சனி, 25 ஆகஸ்ட், 2012

மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலித்த மம்தா பானர்ஜி!



மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பரபரப்புக்கும் அப்படி என்னதான் உறவோ தெரியவில்லை. அவர் எது பேசினாலும் அதோடு பரபரப்பு தொற்றிக்கொண்டு விடுகிறது. சமீபத்தில் மேற்குவங்க மாநில சட்டமன்றத்தின் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்‌சியில் அவர் பேசுகையில், ''நீதித்துறையில் ஊழல்கள் பெருகிவிட்டது. மாநிலத்தில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் நீதிவிசாரணை கமிஷன் உருவாக்கப்படும். ஆனால் நீதி கிடைத்ததா? எல்லாம் பணத்துக்காக விலை பேசப்பட்டுவிட்டது. நீதித்துறையில் அந்தளவுக்கு ஊழல். பணத்துக்காக நீதிபதிகள், சாதகமான தீர்ப்பு வழங்குகின்றனர். எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலும் இது போன்ற நிலை உள்ளது என்பது எனக்கு நன்றாக தெரியும்.அதற்காக நான் பயப்படமாட்டேன். சிறைக்கு செல்லவும் தயார் என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. 

மம்தாவின் பேச்சால் அதிர்ந்த நீதிமன்ற வட்டாரங்கள் பொங்கி எழுந்தன. அவர் நீதிமன்றங்களை அவமதித்து விட்டார் என்று கூறி அவர் மீது சிலர் வழக்குகளும் போட்டுள்ளனர். இதற்கிடையில் தனது பேச்சு தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கமளித்த மம்தா பானர்ஜி, ''எல்லாத் துறைகளிலும் நல்லவர்களும் கேட்டவர்களும் இருப்பது போல் நீதித்துறையிலும் இருப்பதாக கூறியுள்ளார்'. மம்தா பேசியது சரியா என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு துறை மீதான விமர்சனத்தை எவ்வாறு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூட சிலருக்குத் தெரிவதில்லை. உதாரணமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ''காவல்துறையின் ஈரல் கெட்டு விட்டது' என்று ஒருமுறை சொன்னார். இதற்காக கருணாநிதி ஒட்டுமொத்த தமிழக காவல்துறையை இழிவுபடுத்தி விட்டார் என்று யாரும் அவர் மீது வழக்குப் போடவில்லை. அப்படி போட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் எதுவுமிருக்க முடியாது. காரணம் காவல்துறையின் ஈரல் கெட்டு விட்டது என்ற விமர்சனத்தின் அர்த்தம் என்பது காவல்துறையில் உள்ள கெட்டவர்களை மட்டுமே குறிக்கும். அதே போன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று விமர்சனம் செய்வார்கள். இதை நேரடி அர்த்தத்தில் பார்த்தால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசாரில் ஒருவர் கூட ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றோ, அல்லது சமூக விரோதிகளிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள் என்றோ அர்த்தம் வரும். அப்படி அர்த்தம் கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் தமிழகத்தில் முழுமையாக நூறு சதவிகிதம் சட்டம் ஒழுங்கு கேட்டுப் போகவில்லை. ஆங்காங்கே சிற்சில சம்பவங்கள் நடப்பதால் இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லப்படுகிறது. அதுபோல் காவல்துறையில் லஞ்சம் மலிந்துவிட்டது என்று யாரேனும் விமர்சித்தால் எல்லா காவலர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று அர்த்தமாகிவிடாது. அவர்களில் சிலர் வாங்குகிறார்கள் என்றே அர்த்தம் கொள்ளவேண்டும். இந்த அடிப்படையில் அமைந்தது தான்  மம்தா பானர்ஜியின் நீதித்துறை பற்றிய விமர்சனமும்.

இப்போது மம்தாவின் விமர்சனத்திற்கு வருவோம். ''நீதித்துறையில் ஊழல் மலிந்துள்ளது. பணத்திற்காக சாதகமான தீர்ப்பு கிடைக்கிறது' என்ற மம்தாவின் கூற்றில் என்ன தவறிருக்க முடியும்? லஞ்சம் வாங்கியதாக நீதிபதிகள் கூட கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடக்கவில்லையா? சுரங்க மோசடியாளருக்கு ஜாமீன் வழங்க கோடிக்கணக்கில் ஒரு நீதிபதி லஞ்சம் வாங்கிய சம்பவம் நடக்கவில்லையா? பாபர் மஸ்ஜித் விசயத்தில் உரிமையாளனுக்கு ஒருபங்கு; அபகரிப்பாளனுக்கு இரண்டு பங்கு என்ற கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கவில்லையா? என்னமோ நீதிமன்றம் சார்ந்தவர்கள் தவறுக்கே அப்பாற்ப்பட்டவர்கள் போல் குதிப்பது ஆச்சர்யமாக உள்ளது. நீதித்துறையில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று மம்தா சொன்னால் மட்டும் குதிப்பவர்கள், காவல்துறை-மருத்துவம்-கல்வித்துறை-தொலைத்தொடர்புத்துறை போன்ற எண்ணற்ற துறைகள் மீது ஊழல் விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது மட்டும் குதிக்காதது என்? அப்படியானால் எந்த துறை பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம் தப்பில்லை; ஆனால் நீதித்துறை மீது மட்டும் விமர்சனம் கூடாது என்றால் நீதித்துறையில் கடுகளவு கூட தவறே நடப்பதில்லையா?  

அடுத்து மம்தாவின் விமர்சனத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், ''மாநிலத்தில் எந்த சம்பவங்கள் நடந்தாலும் நீதிவிசாரணை கமிஷன் உருவாக்கப்படும். ஆனால் நீதி கிடைத்ததா? எல்லாம் பணத்துக்கா விலை பேசப்பட்டுவிட்டது'' என்பதுதான். மம்தாவின் விமர்சனத்தைக் கண்டு பொங்கி எழுபவர்கள், நீதி விசாரணை அமைக்கப்பட்டு தண்டனை வழங்கபப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு விட்டு குதித்தால் அதில் அர்த்தமிருக்கும். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை சம்மந்தமாக உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரணை ஆணையம் அமைத்ததே! அதன் முடிவு என்ன? அந்த ஆணையம் தந்த தகவல் அடிப்படையில் எத்தனை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டார்கள்? இதுபோக மும்பைக் கலவரம் உள்ளிட்ட பல கலவரங்களில் ஒய்வு பெற்ற நீதிபதிகள் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டதே! அந்த அறிக்கை அடிப்படையில் எத்தனை பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டார்கள்? தண்டனை வழங்கவில்லை என்றால் அந்த விசாரணைக் கமிஷன் கண்துடைப்பு என்பது உண்மையாகி விடுகிறதே! மம்தாவின் விமர்சனமும் சரிதான் என்றாகி விடுகிறதே! 

எனவே சுருங்கக் கூறின் மம்தாவின் விமர்சனம் என்பது மக்களின் என்ன ஓட்டமே என்பது ஒருபுறமிருந்தாலும்,எப்படி எல்லாத் துறைகளிலும் நல்லவர்கள்- கெட்டவர்கள் உண்டோ அது போல நீதித்துறையிலும் உண்டு. ஆகவே எல்லாத் துறைகளையும் விமசரிக்கும் உரிமை மக்களுக்கு இருப்பது போல் நீதித்துறையையும் விமர்சிக்கும் உரிமை வழங்கவேண்டும். அப்போதுதான் நீதித்துறை ''நீதி'த்துறையாக இருக்கும் என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக