வியாழன், 9 ஆகஸ்ட், 2012

பாகிஸ்தான் துணை அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம் மத அடிப்படையிலானதா?

பாகிஸ்தான் பெஷாவர்  நகரில் வசித்து வரும் குர்ஷித் கான், துணை அட்டர்னி ஜெனரலாக பொறுப்பு வகித்தவர். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்தபோது, சண்டீகரில் உள்ள ஜும்மா மசூதி, அமிருதசரஸில் உள்ள பொற்கோவில் ஆகியவற்றுக்கு சென்று, ஷூ சுத்தம் செய்தல், தரையை பெருக்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்ததாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், குர்ஷித் கானுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கம், நோட்டீஸ் அனுப்பியது. அதில், இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ஷூ சுத்தம் செய்ததன் மூலம் பாகிஸ்தானை அவமதித்தது தொடர்பாக தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் அளிக்குமாறு கோரியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் யாசின் ஆசாத் கூறுகையில்,   ''தனது வாழ்க்கையில் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த சேவையைச் செய்ததாக குர்ஷித் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானை அவமதிக்கும் இந்த செயலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அரசின் கடமை. எனினும், அவர் துணை அட்டர்னி ஜெனரலாக இருப்பதால், நாங்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்று கூறியுள்ளார். 

இதற்கிடையே, குர்ஷித் கானுக்கு பதிலாக மற்றொரு வழக்கறிஞர் துறை அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக, பாக்., அட்டர்னி ஜெனரல் இர்பான் காதிர் தெரிவித்துள்ளார். 

இந்த சாதாரண நடவடிக்கையை வழக்கம் போல மதத்தோடு சேர்த்து முடிச்சுப் போட்டு தனது பகுத்தறிவை[?!] பறைசாற்றியுள்ளது விடுதலை நாளிதழ். குர்ஷித் கான் ஷூ துடைத்தது இஸ்லாமிய மார்க்கத்திற்கு விரோதமானது என்பதாலும், சீக்கிய மத சம்மந்தப்பட்ட ஒரு சம்பிரதாயத்தை ஒரு முஸ்லிம் எப்படி செய்யலாம் என்பதாலும் தான் அவர் நீக்கப்பட்டார் என்று தனது கற்பனைத் திறனை காட்டியுள்ளது.

குர்ஷித் கான் இந்திய விஜயத்தின் போது குருத்துவாரில் மட்டும் பணிவிடை செய்தாரா? சண்டிகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலிலும் பணிவிடை செய்துள்ளார். எனவே அவரது நீக்கத்திற்கு குருத்துவாரில் ஷூ துடைத்ததுதான் காரணம் என்று கூறுவது தவறாகும். மேலும் அவரிடம் விளக்கம் கேட்டு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற பார்கவுன்சில் அனுப்பிய நோட்டீசில் கூட, ''உங்களின் இந்த செயல் இஸ்லாத்திற்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது என்று கூறி விளக்கம் கேட்டதா என்றால் இல்லை. மாறாக உங்களின் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு களங்கம் கற்பிப்பதாக உள்ளது என்று தானே நோட்டீஸ் சொல்கிறது. அவ்வாறாயின் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் துணை அட்டர்னி ஜெனரல் என்ற உயர் பதவியில் இருக்கும் ஒருவர் அடுத்த நாட்டில் போய் கோவில் வாசலிலும் பள்ளிவாசல் முன்பாகவும் உட்கார்ந்து கொண்டு ஷூ துடைத்துக் கொண்டிருந்தால் அது அவர் வகித்த பதவிக்கும் அவரது நாட்டிற்கும் இழுக்குதானே! அதற்காக அவரை பதவி நீக்கம் செய்வதில் என்ன தவறு? நாளை இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் பாகிஸ்தான் சென்று பள்ளிவாசலில் ஷூ துடைத்தால் அதை இந்த விடுதலை ஆஹா! மனிதாபிமான செயல் என்று வரவேற்குமா? அல்லது இந்தியாவின் மானம் கப்பலேறி விட்டது என்று வசை மாறி பொழியுமா? இரண்டு நாட்களுக்கு முன்னால்  தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் கலெக்டர்  கோயிலில் பொங்கல் வைத்ததை பற்றி இந்த விடுதலை செய்த விமர்சனம் என்ன? ''மதசார்பற்ற நாட்டின் பதவியில் இருக்கும் கலெக்டர் இப்படி மதசார்பு பொங்கல் வைக்கலாமா? என்று விமர்சிக்கவில்லையா? கலெக்டர் பொங்கல் வைத்தது அவர் வகித்த பதவிக்கு இழுக்கு என்று விடுதலை சொல்லுமாம். ஆனால் ஒரு துணை அட்டர்னி ஜெனரல், செருப்புத் துடைப்பது அவர் வகிக்கும் பதவிக்கும் நாட்டிற்கும் இழுக்கு என்று பாகிஸ்தான் மட்டும் சொல்லக் கூடாதாம். இது என்ன பகுத்தறிவோ தெரியவில்லை.

மேலும் எவன் எங்கே போய் செருப்பு துடைச்சாலும், கக்கூஸ் கழுவினாலும் அதனால் அவனுக்குத்தான் இழுக்கே தவிர இஸ்லாத்திற்கு எந்த பாதிப்புமில்லை. இஸ்லாம் ஒவ்வொரு மனிதனையும் கவுரவமாக வாழச் சொல்கிறது. ஒரு முஸ்லிம் செருப்புத் தைத்துப் பிழைக்கலாம். செருப்பு துடைத்தும் பிழைக்கலாம். முஸ்லிம்கள் செருப்புக்கடை வைத்திருக்கிறார்கள். அங்கே உள்ள செருப்பை அவர்கள் தான் துடைக்கிறார்கள். இதையெல்லாம் இஸ்லாம் தடுக்கவுமில்லை. கேவலமான தொழில் என்று சொல்லவுமில்லை. ஆனால் அதே முஸ்லிம் தொழில் ரீதியாக அன்றி, முட்டாள்தனமாக இன்னொருவன் செருப்பைத் துடைத்தால் அவன் தனது கண்ணியத்தை தான் இழக்கிறான் என்பதை விடுதலை புரிந்து கொள்ளட்டும். 

அடுத்து உலகம் முழுவதும் இருப்பவர் ஒரே கடவுள் என்று ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், ஒரு மதத்துக் கடவுளை இன்னொரு மதத்துக்காரர் ஒப்புக் கொள்வதில்லை. (அந்த வகையில் ஒப்புக் கொள்ளாதவர் இன்னொரு மதக் கண்ணோட்டத்தின் படி நாத்திகர் தானே!) என்று ஒரு மில்லியன் டாலர்[!] கேள்வியைக் கேட்கிறது விடுதலை. 

உலகம் முழுவதும் ஒரே ஒரு கடவுள் என்று இஸ்லாம் சொல்கிறது. அதற்கு மாற்றமாக கடவுளே இல்லை என்றும், பல கடவுள்கள் என்றும் சொல்பவர்களை எப்படி ஏற்கமுடியும்? இஸ்லாமியர்கள் பார்வையில் இஸ்லாத்தை ஏற்காத வீரமணியாக இருந்தாலும், ராமகோபாலனாக இருந்தாலும் நாத்திகர்கள் தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. நாம் கேட்கிறோம் இஸ்லாமியர்கள் தங்களது ஒரு கடவுள் கொள்கைக்கு எதிராக இருப்பதால் பிறமத கடவுள்களை எப்படி ஏற்பதில்லையோ அதே போன்றுதான், கடவுளே இல்லை என்ற தங்களது கொள்கைக்கு மாற்றமான மத நம்பிக்கையாளர்கள் அனைவரையும் நாத்திகர்கள் ஏற்பதில்லையே. கொள்கை முரண்பட்டாலும் மற்ற மதத்து கடவுளையும் முஸ்லிம்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்த நாத்திக விடுதலை, தங்களின் நாத்திக கொள்கைக்கு முரணான மதங்களை ஏற்கத்தயாரா?

அடுத்து இன்னொரு மதக் கடவுளையே ஏற்றுக் கொள்ளாதவர்கள்; இன்னொரு மதத்தின் சம்பிரதாயங்களை ஏற்றுக் கொள்வார்களா? என்று மீண்டும் ஒரு மில்லியன் டாலர் கேள்வியினை உதிர்க்கிறது விடுதலை. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. அந்த வகையில் ஒரு மதத்தின் சம்பிரதாயத்தை இன்னொரு மதத்தவர் அங்கீகரிப்பதில்லை. அப்படி அங்கீகரித்தால் பல மதங்களாக இருக்காது எல்லாம் ஒரே மதம் என்றாகிவிடும் என்ற சாதாரண உண்மை கூட இந்த பகுத்தறிவு புலிகளுக்குத் தெரியவில்லையா? 

இவ்வளவு பேசும் இந்த நாத்திக விடுதலை, திகவும் திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூறும் விடுதலை, திமுகவின் சம்பிரதாயங்களை ஏற்காதது ஏன்? தேர்தல் போட்டி- கூட்டணி-ஆட்சி அதிகாரம் என்ற திமுகவின் சம்பிரதாயங்களை திகவினர் பின்பற்ற வேண்டியதுதானே! அற்ப அரசியல் நடவடிக்கைகளில் கூட இவர்களுக்கு நெருக்கமான ஒரு கட்சியின் சம்பிரதாயங்களை ஏற்க மாட்டார்களாம். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் இன்னொரு மத சம்பிரதாயங்களை சரி காண வேண்டுமாம்.

அடுத்து ஒருபடி மேலே சென்று ஒரு மதக்காரன் இன்னொரு மதத்தின் கடவுளை உடைத்துத் தூள் தூளாக்குகிறான் (நாத்திகர்கள் இந்த வேலையைச் செய்வ தில்லை) என்கிறது இந்த நாத்திக விடுதலை. முஸ்லிம்கள் மற்ற மதத்தின் கடவுள்களை கருத்தால் உடைத்தெறிவார்களே தவிர கடப்பாரையால் அல்ல. இந்த நாத்திகப் பெரியார் போல் பிள்ளையார் சிலையை உடைப்போம் என்று திரியவில்லை. இதுல நாத்திகர்கள் இந்த வேலையை செய்வதில்லை என்று போய் வேறு. ஆக, ஒருவரின் சாதாரண பதவி நீக்கத்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி, இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் உளறியுள்ள நாத்திக விடுதலை நா காப்பது நன்று.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக