஒரு அறிவுடைய நம்பிக்கையாளரின் அடையாளமாகும் என்பது இந்த வசனத்தின் கருத்தாகும். எனவே வதந்தியை நம்புவதற்கு முன்னால் உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக