புதன், 30 மார்ச், 2011

தேர்தல் நேரம்; 'நோ' ஈழம்!

 லங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்த வேளையில், போர் நிறுத்தம் கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 2009-ல் உருவானது. அந்த இயக்கத்தில் அங்கம் வகித்தவர்களில் முதன்மையானவர்கள் பா.ம.க. நிறுவனர் ராமதாசும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவனும் ஆவர். அதுமட்டுமன்றி இலங்கைக்கு போர் விஷயத்தில் இந்தியா உதவி செய்கிறது என பலமுறை காங்கிரஸை வறுத்தெடுத்தவர் திருமாவளவன். இந்த தமிழ் போராளிகள்[?] இருவரும் இப்போது நடைபெற உள்ள தேர்தலில் திமுக-காங் கூட்டணியில் உள்ளனர்.

இந்நிலையில்  இலங்கையில் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, போரை நிறுத்த உலக நாடுகள் செய்த முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியதாகவும், இலங்கைக்கு ஆதரவாக நின்று போர் தொடர்ந்து நடைபெற உதவியதாகவும் வாஷிங்டனுக்கு அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய செய்தியை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் ஆங்கிலப் பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியானது.

விக்கி லீக் வெளியிட்டுள்ள இந்த செய்தி குறித்து  இலங்கையில் போர் தொடர்ந்து நடைபெற இந்தியா உதவியுள்ளதாக செய்தி வந்துள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு இந்த தமிழ் போராளிகள் சொன்னதுதான் 'ஹைலைட்' ''தங்களது கவனம் முழுவதும் இப்போது நடைபெற உள்ள தேர்தலில் உள்ளதாகக் கூறி, இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க இரு தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

தி.மு.க. கூட்டணியில்  காங் இடம்பெற்றிருப்பதால் மத்திய அரசுக்கு எதிராக இவர்கள் வாய் திறக்கவில்லை. இந்நேரம் தேர்தல்  நேரமாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து, காங்கிரஸை ஒரு வழி பன்னியிருப்பார்களே! அதுசரி! தேர்தல்  அறுவடை நேரத்துல, தேய்ந்துபோன தமிழ் ஈழம் பற்றி பேசி என்ன ஆகப்போவுது என நினைத்து விட்டார்களோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக