வெள்ளி, 25 மார்ச், 2011

பாலஸ்தீனத்தில் மக்கள் போராட்டம்; இது ஆட்சியை மாற்றக் கோரி அல்ல.

பாலஸ்தீனத்தில் ஃபதாஹ் ஆளுகையின் கீழ் உள்ள வெஸ்ட்பேங், ஹமாஸ் ஆளுகையின் கீழ் உள்ள காஸா ஆகிய இரு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இப்பேரணி ஏனைய அரபு நாடுகளைப் போல்
 இது ஆட்சியை மாற்றக் கோரி நடத்தப்பட்டதல்ல. மாறாக பாலஸ்தீனம் இரு ஆட்சியின் கீழ் உள்ளதை ஒருங்கிணைத்து ஒரே தலைமையின் கீழ் ஆட்சி நடைபெற இரு தலைவர்களும் மீண்டும்  பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இப்பேரணி நடத்தப்பட்டது.  
 
பாலஸ்தீனத்தில் கடந்த 2007 வாக்கில் காஸா பகுதியை ஹமாஸ் போராளிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததையடுத்து, அங்கிருந்து வெளியேறிய ஃபதாஹ் அமைப்பு, வெஸ்ட் பேங்கில் மட்டும் தனது ஆட்சியை அமைத்துக் கொண்டது. காஸா பகுதியில் ஹமாஸ் பிரதமராக  இஸ்மாயில் ஹனியா இருந்து வருகிறார். மேலும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் போதெல்லாம் பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை என்ற கருத்தும் உண்டு. இப்படி இரு அரசுகளாக இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்த பாலஸ்தீன மக்கள், ஒன்றினையும் பேச்சுவார்த்தையை இருதரப்பும் தொடங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பியுள்ளனர். 
 
ஃபதாஹ் அமைப்பை பேச்சு வார்த்தைக்கு ஹமாஸ் அழைத்த  போதெல்லாம்  புறந்தள்ளிய மஹ்மூத் அப்பாஸ், மக்களின் எழுச்சியை கண்டு 16 -3 -2011 அன்று காஸா வருகை தந்தார். அவரை ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியா இன்முகத்துடன் வரவேற்றுள்ளார். காஸாவில் ஹமாஸ் ஆட்சி அமைந்தவுடன் வெளியேறிய மஹ்மூத் அப்பாஸ், நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் காஸா வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியேனும் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை  நடத்தி, மக்களின் எதிர்பார்ப்பான ஒன்றிணைந்த ஒரே பாலஸ்தீன அரசு அமைந்தால் மகிழ்ச்சிதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக