புதன், 2 மார்ச், 2011

ஷியா-சன்னி மோதலாக உருவெடுத்த பஹ்ரைன் மக்கள் கிளர்ச்சி!

கிப்தை தொடர்ந்து அரபகங்களில் மையம்கொண்டுள்ள மக்கள் கிளர்ச்சியில், லிபியாவுக்கு அடுத்தபடியாக பஹ்ரைனில்தான் போராட்டம் வலுவடைந்துள்ளது. லிபியாவை பொறுத்தவரையில் அங்கு மக்கள் அரசுக்கு எதிர்ப்பு- ஆதரவு என்ற இரு சராராக பிரிந்துள்ளனர். பஹ்ரைனில் அவ்வாறு இரு சாரார் இருந்தாலும், இந்த பிரிவு ஷியா-சன்னி  அடிப்படையில் அமைந்துள்ளதுதான் வேதனைக்குரியதாகும். அரசை எதிர்த்து ஷியா பிரிவினர் களமிறங்கிய நிலையில், அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவினர் களமிறங்கியுள்ளனர்.
 
பஹ்ரைனில் சுமார் 70 சதவிகித ஷியா முஸ்லிம்கள் உள்ளனர். மைனாரிட்டி பிரிவான சன்னி முஸ்லிமை சேர்ந்தவர்கள் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் ஷியா பிரிவினருக்கு அரசியலில் போதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு, அரசுக்கு எதிராக கடந்த வாரம் ராஜினாமா செய்த 17 ஷியா பிரிவு எம்.பிக்கள் சான்றாக உள்ளார்கள்.
 
இதற்கிடையே கடந்த 23 -02 -2011 அன்று தலைநகர்  மனாமாவின் பிரதான சாலையில் குழுமிய பல்லாயிரக்கனக்கான ஷியாப் பிரிவு முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதையொட்டி, சிறையிலிருந்த பிரதான எதிரணித் தலைவர் ஹசன் முஷைமா உள்ளிட்ட அரசியல் கைதிகள விடுவித்து உத்தரவிட்டார் மன்னர் ஹமூத் அல் இசா.
 
இது ஒருபுறமிருக்க அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவு முஸ்லிம்கள் பேரணி நடத்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ''மன்னர் நீடுழி வாழ்க'' ''உங்கள் தோளோடு தோள் நிற்போம்'' ''உங்களுக்காக உதிரம் சிந்துவோம்'' என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
 
எது எப்படியோ ''ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்'' என்பார்கள். அதுபோல முஸ்லிம்கள் இரு கூறாக பிரிந்து நிற்பது ஏகாதிபத்திய வல்லூறுக்கு இனிப்பான விருந்தாக அமையும் என்பதை பஹ்ரைன் முஸ்லிம்கள் மட்டுமல்ல, பல்வேறு நாடுகளில் அரசுக்கெதிராக திரண்டு நிற்கும் அனைத்து நாட்டு முஸ்லிம்களும் மனதில் கொள்வது சிறந்ததாகும். தமது தேவைகளை-உரிமைகளை அரசை நோக்கி வைப்பது தவறல்ல. ஆனால் அது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு வேட்டுவைக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது  என்பதுதான் கவனிக்கத்தக்க முக்கிய அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக