வியாழன், 9 ஆகஸ்ட், 2012

திருமணச் சட்டங்களும்; குழப்பங்களும்!


ந்தியாவில் திருமண வயதாக ஆணுக்கு 21 வயதும் பெண்ணிற்கு 18 வயதும் என்று சட்டம் உள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு உண்டு. ஆனால் சட்டம் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்தியாவில் நடக்கும் திருமண வைபவங்களில் அதிகாரிகள் சென்று மணமகன்-மணமகள் பிறப்புச் சான்றிதழை சோதித்துப் பார்த்து அந்த திருமணத்தை நடத்த அனுமதியளிப்பதில்லை. 18 வயதிற்குட்பட்ட பெண்ணிற்கு சர்வசாதரணமாக திருமணங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றன. எப்போதாவது திருமணம் தொடர்பாக புகார் வந்தால் மட்டுமிங்கே அதிகாரிகள் ஆஜராகி நடவடிக்கை எடுக்கின்றனர். அதிலும் கூடபெண்ணிற்கு 
18 வயதை பேணவேண்டிய சமுதாய திருமணம் என்றால் அந்த திருமணத்தை தடுப்பதோடு நின்று கொள்ளும் அதிகாரிகள், 15 வயது பூர்த்தியாகி விட்டால் இந்திய சட்டப்படி திருமணம் செய்ய அனுமதியுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்தை தடுப்பதோடு மணமகனை கைது செய்யும் இழிசெயலை செய்து தங்களின் பாரபட்சத்தைக் காட்டுகிறார்கள். இப்படி ஒரு சம்பவம் கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நடந்து அதனால் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தாளிப்பு ஏற்பட்டதை மறந்திருக்க முடியாது. இந்நிலையில் பெண்களின் திருமண வயது குறித்த ஒரு முக்கியமான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் இம்மாதம் முதல் தேதியன்று வழங்கியுள்ளது. 

அந்த தீர்ப்பில், ''16 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண் தனது சுதந்திரமான விருப்பத்துடனும்,  எந்தவித வற்புறுத்தல் இல்லாமலும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தால் அவளது அறிவிப்பு சட்டபூர்வமானது என்று ஏற்றுக் கொண்டு அவரது கணவருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363 (கடத்தல்) அல்லது 376 (பாலியல் வன்முறை) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றங்கள் ரத்து செய்யலாம்' என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் பதினாறு வயதை கடந்த பெண் அவளது பரிபூரண சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணம் சட்டப்பூர்வமானது என்று சொல்லும் நீதிமன்றம், கடந்த காலங்களில் இதுபோன்ற திருமணம் செய்த மணமகன் மீது போடப்பட்ட வழக்கையும் ரத்து செய்யவேண்டும் என்ற அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், பெண்ணின் திருமண  வயது 18 என்ற சட்டம் இந்த தீர்ப்பின் மூலம் அடிபட்டுப் போய்விடுகிறது. ஓடிப்போகும் பெண்களையும் விபச்சாரத்தில் விழுந்து நாசமாகும் பெண்களையும் தடுக்க துப்பில்லாத அதிகாரிகள், முறையாக நடைபெறும் திருமணத்தை வயதைக் காட்டி தடுக்க வந்துவிடுகிறார்கள். இத்தகைய முந்திரிக்கொட்டை அதிகாரிகளின் மூக்கை உடைத்துள்ளது இந்த தீர்ப்பு. 

அடுத்து இந்த தீர்ப்பில் இப்படி ஒரு பாரட்டாத்தக்க அம்சம் இருந்தாலும் இன்னொரு பாரதூரமான அம்சமும் உள்ளது. அதாவது, ''15 வயதிற்குட்பட்ட  பெண்ணுடன் அவளது சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதும், அவளது விருப்பத்தோடு உடலுறவு வைத்துக் கொள்வதும் பாலியல் வன்முறைக்குச் சமமானதே. அந்தப் பெண்ணின்  கணவனை அவனது மதத்தின்  பாதுகாப்புச் சட்டம் பாதுகாப்பு அளிக்க முடியாது.15 வயதிற்குட்பட்ட மனைவியுடன் உடல் உறவு வைத்துக் கொள்வது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த பிரிவுக்கு எந்த விதி விலக்கும் கிடையாது. அந்த சட்டப்பிரிவை  கடுமையாகவும், பாகுபாடின்றியும் நிறைவேற்ற வேண்டும். அந்த மாதிரி   தாம்பத்திய நிலவரத்தில் பெண்ணின் விருப்பம் ஏற்றுக் கொள்ளத்தக்க தல்ல' என்று கூறியுள்ளது நீதிமன்றம். 

15 வயதுகுட்பட்ட பெண் விரும்பியே திருமணம் செய்தாலும், அவள் விருப்பத்துடன் கணவனுடன் இல்லறம் நடத்தினாலும் அதுவும் தண்டனைக்குரிய குற்றம் என்பது தான் வேடிக்கையாக உள்ளது. 15 வயதுகுட்பட்ட  பெண்ணிற்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை என்று நீதிமன்றம் கருதுகிறதா? அல்லது அந்த பிராயத்தில் அப்பெண்ணிற்கு உணர்ச்சிகள் ஏற்படாது என்று கருதுகிறதா? என்று நமக்கு விளங்கவில்லை. அதோடு இந்த தடைக்கு நீதிமன்றம் கூறும் விளக்கம் தான் விசித்திரமாக உள்ளது. 15 வயதுக்குட் பட்ட இளம் பெண் உடலுறவை ஏற்றுக் கொள்வதிலும், கர்ப்பம் தரிப்பதிலும் இடர்ப்பாடுகள் உள்ளன என்றும் 15 வயதிற்குட்பட்ட பெண் திருமணம் ஆனவளா- ஆகாதவளா என்ற வேறுபாடு பார்க்க முடியாது என்கிறது நீதிமன்றம். 

என்றைக்கு அப்பெண் பருவமடைகிறாளோ அப்போதே அவள் தாயாகும் தகுதியை பெறுகிறாளா இல்லையா? அப்படியே அந்த வயதில் குழந்தை பெறுவது அவளின் உடல்நலம் பாதிக்கும் என்றால் அதை சம்மந்தப்பட்ட தம்பதிகள் தீர்மானித்து குழந்தை பெறுவதை தள்ளி வைக்கலாமே தவிர அதை சட்டம் போட்டு தடுப்பது எந்த வகையில் நியாயம்? அப்படியே சொல்வதாக இருந்தாலும் குழந்தை பெறுவது குறித்த வயது வரம்பை நீதிமன்றம் சொல்லலாமேயன்றி அந்த திருமணமும் உறவும் சட்டவிரோதமானது என்று சொல்வது புரியாத புரிதாக உள்ளது.

மேலும், 15 வயதுக்குட்ப்பட்ட பெண் திருமணம் ஆனவளா? ஆகாதவளா? என்று கண்டுபிடிக்க முடியாது என்ற அற்புதமான கருத்தையும் சொல்லியுள்ளது நீதிமன்றம். 16 வயதிற்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் ஆனவளா? இல்லையா? என்பதை அறியமுடியும் போது 15 வயதிற்குட்பட்ட பெண்ணை மட்டும் திருமணம் ஆனவளா இல்லையா என்பதை அறியமுடியாது என்பதும் ஆச்சர்யமாக உள்ளது. இதோடு நின்றாலும் பரவாயில்லை. 15 வயதிற்குட்பட்ட  பெண்ணோடு உடலுறவு கொள்ளும் ஆணுக்கு அவனுடைய மத தனியார் சட்டம் பொருந்தாது என்றும் நீதிமன்றம் சொல்லி, இந்த வயதில் உள்ள பெண்ணை திருமணம் செய்யும் முஸ்லிமாக இருந்தாலும் அவன் மீதும் சட்டம் பாயலாம் என்ற அனுமதியை வழங்கி முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கிறது நீதிமன்றம். இதே நீதிமன்றம் தான் 15 வயது நிரம்பிய ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பியவரை திருமணம் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியதை மறந்து விட்டதா? அல்லது எந்த மதத்தவராக இருந்தாலும் 16 வயது மேற்பட்ட பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு தள்ளுகிறதா? எது எப்படியோ இனி பதினாறு கடந்து விட்டால் பாவைகள் சிறகை விரிக்க தடையேதும் இல்லை என்பது சந்தோஷமான சமாச்சாரம் தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக