வியாழன், 2 ஆகஸ்ட், 2012

என்னை தூக்கில் போடுங்கள்; மோடியின் மனச்சாட்சி பேசுகிறது.


குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002ம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு மோடியின் ஆசிதான் மூலப்பொருளாக இருந்ததை வன்முறையில் ஈடுபட்டவர்களே வாக்குமூலம் வாயிலாக தெரிவித்த பின்னரும் கூட, பத்து ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட நரமோடியால் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க முடிகிறது என்றால் நமது நாட்டின் சட்டத்தை மறைத்துள்ள காவிக்கறையை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆயினும் அவ்வப்போது குஜராத் இனப்படுகொலைக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று காட்டுவதற்காக சில நாடகங்களையும் நடத்துவார் மோடி. அந்த வரிசையில் உருது வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ''குஜராத் வன்முறைச் சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கில் போடலாம் என்றும் கூறியுள்ளார். 

''கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான் என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள். 2004ம் ஆண்டில், பத்திரிகை ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். அதில், "வன்முறைகளுக்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். வன்முறைகளுக்கு எனது அரசு காரணம் எனில், என்னை பொது இடத்தில் தூக்கிலிடலாம்' எனக் கூறியிருந்தேன். அதையே இப்போதும் சொல்கிறேன். குஜராத் வன்முறைகளுக்காக நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் குற்றவாளி என்றால், என்னைத் தூக்கிலிடுங்கள். அதேநேரத்தில், நான் அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், எனது கவுரவத்தை சீர்குலைத்ததற்காக, ஊடகங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களுக்காக என்னை குற்றவாளியாக்கினால், அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நரேந்திரமோடியின் இந்த பேட்டி கையும் மெய்யுமாக பிடிபட்ட திருடன் கடைசி நேரத்தில் தப்பிப்பதற்காக, நான் திருடியிருந்தால் நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று தன்னை தியாகியாக காட்டுவானே; அதுபோலத்தான் உள்ளது. மோடியின் இந்த பேட்டியின் லட்சணம் பற்றி நாம் சொல்வதை விட காங்கிரஸ் கட்சியின் கபில்சிபல் அழகாக சொல்லியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கடந்த 12 ஆண்டுகளாக இவ்வழக்கு தொடர்பாக முதல்வர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருந்தால் அவர் மீதான குற்றத்தை எப்படி நிரூபிக்க முடியும்? யார் அவரை தூக்கில் போட முடியும்? வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மோடி இவ்வாறு பேட்டி அளித்திருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறும் அவர், தன் மீதோ மற்ற அமைப்புகள் மீதோ குஜராத்தின் எந்த காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்தாலும் ஆட்சேபிக்க மாட்டேன் என்று அறிக்கை விடவேண்டும்' என்றார்.

கபில்சிபல் கூறுவது போல், மோடியின் மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு? தானே முன்வந்து முதல் தகவல் அறிக்கையில் தன்னை இணைத்துக்கொண்டு, நியாயமான நீதிவிசாரணை கோரி தன்னை குற்றமற்றவன் என்று காட்ட மோடி முன்வரலாமே! வெற்றுப் பேட்டிகள் கதைக்குதவுமா? இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்யவேண்டியுள்ளது. பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் நீதிமன்றம் தானே முன்வந்து அதை வழக்காக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறது. அந்த அடிப்படையில் மோடியின் இந்த பேட்டியையே வாக்குமூலமாக கொண்டு உச்சநீதிமன்றம் மோடி மீது வழக்கு பதியவேண்டும். காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோடி, கலவரத்தை தடுக்காமல் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததை அம்பலபடுத்தி அவரைத் தண்டிக்கவேண்டும். அப்போதுதான் நீதி நிலைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக