வியாழன், 9 ஆகஸ்ட், 2012

இஸ்லாமாபாத்தில் இந்துக்கோயில் கட்ட அனுமதி; பாகிஸ்தான் அரசின் மதசார்பின்மை!


பாகிஸ்தான் என்றாலே இந்தியாவை பிரித்து உருவான நாடு என்றும், இந்தியாவை அச்சுறுத்தும் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை செய்யும் நாடு என்றும், தனது நாட்டில் உள்ள இந்துக்களின் வழிபட்டு உரிமையை நசுக்கும் நாடு என்றும் தான் செய்திகள் மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் தாண்டி பாகிஸ்தானின் உண்மை முகம் உலகுக்கு வந்தவண்ணம் உள்ளது. 

இந்தியாவில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது பாகிஸ்தானில் உள்ள சில கோயில்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டன.  அந்த கோயில்கள் உடனடியாக பாகிஸ்தான் அரசால் புனர்நிர்மானம் செய்யப்பட்டது. அதே போல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சம்பவம் ஒன்றை நினைவூட்டுவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். 

''பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் கோர் கத்ரி என்ற இடத்தில் உள்ள 160 ஆண்டு பழமையான இந்து கோவில் உள்ளது. கோரக்நாத் கோயில் என்ற இந்த கோயில் 60 ஆண்டுகளாக மூடிக்கிடந்த இந்த கோயில் பூசாரி பூல் வாட்டியின் மகள் கமலா ராணி பெஷாவர் ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்ததையடுத்து, விசாரணை நடத்திய கோர்ட்டு வழிபாட்டு தலத்தில் வழிபாடு நடத்தப்படாமல் பூட்டி வைப்பது அனைத்து சட்டத்துக்கும் எதிரானது. எனவே கோயிலை பக்தர்கள் வழிபாடு நடத்த திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோயில் திறக்கப்பட்டது. 

மேற்கண்ட செய்தியை நாம் கவனிக்கும் போது பல உண்மைகள் வெளிப்படுவதைக்  காணலாம். பாகிஸ்தானில் மிக மிக சிறுபான்மையாக வாழும் இந்துக்களின் வழிபாட்டுத்தலம், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களாக இருந்தும் கூட நீதி மறுக்கப்படவில்லை. அந்த கோயில் இடிக்கப்படவில்லை. அங்கே உடனடி மசூதி எழுப்பப்படவில்லை. அறுபது ஆண்டுகாலம் பூட்டியிருந்தும் அக்கோயிலுக்கு சிறு சேதாரமும் இழைக்கப்படவில்லை. மீண்டும் அந்த கோயில் சம்மந்தப்பட்ட சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு சாரார் சிறுபான்மையினர்-பலவீனர் என்பதற்காக இந்த நாட்டின் நீதிமன்றம் அநீதிஇழைக்காது என்பதைத்தான்.

இப்போது கூட பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் அனுமதியளித்துள்ளார்.இதற்கான இடத்தினை தேர்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான முறையான உத்தரவை  பிரதமர் அலுவலகத்திலிருந்து இஸ்லாமாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சியில் உள்ளது. பிரதமராக ராஜா பர்வேஷ் அஷ்ரப் உள்ளார். இக்கட்சியைச் சேர்ந்த இந்து எம்.பி.யான ரமேஷ்லால், பிரதமர் அஷ்ரப்பினை சந்தித்தார்.அப்போது தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இந்து கோயில் கட்ட அனுமதியளிக்குமாறு கோரிக்கைவிடுத்தார். இக்கோரிக்கையை ஏற்ற பிரதமர், தலைநகரில் இந்து கோயில் கட்ட தகுந்த இடத்தினை தேர்வு செய்திடுமாறு இஸ்லாமாபாத் மேம்பாட்டு ஆணைய தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது இஸ்லாமாபாத் நகரில் பழைமையான சில இந்துக்கோயில்கள் இருந்தாலும், அவை பயன்பாட்டில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானின்  ஆளுங்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ரமேஷ்லால் என்ற இந்து எம்.பி.யாக உள்ளதும், அவரது வேண்டுகோளை ஏற்று தலைநகரில் அதுவும் 'இஸ்லாமாபாத்' என்று பெயரிலேயே இஸ்லாத்தை தாங்கியுள்ள நகரில் கோயில் கட்டிக்கொள்ள பிரதமர் இடம் அளிப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். 
 
ஆனால் நமது இந்திய நாட்டில், அதுவும் மதசார்பற்ற நாட்டில் முஸ்லிம்களுக்கு சொந்தமான தொன்மையான வழிபாட்டுத்தலத்தில் சில வந்தேறி பயங்கரவாதிகள் இரவோடு இரவாக சிலை  வைத்து, அதைத்தொடர்ந்து அந்த வழிபாட்டுத்தலம் பூட்டப்பட்டு, நாளடைவில் உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அபகரிப்பாளர்களுக்கு ஆறுகால பூஜை செய்ய அனுமதித்து, பல கட்டங்களாக திட்டங்கள் தீட்டப்பட்டு, கரசேவை என்ற பெயரில் காவி பயங்கரவாதிகளால் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டு, உடனடியாக அந்த இடத்தில் பயங்கரவாதிகள் தற்காலிக வழிபாட்டுத் தலமும் எழுப்பி, அதை தொடர்ந்து அறுபது ஆண்டு காலம் கழித்து  வழங்கப்பட்ட இந்த வழக்கு சம்மந்தமான தீர்ப்பில், மூன்று பங்காக்கி முதலாளிக்கு ஒரு பங்கும் மோசடிக்கரனுக்கு இரண்டு பங்கும் தந்த அற்புதமான நீதி இந்த மதசார்பற்ற இந்தியாவில் வழங்கப்பட்டதே! இப்படிப்பட்ட மனுநீதி தீர்ப்பு வழங்கும் நீதிமான்[!]களும், இடிக்கப்பட்ட அதே இடத்தில் பள்ளியை கட்டித்தருவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட காங்கிரசாரும், முஸ்லிம்களின் உயிருக்கும்- உடமைக்கும்- வழிபாட்டுக்கும் இடையூறு செய்யும் காவிகளும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தும் பிற மத வழிபாட்டுத் தலத்தின் உரிமையை நிலைநாட்டிய பாகிஸ்தான் நீதிமன்றத்திடமும், அரசிடமும் பாடம் படிக்கட்டும்.  நீதியை மதிக்கட்டும். அந்த மதிப்பு பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் வழங்குவதன் மூலம் வெளிப்படட்டும்.
 
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி  செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[5 ;8 ] 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக