வெள்ளி, 25 மார்ச், 2011

பாபர் மசூதி இடிப்பு; நீலிக்கண்ணீர் வடிக்கும் அத்வானி!

பாபர் மஸ்ஜித் இடிப்பின் சூத்ரதாரி அத்வானி, கடந்த 1992ம் ஆண்டில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் குறித்து,இணைய தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது;
பாபர் மசூதி இடிக்கப்பட்டு இரு வாரங்கள் கழித்து பத்திரிகை கட்டுரை ஒன்றில் நான் குறிப்பிட்டு இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். சர்ச்சைக்குரிய அந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நாள், எனது வாழ்நாளில் மிகவும் துயரமான நாள் என்று அதில் கூறி இருந்தேன்.
நான் அப்படி கூறி இருந்ததற்கு கட்சியில் என்னுடன் பணிபுரியும் சிலர், நீங்கள் அப்படி ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விமர்சித்து இருந்தனர்.
அதற்கு பதில் அளித்த நான், அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால், டிசம்பர் 6ந்தேதிய நிகழ்வால் (பாபர் மசூதி இடிப்பு) நமது கட்சியின் நம்பகத்தன்மை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தேன். அன்று நடைபெற்ற இயக்கத்தில் பங்கேற்ற தொண்டர்களின் பொறுமையின்மையை மதிப்பீடு செய்ய தவறிவிட்டதாக, இயக்கத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்புகளின் மீது குற்றம் சாட்டப்படலாம் என்றும் அந்த கட்டுரையில் நான் எழுதி இருந்தேன்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று, ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அப்போதைய உத்தரபிரதேச மாநில அரசு, மிகவும் கவனத்துடன் செயல் திட்டம் ஒன்றை தயாரித்து அதை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தது.
எந்த ஒரு சட்ட விதிகளையோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளையோ மீறாத வகையில், கோவில் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செயல் திட்டத்தை அந்த துயர நிகழ்வால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. இவ்வாறு கூறியுள்ளார் அத்வானி. 
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது துயர நிகழ்வு  என்ற அத்வானியின் கூற்று உளப்பூர்வமானது என்றால்,  அத்தகையை துயர நிகழ்வுக்கு பொறுப்பேற்று, சட்டத்தின் முன் சரணடைந்து தண்டனையை ஏற்றுக் கொள்ள அத்வானி தயாரா? தன்னால் திரட்டப் பட்ட கரசேவர்கள்[?] பொறுமையிழந்து[!] செய்த முட்டாள் தனமான காரியத்திற்காக இடிக்கப்பட்ட பள்ளியை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தர அத்வானி தயாரா?
எந்த ஒரு சட்ட விதிகளையோ அல்லது கோர்ட்டு உத்தரவுகளையோ மீறாத வகையில், கோவில் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செயல் திட்டத்தை அந்த துயர நிகழ்வால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது என்று புலம்பும் அத்வானி, முஸ்லிம்களுக்கு சொந்தமான அந்த இடத்திற்கு உரிமை கோரி, பிரச்சினையை உண்டாக்கியதும், அதை ஊதிப் பெரிதாக்கியதும், அதையொட்டி ரத்த ஆற்றை  ஓட்டியதும்  சட்ட விதிகளை மீறியது தானே! அடுத்து இந்த துயர சம்பவம் மூலம் கட்சிக்கு இருந்த நற்பெயர் கெட்டுவிட்டது என்று அத்வானி கூறுவதுதான் இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவையாகும்.
எனவே பாபர் மஸ்ஜித் குறித்த அத்வானியின் திடீர் நீலிக் கண்ணீருக்கு  காரணம், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தொடர்பாக சமீபத்தில் அவருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட சம்மனும், நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலும் தான்   என்பது சாமானியனும் அறிந்த ஒன்று தானே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக