வியாழன், 10 மார்ச், 2011

கடாபி பதவி விலக வேண்டுமாம்;சொல்கிறார் ஹிலாரி!

மெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்பவர்களில் லிபியா அதிபர் கடாபியும் ஒருவர். இவருக்கு எதிராக காய் நகர்த்த சமயம் பார்த்து காத்திருந்த அமெரிக்காவுக்கு, லிபிய மக்களின் கிளர்ச்சி அருமையான வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம் கடாபிக்கு நெருக்கடியை உண்டாக்க தீர்மானித்த அமெரிக்கா, அந்த நாட்டு அரசாங்கம் மீது பொருளாதார தடையை விதித்து உள்ளதோடு, ராணுவத் தாக்குதலும் நடத்த முன்னேற்பாடுகளும்  செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடாபி மீது விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார் ஒபாமா.
 
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28 அன்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில்  பேசிய அமெரிக்காவின்  செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ''அமைதியாக போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடாபியின் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். கடுமையான ஆயுதங்கள் மூலம் பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று பேசியுள்ளார்.
 
லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி அரசு நடந்து கொள்ளும் முறை தவறென்றே வைத்துக் கொள்வோம். ஆனாலும் கூட இதை சொல்லும் தார்மீக உரிமை அமெரிக்காவிற்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை.ஏனெனில், அமெரிக்காவின் நேசநாட்டுப் படைகள் ஆப்கானிலும், ஈராக்கிலும் நாச நாட்டுப் படைகளாக மாற்றி, அப்பாவிகளை கொன்று குவிக்கிறதே! அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் காஸாவை கருகிய மலராக ஆக்கியபோது இதே அமெரிக்கா கண்மூடி சயனித்ததே! அப்போதெல்லாம் அப்பாவிகள் மீது அமெரிக்காவிற்கு வராத அக்கறை, தெரியாத மனித உரிமைகள் இப்போது மட்டும் பாய்ந்து வருவதேன்?
 
இன்னும் சொல்லப்போனால் மனித உரிமை மீறல்களின் மறு பதிப்பாக விளங்கும் அமெரிக்காவிற்கு, ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் கருத்துரையாற்ற கூட தகுதியுண்டா என்பதே கேள்விக்குரியதாகும்.  எனவே, ஆப்கானிலும், ஈராக்கிலும் மனித உரிமை மீறல்களை செய்துகொண்டு, மறுபுறம் மனித உரிமை பேசித்திரிவது, 'யோக்கியன் வருகிறான்; சொம்பை எடுத்து உள்ளே வை' என்ற பழமொழியை  நினைவுபடுத்துவதாக உள்ளது.
 
குறிப்பு; ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் இருந்து லிபியா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக