வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அன்புள்ள முதல்வருக்கு....

அன்புள்ள முதல்வருக்கு....
உங்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தின் அப்பாவி முஸ்லிம் சகோதரன் எழுதிக்கொள்வது.
நேர்வழியைப் பின்பற்றுபவர்கள் மீது சாந்தி உண்டாகட்டுமாக!

முதல்வர் அவர்களே..!
ரமலான் மாதம் வந்து விட்டால் முஸ்லிம் இயக்கங்களில் சிலர் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தங்களின் கூட்டணியில் உள்ள அல்லது தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து நோன்பு திறக்க[!?] செய்த நிலையில், நான் அறிந்தவரைக்கும் இந்த நடைமுறையை மாற்றும் வகையில் நீங்கள் 1996 ஆம் அண்டு என்று நினைக்கிறேன். உங்கள் கட்சியின் சார்பாக முதன் முதலாக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து உங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியினரை அழைத்தீர்கள். இது ஒரு மாற்றம் தான் என்றாலும் இரண்டுக்கும் வேறுபாடு எனக்குத் தெரியவில்லை. 

இந்நிலையில் வழமைபோல் இந்த ஆண்டும் உங்கள் கட்சி சார்பாக உங்கள் தலைமையில் இப்தார் நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளீர்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய நீங்கள், ''மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பிருத்தல், இரவலர்க்கு தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை இந்தப் புனித மாதத்தில் மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பேசியுள்ளீர்கள்.

இஸ்லாம் என்பது ஐந்து கடமைகள் மீது நிறுவப்பட்டுள்ளது என்பது உண்மைதான். அதில்  நீங்கள் சொல்வது போல் நோன்பு- ஹஜ் எனும் புனிதப் பயணம் ஆகியவை இந்த ஐந்தில் உள்ளடங்கியது தான் என்றாலும் நீங்கள் சொல்லிய ஏனைய மூன்று விசயங்கள் இந்த ஐந்துக்குள் வருவதல்ல. அவை உபரியான கடமையாகும். இந்த ஐந்துக்குள் வரும் ஏனைய மூன்று விஷயங்கள்; கலிமா எனும் சாட்சி கூறல். (அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நபி முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறல்) இரண்டவதாக தொழுகை எனும் இறைவணக்கம். மூன்றவதாக ஜகாத் எனும் ஏழை வரியாகும். இந்த மூன்றுடன் நீங்கள் கூறிய நோன்பு மற்றும் ஹஜ் பயணம் ஆக இந்த ஐந்துதான் இஸ்லாமிய அடிப்படைக் கடமையாகும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இது உங்களுக்கான விளக்கம் தானேயன்றி உங்கள் மீதான விமர்சனம் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் நீங்கள் ஓரளவு இஸ்லாத்தின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அறிக்கைகளில் சில வாசகங்களை சேர்ப்பதை நான் படித்திருக்கின்றேன். அதில் ''எல்லாம்வல்ல இறைவன்' என்ற வார்த்தையும் ஒன்றாகும். இறைவன் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்ற இஸ்லாத்தின் கருத்தை நீங்கள் வழிமொழியும் வகையில் ''எல்லாம் வல்ல இறைவன்'' என்று நீங்கள் கூறினாலும் அந்த எல்லாம் வல்ல இறைவனை ஒருமைப் படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு உங்களை அழைப்பதில் உவகை கொள்கிறேன்.  அதே போல் சட்டமன்றத்தில் உங்கள் அமைச்சர்களில் ஒருவர், ''முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்குகிறார்கள்'' என்று பேசியபோது, நீங்கள் குறுக்கிட்டு ''முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தை வணங்கவில்லை; அவர்கள் அல்லாஹ்வை வணங்குகிறார்கள்'' என்று திருத்திய செய்தி, நீங்கள் இஸ்லாத்தை அறிய முற்பட்டு சில விசயங்களை அறிந்தும் இருக்கிறீர்கள். அதில் ஒன்றுதான் முஸ்லிம்கள் இறைவனையன்றி வேறு யாரையும் குறிப்பாக நபிகள் நாயகத்தைக் கூட வணங்க மாட்டார்கள் என்ற செய்தி. அப்படி நீங்கள் அறிந்துள்ள சர்வவல்லமை மிக்க இறைவனின் மார்க்கமாம் இஸ்லாத்திற்கு உங்களை அழைப்பதில் உவகை கொள்கிறேன்.

மேலும், முஸ்லிம்களின் திருப்தியை நீங்கள் பெறுவதற்கு இப்தார் நிகழ்ச்சிகள் எந்தவகையிலும் பயனளிக்காது என்பதையும் உங்களுக்கு அறியத் தருகின்றேன். ஏனெனில் ஆடித்தள்ளுபடியில் ''தள்ளுபடி' போட்டு தங்களின் கைச்சரக்கை காலிசெய்யும் கடைக்காரர்கள் போல், நோன்புக் கஞ்சி கொடுத்து அல்லது குடித்து இவர்கள் நம்மிடம் கைச்சரக்கை திணிக்கப் பார்க்கிறார்கள் அதாவது ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்ற என்னத்தை தான் முஸ்லிம்கள் மனதில் இந்த இப்தார் நிகழ்ச்சிகள் ஏற்படுத்தியுள்ளன. எனவே எல்லோரும் செல்லும் வழியில் நீங்களும் சென்று நோன்புக்கஞ்சி வழங்குவதால் முஸ்லிம்களின் நெஞ்சத்தில் இடம்பிடித்து விடமுடியாது. மாறாக நீங்கள் அரசியல் அனாதையான காலங்களில் எல்லாம் உங்களுக்கு கைகொடுத்து ஆட்சியதிகாரம் வழங்கிய முஸ்லிம்களின் வாக்குவங்கி எப்போதும் உங்கள் கணக்கில் சேமிப்பில் இருக்கவேண்டுமென்றால், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம்  ஆகியவற்றில் சம உரிமை, சமூக நீதி, பாதுகாப்பு ஆகியவற்றிலும் உரிய கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இறுதியாக, உங்களை சீர்படுத்தவும் உங்கள் ஆட்சியை செம்மையாக்கவும், உங்களின் இவ்வுலக- மறுவுலக நிம்மதியான வாழ்க்கைக்கும் உங்கள் முன்னால் இருக்கும்  ஒரே அழகிய வழியாக திகழும் இஸ்லாத்தின் பக்கம் உங்களை மீண்டும் அழைப்புவிடுத்து முடிக்கிறேன்.

இவன்.,
உங்களின் நலன் நாடும்..
இஸ்லாமிய சகோதரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக