வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

விலைவாசி உயர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது; மத்திய அமைச்சரின் மடத்தனமான பேச்சு!

டந்த ஆட்சியில் தமிழகத்தில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்தபோது அதுபற்றி வினா ஒன்றுக்கு பதிலளித்த அப்போதைய அமைச்சர் ஒருவர், விலைவாசி மட்டும் உயரவில்லை; மக்களின் வாங்கும் திறனும் உயர்ந்துள்ளது என்றார். அதே போல இப்போது விலைவாசி உயர்வு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 

மத்திய உருக்குத் துறை மந்திரி பெனிபிரசாத் வர்மா, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் பரபங்கி நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது, ''விலைவாசி உயர்வு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும் என்றும் 'பருப்பு, ஆட்டா, அரிசி மற்றும் காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. விலையேற்றத்தால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே இந்த விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றும், இந்த உண்மையை உணராத பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூச்சலிடுவதாகவும், விவசாயிகள் பயன் அடைவதையே அரசு விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பெனிபிரசாத் வர்மாவின் இந்த கருத்துக்கு பா.ஜனதா-சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மத்திய அமைச்சரின் இந்த கருத்து அவரது அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கேற்ப விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உச்சகட்ட நகைச்சுவையாகும். அமைச்சரின் கூற்று உண்மையானால் விலைவாசி விண்ணைத்தொடும் நிலையில் உள்ள இந்த காலகட்டத்திலும் உணவுப்பொருட்களின் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விவாசாயிகளால் இன்றைக்கும் எழுப்பப்படுகிறதே அது ஏன் என்று அமைச்சர் சொல்வாரா? விலைவாசி உயர்வுக்கேற்ப விவசாயி லாபமடைகிறான் என்றால் உலக நாடுகளில் விவசாயிகள் தற்கொலையில் இந்தியா முதலிடத்தில் இருப்பது ஏன் என்று அமைச்சர் சொல்வாரா? விலைவாசி உயர்வுக்கேற்ப விவசாயி லாபமடைகிறான் என்றால், லாபம் கொழிக்கும் தொழிலை செய்யும் விவசாயியின் கோடிக்கணக்கான ரூபாய் வங்கிக் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்வது ஏன் என்று அமைச்சர் சொல்வாரா? கடையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் விற்கப்படுகிறது என்றால் அதை ஒன்பது ரூபாய்க்கு விவசாயியிடம் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அதிகபட்சம் நான்கு ரூபாய் அளவுக்கு விவசாயி பயனடைந்தால் அதுவே பெரிய தொகையாகும். 

மேலும், ஒரு உணவுப்பொருள் பரவலாக கூடுதலாக விளைந்துவிடுமானால் அப்பொருளுக்கு சந்தையில் மதிப்பிருக்காது. அப்போது அப்பொருளை விவசாயிகளிடம் இருந்து வாங்குவாரின்றி சீரழியும். அது விவசாயியின் கையைச் சுடும். சந்தையில் ஒரு பொருளுக்கு எப்போது மதிப்பு கூடுதலாகும் என்றால் அப்பொருள் குறைவான விளைச்சலால் பற்றாக்குறை ஏற்படும் போதுதான். உதாரணத்திற்கு காங்கிரசுக்கு மிக மிக அறிமுகமான வெங்காயத்தை சொல்லலாம். வெங்காயம் அதிகமாக விளையும் போது சந்தையில் விலையில்லை. அப்போதும் அந்த அதிகப்படியான விளைச்சலால் விவசாயிக்கு பயனில்லை. சந்தையில் நல்லவிலை இருக்கும்போது வெங்காயம் விளைச்சலில்லை. அதனாலும் விவசாயி பலனடையவில்லை. எனவே சந்தை மதிப்பை வைத்து விவசாயி மகிழ்ச்சியாக இருக்கின்றான் என்று கூறும் அமைச்சர் தன்னை திருத்திக் கொள்ளட்டும். விவாசாயிகள் உண்மையிலேயே மகிழவேண்டுமானால் அவர்களின் விளைபொருளுக்கு உரிய கொள்முதல் விலையை காலமறிந்து அரசு தீர்மானிக்கட்டும். இல்லையேல் விலையை தீர்மானிக்கும் உரிமையை விவாசயிகளுக்கே வழங்கட்டும். அதுதான் விவசாயிகளின் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை அமைச்சர் உணரட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக