புதன், 9 மார்ச், 2011

தேர்தல் தேதியை மாற்றுமா தேர்தல் கமிஷன்?

தோ வருகிறது, அதோ வருகிறது என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டமன்றத்  தேர்தல் வந்தே விட்டது. மத்திய தேர்தல் ஆணையம்  தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் அறிவித்து உள்ளது. மார்ச் 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.  
 
திருமணத் தேதி  குறிக்கப் பட்டுவிட்ட பின்னும்  மணமக்கள் தேர்வு இன்னும் முடிவாகவில்லை. அதாவது தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளும் இன்னும் தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுமையாக  முடிக்கவில்லை. எனவே தான் வழக்கத்திற்கு மாற்றமாக அரசியல்கட்சிகள் தேர்தல் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறைகூறுகின்றன. 
 
மேலும்,  தமிழ்நாடு, புதுச்சேரியில் கடந்த 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. 25-ம்  தேதி முடிகிறது. 7 லட்சத்து 23 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 22-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 11 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதே போல பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5-ந் தேதி தொடங்கி மே 2-ந் தேதி வரை நடக்கிறது. வருகிற 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குவதால் 20-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 11-ந் தேதி வரை தேர்தல் பிரசாரம் தீவிரமாக இருக்கும். வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது, ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்வது என பலவகையிலும் பிரசாரம் நடக்கும். இது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர்கள் கவலைப்படுகின்றனர்.
 
மேலும் ஏப்ரல் 14-ந் தேதி சித்திரை தமிழ்ப்புத்தாண்டு நாள் கொண்டாட்டம் வருகிறது. இது தமிழர்களுக்கு முக்கிய திருநாளாகும். தேர்தல் வேலைகளால் திரு விழாவுக்கும் பாதிப்பு ஏற்படும். மேலும் ஏப்ரல் 13-ந் தேதி தேர்தலுக்காக விடுமுறை விடப்படுகிறது. 14-ந் தேதி அம்பேத்கார் பிறந்த நாள் விடுமுறை, 16-ந் தேதி மகா வீர் ஜெயந்தி விடுமுறை, 17-ந் தேதி ஞாயிறு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை வருகிறது.
 
இப்படி தொடர்ந்து விடுமுறை வருவதால் வேலை பார்ப்பவர்களும், பொது மக்களும் 5 நாட்கள் விடு முறையை எங்காவது சென்று கொண்டாட வேண்டும் என்றே நினைப்பார்கள். 12-ந் தேதி இரவே அந்த இடங்களுக்கு சென்று விடுவார்கள். இதனால் ஓட்டுப் போட ஆள்வராமல் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து விடும். மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டுமானால் அவர்களுக்கு மதிப்பளித்து அவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையில் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் ஓங்கும் என்பது போன்ற கோரிக்கைகளை வைத்து தேர்தலை மே மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கை, அதிமுக மதிமுக சிறுத்தைகள்  உள்ளிட்ட பிரதான கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.
 
இக்கட்சிகளின் கோரிக்கையும் நியாயமான ஒன்றாகவே படுகிறது. ஏனெனில் வாக்குப் பதிவு நடப்பது ஏப்ரல் 13 என்றால், வாக்கு எண்ணிக்கையோ மே 13 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிந்து ஒருமாதம் கழித்து எண்ணுவது பொருத்தமான ஒன்றல்ல. வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதற்கு நூற்றுக்கணக்கான அதிகாரிகளின் உழைப்பும், பல கோடி ரூபாய்களும் செலவிடப்பட வேண்டும். இது போக ஒருமாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை என்பது மக்களின் மனதில் சநதேக அலையையும் ஏற்படுத்தக் கூடும்.
 
அடுத்து வாக்கு எண்ணிக்கைக்கும், அடுத்த சட்டமன்றம் தொடங்குவதற்கும் இருக்கும் இடைவெளி மூன்று நாட்கள் மட்டுமே! இந்த மூன்று நாளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள்  சான்றிதழ் பெறுதல், ஒன்று கூடி தனது தலைவரை தேர்ந்தெடுத்தல், அந்த தலைவர் கவர்னரை சந்தித்தல், அவர் பதவிப் பிரமாணம் செய்தல், மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக்கி 234 உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்வித்தல் இவையாவும் இந்த மூன்று நாளில் சாத்தியமா  என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் நிலவுகிறது. ஒருவேளை தொங்கு சட்டமன்றம் வந்தால் பிற கட்சிகளிடம் பேரம் பேச, ஆதரவு பெற இந்த மூன்று நாளில் முடியுமா என்ற கவலையும் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைக்கிறது. 
 
ஆனால் தேர்தல் கமிஷனோ, அனைத்தையும் அலசி ஆராய்ந்துதான தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டதாக கூறுகிறது. அதே நேரத்தில் மாணவர்களின் தேர்வுக்காலம், விடுமுறைக் காலம், புதிய அரசுக்கு உள்ள குறுகிய அவகாசம் இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி மாற்றியமைக்கப் படுவதே சிறந்தது என்பதே பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது. கவனத்தில் கொள்ளுமா தேர்தல் கமிஷன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக